Published : 10 Nov 2018 12:01 PM
Last Updated : 10 Nov 2018 12:01 PM
ஐம்பூத அடிப்படையில் காற்று மூலகத்தின் புற உறுப்பாகிய தோல், குறித்துப் பார்த்தோம். அதே மூலகத்தின் உள் உறுப்பாகிய பெருங்குடல் பற்றி நம் கவனத்துக்கு வராத சில செய்திகளையும் அதைப் பராமரிப்பது குறித்தும் அறிந்துகொள்வோம்.
காற்று மூலகத்தின் முதன்மை உள்ளுறுப்பு நுரையீரல் என்பது பரவலாக அறிந்ததுதான். பெருங்குடல், நுரையீரலின் துணை உறுப்பு. அதன் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குவது. அது தனக்குத்தானே சில ஆற்றல்களைத் தனது தாய் மூலகமான நில உறுப்புகளாகிய மண்ணீரல் மற்றும் வயிற்றிலிருந்து பெற்று இயங்கும். ஆனாலும், இறுதியாகப் பெருங்குடலுக்குச் சம்பளம் போடுற முதலாளி நுரையீரல்தான்.
நுரையீரலுக்கு ஒரு பிரச்சினை என்றால் பெருங்குடல் தடுமாறித்தான் போவார். மூச்சிரைப்பு, தொடர் சளி போன்ற நீடித்த பிரச்சினை உள்ளவர்களுக்கு மலச்சிக்கல் தன்னியல்பாகவே ஏற்பட்டுவிடும். அதேபோல மலச்சிக்கல் தொடர் பிரச்சினையாக இருந்தால் அதுவே நுரையீரல் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்குக் காரணமாகிவிடும். நல்ல உதவியாளர் தொடர்ந்து விடுப்பில் இருந்தால் பாஸ் திண்டாடிப் போவார் இல்லையா, அதுபோல!
பயனற்ற ‘மவுத் வாஷ்!’
பெருங்குடல், நுரையீரல் இரண்டும் முழு ஆற்றலுடன் தொடர்ந்து இயங்குகிற போதுதான் அவற்றின் புற உறுப்பாகிய தோல், கவர்ச்சிகரமான பளபளப்போடு இருக்கும். தோலின் மினுமினுப்புக்குக் காரணம் ஏழு அடுக்குகளுக்குக் கீழே சரியான விகிதத்தில் சேமிக்கப்பட்டிருக்கும் கொழுப்பு என்றாலும் அதைத் தக்கவைக்கும் பொறுப்பு காற்று மூலகத்தின் உள்ளுறுப்புகளையே சார்ந்தது.
தொடர்ந்து மலச்சிக்கல் உள்ள நபரின் தோல், நாளடைவில் துவண்டு, வறண்டு போகும். அதேபோல் மலச்சிக்கல் நீடிக்குமானால் மூக்கில் வெளியேறும் காற்று வெப்பமாக இருக்கும். பேச்சின்போது வாயிலிருந்து கெட்ட நாற்றம் அடிக்கும். எவ்வளவு வெளுப்பான கோட் போட்டவர் பரிந்துரைத்த பேஸ்ட்டைப் போட்டு பல் துலக்கினாலும், வாயில் வெளிப்படும் நாற்றத்தைச் சில நிமிடங்களுக்கு மட்டுமே தள்ளிப் போட முடியும்.
மலச்சிக்கல் கொண்ட வர் ‘மவுத் வாஷ்’ பாட்டிலை அப்படியே ஒரே ‘கல்ப்’பில் முழுங்கினாலும் வாயின் துர்நாற்றத்தைப் போக்கிவிட முடியாது. அவரது விலகிப் போன காதலி மேலும் மேலும் வெகு தொலைவுக்குச் சென்றுகொண்டிருப்பாரே தவிர, கிட்ட நெருங்க மாட்டார். ஆக அவர் பேஸ்ட்டை மாற்றிப் புண்ணியம் இல்லை. கீழ் அடைப்பை நீக்குவதற்கான வழியைத்தான் தேடியாக வேண்டும்.
பெருங்குடல், பலரும் நினைப்பது போல வெறுமே நமது உடலோடு பொருந்தியுள்ள ‘செப்டிக் டேங்க்’ அல்ல. மாறாக செரிமானம் உட்படப் பல்வேறு பணிகளுக்கான முக்கிய மான உறுப்பு. அதன் பிற பணிகள் குறித்துப் பின்னர் பார்க்கலாம். முதலில் பரவலான நம்பிக்கையின்படி மலத் தேக்கம் மற்றும் மல வெளி யேற்றம் குறித்து மட்டும் பார்ப்போம்.
மிகு புரத ‘சிக்கல்’
பொதுவாக, இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் காற்றின் அடர்த்தி குறைவு. எனவே, சுவாசிக்கும் காற்றின் அளவு அதிகம் என்பதால் மலத் தேக்கம் அல்லது மலச் சிக்கல் போன்ற பிரச்சினைகள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் குறைவு. அது தொடர்பான மல வாய்ப் புற்று, மலக் குடல் புற்று போன்ற பெரு நோய்களுக்கும் சாத்தியங்கள் குறைவு.
இதற்கு இன்னொரு முக்கியக் காரணம் நம்முடைய நீர்த்தன்மை வாய்ந்த உணவுப் பழக்கம். இறுகல்தன்மை மிகுந்த சுட்ட, வறுத்த கோழி, இறைச்சி, மீன், பிரைட், ரொட்டி போன்ற உணவுப் பொருட்களையே அதிகமாக உண்ணும் குளிர் மண்டல நாடுகளில் பெருங்குடல் புற்று பரவலாகக் காணப்படுகிறது. குறிப்பாக, பச்சை மீன் உண்ணும் ஜப்பானில், சீனாவின் கிழக்குக் கடற்கரை மாகாணங்களில் பெருங்குடல் புற்று முக்கியமான நோய்.
இந்தப் பச்சை மீன், கருவாடு வகைகள் போன்றவை சிதைக்கப்படாத மிகு புரதம் என்பதால் செரிக்க அதிகக் காலம் எடுக்கும். அவற்றின் பெருஞ்சத்துக்கள் உடனடியாகச் செரிக்கப்பட்டுப் பெரும்பகுதி பெருங்குடலில் இருந்து வெளியேறிவிடும் என்றாலும், நுண்மையான அடர் சத்துக்கள் உடலால் முழுமையாக ஈர்க்கப்படாமல் அங்கே தேங்கிவிடுவதற்கான சாத்தியங்கள் அதிகம்.
இவ்வாறு தொடர்ந்து தேங்கும் போது உடலின் தேவைக்கு மிகுதியான சத்துக் கூறுகள் வெளியேறவும் வாய்ப்பு இல்லாமல், செரிக்கவும் முடியாமல் நாட்பட நாட்பட ரசாயனக் கழிவாகத் திரண்டு உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் புற்றுக் கட்டி யாவதற்கான சாத்தியங்கள் உண்டு.
நோய்களின் ‘மூல’ காரணம்
நம்முடைய உணவுப் பழக்கத்தில் அடர் புரதம் அதிகம் இல்லை என்பதால் பெருங்குடல் புற்று கேள்விப்படாத ஒன்று. ஆனால், சமீப காலங்களில் மாறி வரும் உணவுப் பழக்கத்தாலும், வாழ்க்கை முறையாலும் மலச்சிக்கல், மலவாய்ப் புண், குதம் பிதுங்குதல் போன்றவை பரவலாகி வருகின்றன. இதில் நுட்பமாக, உள் மூலம், வெளி மூலம் என்ற வகைகளும் உண்டு. மூல நோய்கள் அனைத்து நோய்களுக்கும் மூலமாகி, பெரும் உயிர்க் கொல்லியாகவும் ஆகலாம்.
தற்காலத்தில் மூன்று நான்கு மாதக் குழந்தை தொடங்கி நடு வயதைக் கடந்து கொண்டிருக்கும் நிறுவன உயரதிகாரிகள்வரை மலச்சிக்கல், ஆசன வாய்த் தொடர்பான பிரச்சினைகள் மிக வேகமாகப் பரவலாகி வருகின்றன. பணி அழுத்தத்தால் மட்டுமல்ல, குடும்பத் தலைவி பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவதும்கூட மலச் சிக்கலுக்கு ஒரு காரணமாகலாம். இது நம்பக் கடினம் போலத் தோன்றினாலும், அது உண்மையே!
பிறந்த குழந்தைக்கு நீர் புகட்டும் பழக்கம் இல்லை. எனவே, தாய்ப்பாலின் அடர் புரதத்தைச் செரிக்க முடியாமல் குழந்தையின் வயிறு உப்பி காற்றால் நிறைந்துவிடுகிறது. பச்சிளங் குழந்தைக்கு வயிறு உப்பினால் அது சுவாசிக்கும் மூச்சுக் காற்றின் அளவு குறையும். உட்புகும் காற்றின் அளவு குறைந்தால் வெளித்தள்ள வேண்டிய மலத்தின் தன்மையும் மாறுபடும்.
நான்கைந்து மாதக் குழந்தைக்கு இனிமா கொடுத்தும், மாத்திரை கொடுத்தும்தான் மலத்தை வெளியேற்றும் நிலை இருக்குமானால் தான் படும் துயரத்தை அது, பெரியவர்களுக்கு எப்படிப் புரிய வைக்கும்?
முகவாய் நமது கட்டுப்பாட்டில் இருப்பது. ஆசன வாய் உடலின் தன்னியல்பில் இயங்குவது. தன்னியல்பை முறைப்படுத்துதல் குறித்து தொடர்ந்து அறிவோம்.
(தொடரும்)
கட்டுரையாளர், உடல்நல எழுத்தாளர்
தொடர்புக்கு: kavipoppu@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT