Published : 10 Nov 2018 12:01 PM
Last Updated : 10 Nov 2018 12:01 PM

மூலிகையே மருந்து 30: அதிமதுரம் எனும் அருமருந்து

இனிப்பு, புளிப்பு என அறுசுவைகளின் பிரிவுகளைச் சுவை மொட்டுக்கள் நமக்கு அறிவித்திருக்கும். அதையும் தாண்டி அந்தச் சுவைகளுக்குள் இருக்கும் பிரிவுகளை உணர்ந்திருக்கிறீர்களா..? நாவூறச் செய்யும் இனிப்புச் சுவையின் பிரிவை அறிந்துகொள்ள, அதிமதுரத்தைச் சுவைத்துப் பாருங்கள். இனிப்புச் சுவையிலும் வெவ்வேறு பரிமாணங்கள் இருப்பது தெரியவரும்.

இதன் வேரை வாயிலிட்டுச் சவைக்க, வித்தியாசமான இனிப்புச் சுவை தொண்டையினூடே ஆவியாய்க் கீழிறங்குவதை உணர முடியும். அதிமதுரத்தின் இனிப்பு நீண்ட நேரம் நாவிலும் தொண்டையிலும் நிலைத்திருந்து, எச்சில் சுரப்பை அதிகரித்து, நாவறட்சியை அகற்றும்.

தனது பெயரிலிலேயே இனிப்பைக் கொண்டிருக்கும் அதிமதுரம், மானிடர்களுக்காக இயற்கை உயிர்கொடுத்த ‘மதுரப் பெட்டகம்!’ குரலில் சிறிதும் பிசிறு இல்லாமல், மதுரமான ஒலியை வழங்க உதவும் அதிமதுரம், பித்த, கப நோய்களுக்கான கசப்பில்லா இன்சுவை மருந்து! சீன மருத்துவத்தில் ‘முதன்மை மருந்து’ எனும் அந்தஸ்து அதிமதுரத்துக்கு உண்டு!

பெயர்க் காரணம்: அதிங்கம், மதுகம், அட்டி ஆகியவை இதன் வேறுபெயர்கள். இனிப்புச் சுவை அதிகம் இருப்பதால், ‘அதிமதுரம்’, ‘மது’கம் போன்ற பெயர்களும் உண்டு இதற்கு! ‘இனிப்பு வேர்’ என்பதைக் குறிக்கும் விதமாக, ‘லிகோரைஸ்’ (Liquorice) எனும் பெயர் இதன் வேருக்கு உண்டு.

உணவாக: அதிமதுரத்தை நீரிலிட்டுக் கொதிக்கவைத்து, கொஞ்சம் பனங்கற்கண்டு, மிளகுத் தூள் சேர்த்து காலையில் பானமாகப் பருக, உங்கள் குரலுக்குக் குயிலும் அடிமையாகும். நன்னாரியைத் தண்ணீரில் ஊறவைத்து சர்பத் தயாரிக்கும்போது, அதிமதுர வேரையும் சேர்த்துக்கொள்ள பலன்கள் இரட்டிப்பாகும். இதன் வேர்க்குச்சிகள் இனிப்பு மிட்டாயாக வெளிநாடுகளில் பிரபலமடையத் தொடங்கியிருக்கின்றன.

சர்க்கரை நோயாளர்கள், செயற்கை இனிப்பூட்டிகளுக்குப் பதிலாக, இயற்கை இனிப்பூட்டியான அதிமதுரத்தைப் பயன்படுத்தலாம். சைனஸ் பிரச்சனை, ஒற்றைத் தலைவலி, தலைபாரம் ஏற்படும்போது சோம்பு கொதிக்க வைத்த நீரில், அதிமதுரத் தூளைக் கலந்து பருகலாம். இனிப்புச் சுவையுடன் உடலை வளமையாக்கும் தன்மை இருப்பதால், இனிப்பு வகைகளில் சர்க்கரைக்கு மாற்றாக அதிமதுரத்தைச் சிறிதளவு முயலலாம்.

மருந்தாக: அதிமதுரத்தின் சாரங்கள் வயிற்று மென்படலத்தின் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, வயிற்றுப் புண்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதாக உறுதிப்படுத்துகிறது ஆய்வு. இரைப்பு நோயாளர்களில் சுருங்கியிருக்கும் மூச்சுக் குழாய்த் தசைகளை விரிவடையச் செய்யும் செய்கை இதன் வேதிப்பொருளுக்கு இருக்கிறது.

செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, சில வைரஸ்களின் வீரியத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் அதிமதுரத்துக்கு இருப்பதாக ஆராய்ச்சி முன்மொழிகிறது. வலிப்பு நோய்க்கான மருந்தாக இதைப் பயன்படுத்தும் ஆய்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

வீட்டு மருந்தாக: அதிமதுரம், அக்கரகாரம், சுக்கு, மிளகு, திப்பிலி, இலவங்கம் ஆகியவற்றைப் பொடித்து நாட்டுச் சர்க்கரை, தேன்  கலந்து செய்யப்படும் ‘அதிமதுர ரசாயனம்’ பருவமழைக் காலத்துக்கே உரித்தான மருந்து. கீச்…கீச்… எனக் குரலுடைந்து பேசுபவர்களுக்கும் கம்பீரக் குரலை விரைவில் வழங்கும்.

புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்கள், அந்த உணர்வை மறக்கடிக்க, சிறிது அதிமதுரத் துண்டை மெல்லலாம். வறட்டு இருமல் இடைவிடாமல் ஒலி எழுப்பிக் கொண்டிருக்கும்போது, அதிமதுரம், மிளகு, கடுக்காய்த் தோல் ஆகியவற்றைப் பொடி செய்து, சிறிதளவு எடுத்து வாயில் அடக்கிக்கொள்ள வறட்சி காணாமல் போகும்.

அதிமதுரப் பால், அதிமதுரச் சூரணம் ஆகியவை சித்த மருத்துவத்தில் முக்கியமான மருந்துகள். கசப்புச் சுவைமிக்கக் கூட்டு மருந்துகளில் இனிப்பைக் கொடுக்கவும், சுவை தத்துவ அடிப்படையிலும், அதிமதுரம் சேர்க்கப்படுகிறது. கொதிக்கும் நீரில் இதன் வேரை ஐந்து நிமிடம் ஊறவைத்து, அதில் எலுமிச்சைச் சாறு அல்லது தேன் கலந்து சுவைமிக்க பானத்தைப் பருகலாம். ‘கண்ணோய் உன்மாதம் விக்கல்வலி வெண்குட்டம்…’ எனும் அதிமதுரத்துக்குச் சொந்தமான பாடல், மன நோய்களுக்கும் இதைப் பயன்படுத்தலாம் எனும் குறிப்பை வழங்குகிறது. வேர் ஊறிய நீரில் வாய்க்கொப்பளிக்க, வாய்ப்புண் மறையும்.

குளிர்ச்சித்தன்மை கொண்ட அதிமதுர வேரை தைலங்களில் சேர்க்க, கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, இளநரையையும் கட்டுப்படுத்தும் என்பதை ‘அதிமதுரம் அவுரி ஆலம்விழுது அறுகு அடர்ந்த முடி ஆக்கும்’ எனும் மூலிகைக் குறள் தெரிவிக்கிறது. இதன் இலையை அரைத்து உடலில் பூசிக்குளிக்க வியர்வை நாற்றம் மறையும். சுளுக்கு ஏற்பட்ட இடங்களில், விளக்கெண்ணெய்யைத் தடவி, அதன் மீது இதன் இலையை வைக்க விறுவிறுப்புத் தன்மை ஏற்பட்டு தசை இளகுவதை உணர முடியும்.

அதிமதுரம், அருமருந்து!

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x