Published : 27 Oct 2018 10:42 AM
Last Updated : 27 Oct 2018 10:42 AM
எப்போதும் புத்திளமையுடன் இருக்க விரும்புபவர்கள், ஆற்றலுடன் செயல்பட விரும்புபவர்கள் தங்களது அன்றாட உணவு, குளியல், உறக்கம் அனைத்திலும் ஒரு ஒழுங்கு நெறியைப் பின்பற்றுகிறார்கள். அது மட்டுமில்லாமல் வருடாந்திரமாகவும் உடலைச் சுத்திகரித்துக் கொள்கிறார்கள்.
நாம் பயன்படுத்தும் வாகனத்தை அன்றாடம் துடைத்துப் பளபளப்பேற்றிக் கொள்கிறோம். அவ்வப்போது எரி எண்ணெய் போட்டுக்கொள்கிறோம். மாதாந்திரமாக மெக்கானிக் ஷாப்பில் கொடுத்து பிரேக், செயின் டைட் வைத்தல், பெட்ரோலை டியூனிங் செய்தல், டயர்களுக்குக் காற்றடித்தல் போன்றவற்றைச் செய்து கொள்கிறோம். அதுபோக ஆண்டுக்கு ஒருமுறை முழுமையாகக் கழற்றிச் சுத்தப்படுத்தும் ‘ஓவர் ஹாலிங்’ செய்துகொள்கிறோம். ஆனால், எல்லோரும் சொந்த உடலை இப்படி மூன்று நான்கு அடுக்குகளாகப் பராமரிக்கிறோமா என்றால் இல்லை!
குறிப்பிட்ட நிறுவனத்தில் வேலை செய்கிறவர்களுக்கு வருடாந்திர மருத்துவப் பரிசோதனை உண்டு. இந்த மருத்துவச் சோதனைகள் உடலை முறைப்படுத்துபவை அல்ல. மாறாக, அந்த நேரத்தில் உடலில் தென்படும் சராசரிக்குக் கூடுதலான அளவீடுகளை நிரந்தரமானது எனக் கணக்கில் கொண்டு அச்சுறுத்தி, காலம் தோறும் மருந்துகளை உண்ண வைக்கின்றன.
கழிவுகளின் தேக்கமே நோய்
இப்போது நாம் பார்க்க வேண்டியது வருடாந்திரமாக உடலை எப்படிச் சீரமைத்துக்கொள்வது என்பது பற்றி. உடலில் வாதம், பித்தம், கபம் ஆகியவற்றின் ஏற்ற இறக்கங்களே நோய்களுக்கான காரணி என்கின்றன நம்முடைய பாரம்பரிய மருத்துவமான சித்தமும் ஆயுர்வேதமும். கழிவுகளின் தேக்கமே நோய் என்கின்றன இயற்கை மருத்துவமும் அக்குபங்சரும்.
பாரம்பரிய மருத்துவ முறைகள் அனைத்தும் உடலியல் குறித்து கிட்டத்தட்ட நெருக்கமான ஒத்த பார்வையைக் கொண்டுள்ளன. உடலில் தேக்கமுற்ற கழிவுகளை நீக்கினால் வாதம், பித்தம், கபம் மூன்றும் சமநிலைக்கு வந்துவிடும். அப்போது உடலியக்கமும் சீராக இருக்கும்.
வாகனங்களைப் போன்று உடலையும் ஓவர் ஹாலிங் செய்வதுபோல் சுத்தம் செய்துவிடலாம். ஆனால், ஒவ்வொரு பகுதியாகக் கழற்றி மாற்ற வேண்டியதில்லை. அது முடியவும் முடியாது. பின்னர் எப்படி?
அகச் சுத்தமே புறச் சுத்தம்!
உடல் எனும் உயிர்ப்பொறி எப்போதும் தன்னைச் சுத்தப்படுத்திக் கொள்வதிலேயே குறியாக இருக்கிறது. ஆனால், அதைக் கட்டியாள்வதாகக் கருதிக்கொண்டிருக்கும் மனிதன் அதில் கழிவைத் தேக்குவதில் ஈடுபட்டுக்கொண்டே இருக்கிறான்.
காட்டு அல்லது நாட்டு விலங்குகள் எதைப் பார்த்தாலும் அதன் மேல் தோலும் முடியும் எவ்வளவு பளபளப்பாக இருக்கின்றன. எப்படி? தன்னியல்பில் வாழ முடிகிற அத்தனை விலங்குகளுக்கும் தோல் பளபளப்புடன் இருக்கும்.
காட்டுப் பறவை, மரம் அனைத்தும் எப்போதும் கழுவி எடுத்தது போலப் பளீரென்று ஒளி வீசிக்கொண்டிருக்கின்றன. பொதுவாக அகச் சுத்தமே புறச் சுத்தமும் ஆகும். உயிர் செல்கள் அனைத்தும் இரண்டு செயல்களை முதன்மையாகச் செய்கின்றன. ஒன்று, ஆற்றலை வெளியிலிருந்து பெறுவது. இன்னொன்று, கழிவை அகற்றுவது. கழிவை நீக்குவதற்கான வாய்ப்புக் கிடைக்காதபோது கழிவு உட்புறமாகத் தேங்கிவிடுகிறது.
கழிவு நீக்கும் குளியல்
வருடாந்திர உடல் சுத்திகரிப்பின்போது உள்முகமாகச் செலுத்துவது வெகுவாகக் குறைக்கப்பட்டு விடுகிறது. ஒரு வாரம் அல்லது பத்து நாள் இயற்கை முறை உடல் சுத்திகரிப்புக்குச் செல்பவர்களுக்கு இளநீர், பழச்சாறு போன்றவைதான் உணவு. இவை செரிப்பதற்கு எளிமையாக இருக்கும். அதேபோல கழிவே இல்லாமல் முற்றிலும் ஆற்றலாக மாறக் கூடியதாகவும் இருக்கும்.
முதலில் பெரும் கழிவு நீக்க முறைகளான மலம் – சிறுநீர் போன்றவற்றை வெளியேற்றுவதற்குரிய வேலை, உடலுக்குக் குறைக்கப்படுகிறது. இந்த அன்றாட வேலைகள் குறைக்கப்பட்ட உடனே அடுத்த கட்டமாக உடலில் தேங்குவதற்கு வசதியான பாகங்களாகிய மூட்டுகள், இணைப்புகள், இரைப்பை, சிறுநீர்ப்பை, குடல் வால் போன்றவற்றில் தேங்கியிருக்கும் கழிவுகளை உடல் செல்கள் தாமாகவே வெளியேற்றுகின்றன. வெளியிலிருந்து செலுத்தப்படும் திணிப்பு இல்லாதபோது உள்ளிருந்து நீக்கும் வேலையை செல்கள் மிகத் துரிதமாகச் செய்கின்றன.
புறத்திலிருந்து உணவை உள்நோக்கிச் செலுத்துவதைக் குறைத்து ஒரு கட்டத்தில் முற்றாக நிறுத்தியும்விடுவார்கள். அதுபோலவே கழிவு வேகமாக வெளியேற, புறத்திலிருந்தும் உதவிகரமான செயலைச் செய்கிறார்கள். அவைதாம் பல்வேறு குளியல் முறைகள்.
கழிவை வடிகட்டும் வாழையிலை
அதில் ஒன்று, வாழையிலைக் குளியல். வயிற்றுக்கு உணவு கொடுப்பதை நிறுத்தி கிட்டத்தட்ட வயிற்றை உலர்ந்த தோல் பை நிலைக்குக் கொண்டுவந்த பின்னர் இந்தக் குளியலை மேற்கொள்ளும்போது அற்புதமான பலன் கிடைக்கும்.
இதற்குப் பொருத்தமான நேரம், வெயில் ஏறும் காலை ஒன்பது மணி. திறந்தவெளியில் குறைந்தபட்ச ஆடையுடன் ஒரு நபர் முழுமையாக உச்சி முதல் உள்ளங்கால் வரை தழுவக்கூடிய வாழையிலையில் படுத்துக்கொள்ள வேண்டும். அடுத்து இடது, வலது, மார்புப் பகுதி அனைத்தையும் வாழையிலைகளைக் கொண்டு மூட வேண்டும். எச்சரிக்கை… மூச்சுக் காற்றுப் புகும் வண்ணம் மூக்குப் பகுதியில் இலையைக் கத்தரித்துவிட வேண்டும்.
மற்றபடி கண் முதற்கொண்டு அனைத்துப் பாகங்களையும் வாழையிலையால் மூடுவதோடு, வாழை நார்கொண்டு தளர்வாகக் கட்டியும்விட வேண்டும். மொத்தத்தில் புறக் காற்று உள்ளே போகக் கூடாது. புற வெயிலின் வெப்பம் மெலிசான வாழை இலையைக் கடந்து உள்ளே இறங்க, வெப்பத்தின் புழுக்கம் தாங்காமல் உள்ளிருக்கும் நீர், வியர்வை வடிவத்தில் தோலின் மேல் பாகத்துக்கு வந்து சலசலவென்று வடியத் தொடங்கும்.
உடலின் மீது வாழை இலைகளைக் கட்டி முடித்த ஓரிரு நிமிடத்திலேயே தோன்றும் அழுத்தம் அச்சமூட்டக் கூடியதாக இருக்கும். ஆபத்து எதுவும் இல்லை என்றாலும் முன் பயிற்சி பெற்றவர்கள் துணையோடு வாழையிலைக் குளியலை முயன்று பார்ப்பதே நல்லது.
உடற் கழிவுகளைச் சட்டென்று வடித்தெடுக்கும் மேலும் சில குளியல் முறைகள் குறித்து அடுத்த வாரம் பார்ப்போம்.
(தொடரும்)
கட்டுரையாளர், உடல்நல எழுத்தாளர்
தொடர்புக்கு: kavipoppu@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT