Published : 03 Nov 2018 12:00 PM
Last Updated : 03 Nov 2018 12:00 PM
உலக பக்கவாத நோய் நாள் அக். 29
இதய நோய், புற்றுநோய் போன்றவை மட்டுமே உயிரைப் பறிக்கும் நோய்கள் அல்ல. பேச்சு வழக்கில் பக்கவாத நோய் என்றழைக்கப்படும் ‘ஸ்ட்ரோக்’கும் பெரிய நோய்தான். ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுவதும் சுமார் ஒன்றரைக் கோடிப் பேரை இந்த நோய் முடக்கிப் போட்டு, வாழ்க்கையை நிர்மூலமாக்கிவிடுகிறது!
ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் சுமார் 6 லட்சம் பேர் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களில் சுமார் 1.40 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். உலகம் முழுவதும் சுமார் 8 கோடிப் பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 5 கோடிப் பேர் நிரந்தரமாக ஊனமடைந்து வாழ்ந்து வருகிறார்கள். ஒவ்வொரு 6 விநாடிகளுக்கும் புதிதாக பக்கவாத நோயாளி உருவாவதாகச் சொல்கிறது உலகச் சுகாதார நிறுவனம்.
மூளைக்குள் ரத்தம் உறைவது அல்லது ரத்தம் செல்வது தடைபடுவதால் ஏற்படும் நோய்தான், பக்கவாதம். இதை மூளைத் தாக்கு அல்லது மூளை ரத்த நாளச் சேதம் என்றும் அழைக்கிறார்கள். மற்ற நோய்களைப் போல அல்லாமல் முன் அறிகுறிகள் எதையும் வெளிகாட்டாமல் திடீரென வருவதால் ஆங்கிலத்தில் இதை ‘ஸ்ட்ரோக்’ என்கிறார்கள்.
இரண்டு காரணங்கள்
இதுகுறித்து, திருச்சியைச் சேர்ந்த மூளை நரம்பியல் நிபுணர் எம்.ஏ. அலீம் முக்கியமான தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
“பக்கவாத நோய் ஏற்பட இரு காரணங்கள் உள்ளன. ஒன்று, ரத்த ஓட்டம் தடைபடுவது. இரண்டாவது, ரத்தக் கசிவு ஏற்படுவது. ரத்த ஓட்டத் தடையின் மூலம் ஏற்படும் பக்கவாதத்துக்கு, கொழுப்புப் படிவுதான் முக்கியக் காரணம். அதாவது, ரத்த நாளங்களின் உட்சுவர்களில் கொழுப்பு படியும்போது நாளங்கள் கடினத் தன்மையை அடைந்துவிடுகின்றன. இப்படி ரத்த நாளங்கள் கடினமாவதால் அதன் உட்புறப் பாதையின் அளவு குறைகிறது. இதனால் ரத்த ஓட்டத்தில் மாற்றம் ஏற்பட்டு, ரத்தம் உறையலாம். இதனால், பக்கவாதம் ஏற்படலாம்.
இரண்டாவதாக ஏற்படும் பக்கவாதம், மூளையில் ரத்தக் கசிவு ஏற்படுவதால் வருகிறது. இதற்குக் காரணம், உயர் ரத்த அழுத்தம்தான். ரத்த நாளங்களிலிருந்து ரத்தம் கசிந்து வெளியேறி மூளைத் திசுக்களுக்குள் பரவும்போது, திசுக்கள் பாதிக்கப்படும். மூளை நாளங்களில் கசிவு ஏற்பட்ட பகுதிக்கு அருகே உள்ள மூளைத் திசுக்களும் ரத்த ஓட்டத்தை இழந்து பாதிக்கப்படலாம். ஆனால், ரத்தக் கசிவுகளால் ஏற்படும் பக்கவாதத்தைவிட ரத்த ஓட்டத் தடையால் ஏற்படும் பக்கவாதங்களே அதிகம் ஏற்படுகின்றன” என்கிறார் அலீம்.
அறிகுறிகள் என்ன?
முன் அறிகுறிகளை வெளிக்காட்டாமல் இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டாலும், சில அறிகுறிகளை வைத்து எச்சரிக்கையாக இருப்பது மிகவும் நல்லது. காரணமில்லாமல் ஏற்படும் கடும் தலைவலி, திடீரென மங்கும் பார்வை, பார்வையிழப்பு, ஒரு கண்ணில் மட்டும் ஏற்படும் தெளிவற்ற பார்வை போன்ற அறிகுறிகளுடன் காரணமே இல்லாத கிறுகிறுப்பு, நிலையில்லாமல் தள்ளாடுதல், தடுமாறிச் சாய்தல், திடீரென உடலின் ஒரு பகுதி, முகம், கை, கால்களில் தளர்வு இருப்பது போன்ற உணர்வு, தொடு உணர்ச்சிக் குறைவு, பேசுவதில் சிரமம், பேச்சுத் தடுமாற்றம் போன்ற தொந்தரவுகள் இருந்தால், அவர்களுக்குப் பக்கவாதம் வருவதற்கான சாத்தியம் அதிகம். இந்தத் தொந்தரவுகள் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவரைச் சந்திப்பது மிகவும் அவசியம்.
இந்த நோய் ஏற்பட்டால், சிலர் சுயநினைவை இழக்கும் சாத்தியம் உண்டு. அப்படியே உயிர் பிழைத்தாலும் பேச்சு, பார்வை, சிந்திக்கும் திறன் போன்றவை பாதிக்கப்படலாம். முகம் அல்லது உடலின் ஒரு பகுதி செயலிழந்து போகலாம். அல்லது நிரந்தரமாகக் கை, கால் செயல்படாமல் போகவும் சாத்தியங்கள் உள்ளன. இது பாதிக்கப்பட்டவருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் பெரும் நெருக்கடியையும் ஏற்படுத்திவிடும்.
சிகிச்சை என்ன?
பக்கவாதம் ஏற்படும்போது உடனடியாக சிகிச்சை மேற்கொள்வதன் மூலம், மூளைத் திசுக்கள் பாதிப்படைவதைக் குறைத்துவிடலாம். இதனால் ஏற்படும் ஊனத்தையும் குறைக்கலாம். பக்கவாதம் ஏற்பட்டவர்களில் 50 முதல் 70 சதவீதத்தினர் தாங்களாகவே தங்கள் தேவைகளைக் கவனித்துக்கொள்ளும் நிலைக்கு நிச்சயம் திரும்ப முடியும். ஆனால், 15 முதல் 30 சதவீதத்தினர் படுத்த படுக்கையாகி, நிரந்தரமான ஊன நிலைக்குச் சென்றுவிடுகிறார்கள். இவர்களைப் பராமரிப்பதில் மிகுந்த கவனமும் குடும்பத்தினரின் ஆதரவும் மிகவும் தேவை.
குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் ஏற்பட்டிருந்தால், மற்றவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். குடும்பப் பாரம்பரியம் காரணமாகவோ மரபு ரீதியாகவோ இந்த நோய் வருகிறது. வயது அதிகரிக்கும்போது, பக்கவாதத்தால் ஏற்படும் பாதிப்பும் அதிகரித்துவிடுகிறது. குடும்ப வரலாறு, மரபியல் காரணங்களை மாற்ற முடியாது. ஆனால், மருந்துகள், வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வதன் மூலம் சில விஷயங்களைச் சரி செய்துகொள்ள முடியும்.
சில அறிகுறிகள் மூலம் பக்கவாதம் ஏற்படும் சாத்தியமிருப்பதாக அறியப்பட்டவர்கள், மருத்துவரின் ஆலோசனையுடன் மாத்திரை எடுத்துக்கொள்ளலாம். இது வாதம் ஏற்படாமல் ஓரளவு தடுக்கும்.
ரத்த அழுத்தத்தைச் சீராகப் பராமரிப்பது அவசியம். புகைப்பிடிப்பதால் ரத்தக் கசிவு ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. அதனால், புகைப்பிடிப்பதை நிறுத்த வேண்டும். இதய நாள நோய், நீரிழிவு நோய் ஆகியவை உள்ளவர்களுக்குப் பக்கவாதம் ஏற்படும் சாத்தியங்கள் அதிகம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வது நல்லது. அத்துடன் உடலில் கொழுப்புச் சேர்வதைத் தவிர்ப்பது மூளை, இதயம் என இரண்டுக்கும் நலம் பயக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment