Published : 06 Oct 2018 11:42 AM
Last Updated : 06 Oct 2018 11:42 AM
குளிக்கும்போது சோப்புப் போட்டுக்கொள்வது ஆகப் பெரிய குற்றமல்ல. சோப்பின் ரசாயனக் காரம், அது ஏற்படுத்தும் பாதிப்பிலிருந்து தோல் வெகு விரைவிலேயே மீண்டுவிடும். அதனால்தான் உலகம் முழுவதும் நூறாண்டுக்கும் மேலாக சோப்பு பயன்பாட்டில் உள்ளது. ஆனால், நாம் உள்ளும் புறமும் பயன்படுத்தும் ரசாயனத்தின் அளவு, உடலைச் சிதைக்கக் கூடியதாக உயர்ந்துகொண்டே போகிறது.
தோலின் மீது மட்டுமே பல்வேறு விதமான பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறோம். உடலுக்கு ஒவ்வாத எத்தனையோ விதமான தாக்கத்தை, தோல் ஏற்க வேண்டியுள்ளது. இப்போதைக்குக் குளியலை மட்டும் பார்க்கலாம்.
தமிழ் போலவே ஒலிக்கும் சோப்பு என்ற ஆங்கிலச் சொல்லுக்கு மாற்றாக ‘வழலை’ என்கிறார்கள் தனித் தமிழ் ஆர்வலர்கள். அது ‘வழவழ’ என்று இருப்பதால் இட்ட காரணப் பெயர். இங்கு அறிமுகமானபோதே, அதன் இடுபொருளை முதன்மைப் பொருளாகக் கொண்டு ‘சவர்க்காரம்’ என எளிய தமிழ்ப் பெயரிட்டு, பேச்சு வழக்கில் ‘சவுக்காரம்’ என்றனர் நம் முன்னோர்.
சோப்புக்குச் சுவை உண்டு
நுண்ணுணர்வு கொண்ட தோலின் மீது தண்ணீரை ஊற்றிய சில நிமிடங்களில் தோல் செல்கள், சவ்வூடுப் பரவலின் மூலம், நீரை உள்நோக்கி ஈர்க்கத் தொடங்குகின்றன. அடுத்து, நாம் சோப்புப் போட்டுத் தேய்க்கத் தொடங்கியதும் அதையும் உள்நோக்கி ஈர்க்கிறது. இப்போது உடலெங்கும் பரவிய சோப்பின் சவர்ச்சுவை நாவிலும் வெளிப்படும்.
‘என்னாது சோப்பின் சுவை நாவில் தென்படுமா?’ ஆம். குளியலின்போது நாவில் தென்படும் சோப்பின் சுவைக்குக் காரணம், மனம் விட்டு, வாய் திறந்து பாத்ரூமில் பாடும் போது உட்புகுந்ததல்ல அது. மாறாகத் தோலின் வழியாக செல் இயக்கத்தின் மூலம் உட்புகுந்த சோப்பின் காரத் தன்மையே நாக்கில் வெளிப்படுகிறது.
நாம் சோப்பைத் தோல் முழுவதும்போட வேண்டியதுகூட இல்லை. உடலின் உயிர்ப்புணர்வு துல்லியமாக இருக்குமானால் சோப்பைக் கைகளில் தேய்த்ததும் ஸ்விட்ச் போட்டால் லைட் எரியும் வேகத்தில் நாவின் சுவை மொட்டுக்களைத் தாக்குவதை உணர முடியும். மெய்யாகவே அத்தனை நுட்பமானது நமது தோலின் செல்களும், உடலின் பிற செல்களும்!
புறச்சூழலின் வெப்பம் அல்லது குளிர்ச்சியை நமது தோல் பெருமளவு தடுத்து நிறுத்த முடியும். ஆனால், தோலின் மீது தொடர்புறுகிற நீர்த்த வடிவிலான எதையும் கடத்துவதைத் தவிர தோலுக்கு வேறு வழியில்லை.
சோப்பு, தோலுக்குப் பதத் தன்மையைத் தரும் எண்ணெய் யையும், அழுக்கைச் சுரண்டி எடுக்கக் கூடிய காரத் தன்மை உடைய சோடாவையும் மூலப் பொருளாகக் கொண்டுள்ளது.
முப்பது விதமான ரசாயனம்
நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் சோப்பில் எண்ணெய், சோடியம் ஹைடிராக்சைடு எனும் காஸ்டிக் சோடா ஆகிய இரண்டு அடிப்படையான பொருட்களோடு எடையைக் கூட்ட, மாவாக அரைக்கப்பட்ட வெள்ளைப் பாறையும், எண்ணெய்யின் அளவைக் குறைத்து வழவழப்பை அதிகரிக்க, பெட்ரோலியத்தின் உப கூறாகிய மெழுகு, வாசனைக்கு ஒரு ரசாயனம், நிறமிக்கு ஒரு ரசாயனம் என அடுக்கடுக்காகச் சுமார் முப்பது விதமான ரசாயனக் கூறுகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
இதில் சோடியம் லாரில் (Sodium lauryl) போன்றவை நம்முடைய தோலில் வெளிப்படும் இறந்த செல்களை நீக்குவதற்குப் பதிலாக, உயிருள்ள செல்களையும் அழித்துவிடுகின்றன.
‘என்னய்யா இப்படிப் பயமுறுத்துறீங்க’ என்கிறீர்களா? ‘எந்தப் புற்றில் என்ன பாம்பு இருக்குமோ, யார் கண்டா?’ என்பது சொல் வழக்கு. அதுபோல எந்த சோப்பில் என்ன புற்றுநோய்க் கூறு உள்ளது என்று பீதியூட்டுவதல்ல நம் நோக்கம். நன்மை செய்யும் என்று நினைத்து நாம் பாவிக்கிற பலவும், நன்மை செய்வதில்லை என்று எச்சரிக்கவே கூறுகிறோம்.
அத்துடன் எளிய மாற்று வழியை நோக்கிப் பயணிப்பதும் நம்முடைய நோக்கம் ஆகும். இப்போதைக்கு வாரத்தில் ஓரிரு நாட்களேனும் சோப்புக்குப் பதிலாகக் கடலை மாவைத் தேய்த்துக் குளியுங்கள். ‘கடலை மாவு பஜ்ஜி போடுவதற்காயிற்றே’ என்ற மறுப்புணர்வு தோன்றுகிறதா?
தோலுக்குப் புத்துணர்ச்சி
சரி பரவாயில்லை. அரைப் பிடியளவு கடலைப் பருப்பை எடுத்து, இரவில் ஊற வையுங்கள். அதனோடு ஒரு தேக்கரண்டி வெள்ளைக் குண்டு உளுந்து, அரைத் தேக்கரண்டி வெந்தயம் போடுங்கள். காலையில் சிறு துண்டு தேங்காயை உடன் சேர்த்து, மைய அரைத்துக் கொள்ளுங்கள்.
உடல் மீது ஒன்றிரண்டு குவளை நீர் ஊற்றி, அதன் மீது அரைத்து வைத்த மாவைச் சந்தனம் போலத் தடவிவிட்டு, ஐந்து நிமிடம் முதல் பத்து நிமிடம்வரை ஊறவிடுங்கள். கலவை உலர்ந்து இறுகப் பிடிக்கும் தருணத்தில் தாராளமாக நீர் விட்டுத் தேய்த்துக் குளியுங்கள்.
குளியல் முடித்து வெளியில் வரும்போது காற்றில் புதுக் குளிர்ச்சி பரவி இருப்பதை உணர் வீர்கள். உண்மையில் அது காற்றில் ஏற்பட்ட குளிர்ச்சி அல்ல. உங்கள் சருமத்தின் வியர்வைத் துளைகள் புதுப்பிக்கப்பட்டு அதன் மூலம் புது சுவாசத்தை, உங்கள் தோல் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.
என்னது தோல் சுவாசிக்குமா?
(தொடரும்)
கட்டுரையாளர், உடல்நல எழுத்தாளர்
தொடர்புக்கு: kavipoppu@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT