Published : 03 Nov 2018 11:59 AM
Last Updated : 03 Nov 2018 11:59 AM
உடலில் தேங்கும் கழிவுகளே நோய் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுறுத்திக்கொள்வோம். காற்றுக் கழிவின் அளவு மிகும்போது, அதுவே நீர் வடிவத்துக்கு மாறும். (காற்றின் அடர் வடிவமே நீர் என்ற இயற்பியல் நாம் அறிந்ததுதானே!) இப்போதைக்குக் கழிவை நீக்கும் குளியல் முறைகளை மட்டும் பார்க்கலாம்.
கடந்த இதழில் வாழையிலைக் குளியல் முறையைப் பார்த்தோம். வாழையிலைக் குளியல், உடலில் தேங்கியுள்ள நீரைச் சட்டென்று பெருமளவு வெளியேற்றுவதால் இக்குளியலுக்குப் பின்னர் உடலின் எடை ஓரிரு கிலோ குறைவதற்கு வாய்ப்பு உண்டு.
பெருமளவு ஆரோக்கியமாக உள்ள உடலுக்கு இந்த எடைக் குறைவு, காற்றில் மிதப்பதைப் போன்ற சுக உணர்வைத் தரும். ஆனால், பலவீனமானவர்களுக்குத் தளர்ச்சியாகவும், உடல் சோர்வையும் தரும். ஆனாலும், அவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இந்தப் பின்னடைவு ஓரிரு நாட்களில் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும்.
தூக்கத்தால் மீட்கப்படும் ஆற்றல்
இழந்த ஆற்றலை உடனடியாக மீட்டெடுக்க உடல் மேற்கொள்ளும் உத்தி, ஓய்வு அல்லது தூக்கம்தான். வாழையிலைக் குளியலை முடித்துவிட்டு உடலின் தன்மைக்கு ஏற்ப இளநீர், பழச்சாறு, மோர் போன்ற குளிர்ந்த பானம் அல்லது இறைச்சி ரசம் (சூப்பு) அல்லது காய்கறி, கீரை ரச வகை போன்ற சூடான பானம் என இலகுவான உணவை எடுத்துக்கொண்டு ஒரு ஆழ்ந்த தூக்கம் தூங்கி எழுந்தால், இழந்தது போலத் தோன்றிய ஆற்றல், பெருமளவு உடனடியாக மீட்கப்பட்டுவிடும்.
வாழையிலைக் குளியலில் நீர் வெளியாவதால், உள் அழுத்தங்கள் குறைந்து சுவாசம் எளிதாகும். எனவே, உள்ளிழுக்கப்படும் மூச்சுக் காற்றின் அளவு அதிகரிக்கும். அதன் காரணமாக உடலின் ஆற்றல் அதிகரிக்கும். அதேபோல் தோலின் மேற்பரப்பில் உள்ள வியர்வைத் துளைகளின் அடைப்புகள் நீங்குவதால் தோலின் புறச்சூழலை எதிர்கொள்ளும் திறன் மேம்படும்.
குறிப்பாகத் தோலில் அரிப்பு, தோல் தடித்தல் போன்ற பிரச்சினை உள்ளவர்களுக்கும், ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்சினை உள்ளவர்களுக்கும், முகத்தில், தலையில் நீர் கோக்கும் சைனுசைடிஸ் பிரச்சினை உள்ளவர்களுக்கும் வாழையிலைக் குளியல் குறிப்பிடத்தக்க அளவுக்கு நிவாரணம் கொடுக்கும்.
சோர்வைத் தராத மண் குளியல்
ஒட்டுமொத்தமாகவே உடலில் நீரின் அளவு அதிகரித்திருப்பதாக உணர்கிறவர்களும் காலைத் தொங்கப்போடும்போது பாதங்கள் வீக்கம் அடைகிறவர்களும் எடுக்கத் தகுந்த மற்றொன்று மண் குளியல்.
கையால் பறித்தெடுக்கும் தன்மையுள்ள மணற்பாங்கான பகுதியில் மூன்றடி அகலம், ஆறடி நீளம், ஓரடி ஆழம் என்ற அளவில் மணலைக் குழி பறித்துக் கரை கட்டிக்கொள்ள வேண்டும். இந்தக் குழியில் வசதியாக நீட்டிப் படுத்துக்கொண்டு உடலுக்கு மேல் அரையடி கனத்துக்கு மணலைச் சீராகப் பரப்பிவிட வேண்டும். மூக்கு, கண், காது பகுதிகளில் மூடக் கூடாது. தலைப் பகுதியைத் துணியால் கட்டிக் கொள்ளலாம்.
வயிற்றைக் காலியாக வைத்துக்கொண்டு இளம் வெயிலடிக்கும் காலை ஏழு மணி முதல் எட்டு மணி வரையிலும் அல்லது மாலை நாலரை மணி முதல் ஐந்தரை மணி வரையிலும் அரை மணி நேரத்துக்கு இக்குளியலை மேற்கொள்ளலாம். மணல் போர்த்தியதும் ஐந்து நிமிடத்துக்கு மூச்சு முட்டுவது போன்ற உணர்வு எழக்கூடும். தொடக்க நிலையைக் கடந்துவிட்டால் பிறகு எந்த வகையிலும் சிரமம் இராது.
மண் குளியலின்போது புற அழுத்தம், வெப்பத்தால் உள்ளிருக்கும் நீர், மூச்சுக் காற்றின் வழியாக ஆவி வடிவில் வெளியேற்றப்படும். வாழையிலைக் குளியல் அளவுக்கு அதிக நீர் வெளியாகாது என்பதால் மண் குளியலுக்குப் பின் உடல் சோர்வு போன்ற அசவுகரியங்கள் தோன்றுவதில்லை.
மணற்பாங்கான ஆற்றுப் புறம் இல்லையென்றால் கடற்கரையிலும் இக்குளியலை மேற்கொள்ளலாம். கெட்டித் தன்மையற்ற மண்ணும் ஏற்றதே.
மகாத்மாவின் மண்பட்டிக் குளியல்
மண் குளியலில் மற்றொரு வகை, மண்பட்டிக் குளியல். நன்றாகக் கரைப்பதற்கு ஏற்ற மாவுத்தன்மையுள்ள கரு அல்லது செம்மண்ணை எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்குக் கட்டிட அடிக்காலுக்குத் தோண்டிப் போட்ட மண் பொருத்தமானது. ஏரி வண்டல் அல்லது புற்று மண்ணையும் பயன்படுத்தலாம்.
மண்ணைத் தோசை மாவுப் பதத்துக்கு நீரில் கரைத்துக்கொள்ள வேண்டும். உடல் முழுதும் தளர, நல்லெண்ணெய் விட்டுச் சிறிது நேரம் ஊறவிட்டு, அதன் மீது மண் கரைசலைக் கண், காது, மூக்கு தவிர்த்து உடலெங்கும் சீராகப் பூசிவிட்டுச் சுமார் இருபது நிமிடம் ஊறவிட்டால் கரைசல் இறுகும். நன்றாக இறுகிய பின் தாராளமாக நீர்விட்டுக் குளித்துக்கொள்ள வேண்டும். குளித்து முடித்த பின் புவி வெப்பமே குறைந்துவிட்டது போன்று அப்படி ஒரு குளிர்ச்சி உடலெங்கும் பரவி ஓரிரு நாட்களுக்கு நீடிக்கும்.
முன்னர் சொன்ன வாழையிலை மற்றும் மண் குளியலைவிட இக்குளியல் அனைவருக்கும் நடைமுறைச் சாத்தியமானது. எல்லா வகையான குளியல்களையும் முயன்று பார்க்கும் நான், அடிக்கடி எடுப்பது இந்த மண்பட்டிக் குளியல்தான்.
குழந்தைகளுக்குச் சாதாரண சளிக் காய்ச்சல் இருக்கும்போது வயிற்றுப் பகுதியில் மெல்லிசான துணியைப் பரப்பி மண்பட்டி போட்டு இருபது நிமிடம் கழித்து எடுத்தால் அவர்களின் உடல் சூடு உடனே தணிவதை உணர முடியும். மகாத்மா காந்தி தன் மகனின் காய்ச்சலுக்கு மண்பட்டிக் குளியல் போட்டிருக்கிறார்.
முறுக்கேற்றும் முதுகுத்தண்டுக் குளியல்
மேற்சொன்ன குளியல் முறைகள் அனைத்தும் தோலுக்குப் பதத்தன்மையையும் அதன் வாயிலாக உள்ளுறுப்புகளுக்கு ஆற்றலையும் வழங்குபவை. அடுத்து நாம் பார்க்கவிருப்பது முதுகுத் தண்டுக் குளியல்.
இது மிகவும் எளிதானது. இதற்கு நமக்கு வேண்டியது, முதுகுத் தண்டு முழுமையாகவும், வயிற்றுப் பகுதியும் மூழ்கும் படியாக நீரைக் கொள்ளும் தொட்டி (டப்). அதில் நாம் குளிக்கும் சாதாரணத் தண்ணீர் அல்லது இதமான வெந்நீரை நிரப்பி தலை, முகப் பாகங்கள் தவிர்த்து மற்ற அனைத்துப் பாகங்களும் நீரில் மூழ்கி இருக்கும்படி வசதியாகப் படுத்துக்கொள்ள வேண்டும். பெரிய தொட்டி இல்லாத நிலையில் வயிறு, ஆசன வாய் வரை நீரில் மூழ்கும் அளவு இருந்தாலும் போதுமானது.
இந்த நிலையில் அரை மணி நேரம் அசையாமல் படுத்திருந்தால் உடலில் மிகுந்துள்ள வெப்பம் இளகி, கழிவுகள் சளியாக வெளியேறும். ஒரு படத்தில் வடிவேலுவைத் துவைத்துக் காயப் போடுவார்களே அப்படி முறுக்கிப் பிழிந்தெடுத்ததுபோல உடல் சிக்கென்று இருக்கும்.
இந்தக் குளியல் வகைகள் அனைத்தும் நீடித்த நோய் இல்லாதவர்கள் அவ்வப்போது மேற்கொண்டு வந்தால் உடலில் நோய் தோன்றுவதற்கான வாய்ப்பு உருவாகாது. நீடித்த நோய் கண்டவர்களுக்கு இயற்கை சிகிச்சையில் சுழற்சி முறையில் ஓரிரு வாரங்களுக்கு மேற்படி குளியல் அளித்து குணப்படுத்துகிறார்கள். எனவே, நீடித்த நோயுள்ளவர்கள் தாமாக மேற்கொள்ளாமல், அனுபவம் பெற்றவரின் உதவியுடன் இக்குளியல் முறைகளை முயன்று பார்க்கலாம்.
தோலானது வெறுமே உடலைப் போர்த்தியுள்ள உறையல்ல என்பதை நாம் உணர்ந்திருப்போம். அடுத்து நம்முடைய கவனத்துக்கு வராத உடலின் கழிவுத் தொட்டியாகக் கருதப்படும் ஐந்தடி நீளமுள்ள உறுப்பு குறித்தும் அதன் முக்கியத்துவம் மற்றும் பராமரிப்பு குறித்தும் பார்ப்போம்.
(தொடரும்)
கட்டுரையாளர், உடல்நல எழுத்தாளர்
தொடர்புக்கு: kavipoppu@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT