Published : 20 Oct 2018 12:00 PM
Last Updated : 20 Oct 2018 12:00 PM
‘கருங்கால் நொச்சிப் பசுந்தழை சூடி இரும்புனம் ஏர்க்கடி கொண்டார்…’ இது நொச்சி பற்றி ‘கார் நாற்பதில்’ கண்ணங்கூத்தனாரின் பதிவு. ஏர் பூட்டும் முதல் உழவின்போது, நொச்சி இலைகளை மாலையாகத் தொடுத்து கழுத்தில் சூடிக்கொள்வார்கள் எனும் பொருளைத் தெரிவிக்கிறது அந்தப் பதிவு. போரின்போது எதிரியின் முற்றுகையைத் தகர்த்தெறிந்த பிறகு, வீரர்கள் சூடிக்கொண்டது நொச்சி மலரைத்தான்!
அதிகரித்த கபத்தைச் செதுக்குவதற்கான கூர்மையான கருவி நொச்சி. ஆவி (வேது) பிடிக்க, ஒற்றடமிட, பற்றுப் போட, உள்மருந்தாக எனப் பல்வேறு பரிமாணங்களில் நொச்சியைப் பயன்படுத்தலாம். சித்த மருத்துவத் தத்துவப் புரிதலின்படி, கபம் மற்றும் வாதத்தின் அத்துமீறலைத் தட்டிக்கேட்கும் தாவரம், நொச்சி.
பெயர்க் காரணம்: நித்தில், நிர்க்குண்டி, நெர்க்குண்டி, இந்திர சூரியம் போன்ற வேறு பெயர்கள் நொச்சிக்கு இருக்கின்றன. இதில் வெண்ணொச்சி, நீலநொச்சி, கருநொச்சி, நீர்நொச்சி, மயிலடி நொச்சி ஆகிய வகைகள் உள்ளன. ‘சிந்து’ என்றால் மலர் என்ற அர்த்தத்தில், இதன் மலரை மையப்படுத்தி ‘சிந்துவாரம்’ எனும் பெயரும் உள்ளது. சிந்‘துவாரம்’ என்றால், ‘வாத பித்த கபத்தை’ உடலிலிருந்து வெளியேற்றாமல், சம அளவில் நிலை நிறுத்தும் பொருள் என்று அகராதி பதிவிடுகிறது.
அடையாளம்: சிறுமர வகையைச் சார்ந்தது. மூன்று அல்லது ஐந்து கூட்டிலைகளைக் கொண்டிருக்கும். இலையின் அமைப்பை மயிலின் காலடியோடு பழங்காலத்தில் ஒப்புமைப்படுத்தி இருக்கிறார்கள். ஈட்டி வடிவ இலைகளின் மேல்புறம் பசுமையாகவும், அடிப்பகுதி சற்று வெளுத்தும் காணப்படும். ‘நீலமணியின் நிறத்தில் நொச்சியின் மலர்’ என்ற குறிப்பின் மூலம், மலரின் நிறத்தைத் தெரிந்துகொள்ளலாம்.
‘வைடெக்ஸ் நெகுண்டோ’ (Vitex negundo) என்பது இதன் தாவரவியல் பெயர். ‘வெர்பினேசியே’ (Verbenaceae) குடும்பத்தைச் சார்ந்தது. லுடியோலின் (Luteolin), வைடெக்ஸிகார்பின் (Vitexicarpin), யுர்சோலிக் அமிலம் (Ursolic acid), பீட்டா சைடோஸ்டீரால் (Beta – sitosterol), நிஷிடைன் (Nishindine), இரிடாய்ட் கிளைக்கோசைடு (Iridoid glycoside) ஆகிய தாவர வேதிப்பொருட்கள் காணப்படுகின்றன.
உணவாக: முறையற்ற மாதவிடாயைச் சீராக்க, நொச்சி இலைகள், மிளகு, கீழாநெல்லி சேர்ந்த மருத்துவ நுணுக்கம் சித்த மருத்துவத்தில் கையாளப்படுகிறது. ஹார்மோன் அளவில் சில மாற்றங்களை ஏற்படுத்தி மாதவிடாயை முறைப்படுத்தும். இதன் இலைகளை நீரிலிட்டு கொதிக்க வைத்துக் குடிக்க, இருமலின் தீவிரம் குறையும். குளிர்சுரம் ஏற்படும்போது நொச்சி இலைகளோடு மிளகுக் கூட்டி குடிநீரிட்டு உட்கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தத்துக்கு (மாந்தம் என்பது உடல் முதல் உள பாதிப்புகளுக்கான அடிப்படை) பொடுதலை, உத்தாமணி, நொச்சி, நுணா போன்ற மூலிகைகளின் கூட்டு மருந்து அற்புதமான பலன்களைக் கொடுக்கும். இவற்றை வதக்கிச் சாறு பிழிந்து, சிறிதளவு குழந்தைகளுக்குக் கொடுக்கும் வழக்கத்தைக் கிராமங்களில் இன்றும் காணலாம். மழையின் தீவிரம் அதிகரிக்கும்போது, மூச்சிரைப்பும் அதிகரிக்கிறதா? கவலை வேண்டாம். நொச்சி, மிளகு, பூண்டு, திப்பிலி, கிராம்பு… அரைத்து சிறிதளவாய் வாயில் அடக்கிக்கொள்ள சிரமம் மறையும்.
மருந்தாக: கொசுக்கள், பூச்சிகளை விரட்ட இதன் இலைகளைப் பயன்படுத்தும் நோக்கில் பல்வேறு ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ‘ப்ரோஸ்டாகிலான்டின்’ (Prostaglandin inhibiton) உற்பத்தியைத் தடுப்பதன் மூலம், தன்னுடைய வீக்கமுறுக்கி, வலி நிவாரணிச் செய்கையை நிலைநிறுத்துகிறது. இதிலிருக்கும் பாலிஃபீனால்கள், எதிர்-ஆக்ஸிகரனி செயல்பாட்டை வெளிப்படுத்துகின்றன. பாம்பின் விஷத்தை முறிக்கும் தன்மை இதன் வேருக்கு இருப்பதாக ஆய்வு உறுதிப்படுத்துகிறது.
வீட்டு மருந்தாக: இதன் இலைகளை நீரில் போட்டு வெதுவெதுப்பாகக் காய்ச்சிக் குளிக்க, களைப்பினால் உண்டாகும் உடல் வலி மறையும். தலை, பாரமாக இருக்கும்போது, நொச்சியிலைகளின் துணையோடு வேதுபிடிக்க, ஆவியோடு ஆவியாகப் பாரம் இலகுவாவதை உணர முடியும். உடலில் தோன்றும் வலி, சோர்வை வழியனுப்பி வைக்க, விளக்கெண்ணெயில் இதன் இலைகளை லேசாக வதக்கிவிட்டு, ஒரு துணியில் முடிந்து ஒற்றடமிடலாம். நொச்சி இலைகளைத் தலையணைக்குள் புதைத்துப் பயன்படுத்த, தலைவலி குறைந்து ஆழ்ந்த உறக்கம் உண்டாகும்.
இலைகளோடு நல்லெண்ணெய் சேர்த்துத் தயாரிக்கப்படும் நொச்சித் தைலத்தை, தலைக்குத் தேய்த்துக் குளிக்க பீனிச நோய்கள், ஒற்றைத் தலைவலி ஆகியவை மறையும். குழந்தை ஈன்ற தாய்மார்களைக் குளிப்பாட்டும் நீரில், நொச்சி இலைகளைச் சேர்க்க, சோர்வை நீக்கி, குறைந்திருக்கும் நோய் எதிர்ப்பு அதிகரிக்கும். கொசுக்கள் ஆற்றலை அட்டகாசம் செய்யும்போது, உலர்ந்த நொச்சி இலைகளையும் வேப்பிலைகளையும் சேர்த்துப் புகை போடலாம். மண்ணீரலில் உண்டாகும் நோய்களுக்கு, நொச்சியைப் பயன்படுத்தலாம் என்கிறது சித்த மருத்துவம்.
நம் நலம் காக்க வந்த நொச்சியை, நாளும் உச்சி முகரலாம்..!
கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment