Published : 13 Oct 2018 03:53 PM
Last Updated : 13 Oct 2018 03:53 PM
புத்தக வாசிப்பில் புரட்சி செய்த ஒரு செயலி. சொல்லப் போனால், இது ஒரு டிஜிட்டல் சாதனமாகத்தான் அறிமுகமானது. பின்னாட்களில்தான் செயலியாக வளர்ந்தது. நீங்கள் புத்தகம் படிப்பவராக இருந்தால் இந்தக் கருவியைப் பார்த்தவுடன் பிடித்துவிடும். நீங்கள் மாதத்துக்கு ஒரு புத்தகம் படிப்பவர் என்றால், இந்தக் கருவி உங்கள் கையில் இருந்தால், நான்கு புத்தகங்களை அதிகமாகப் படிப்பீர்கள்.
புத்தக வாசிப்பை டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் இணைத்து, வாசிப்பை அடுத்த கட்டத்துக்கு மேம்படுத்திய இந்தக் கருவி, அமேசான் நிறுவனத்தின் ‘கிண்டில்’ (Kindle). ஆங்கிலத்தில் ‘கிண்டில்’ என்றால் ‘தூண்டுதல்’ என்று அர்த்தம். சரியான பெயரைத்தான் வைத்திருக்கிறார்கள்!
கணினியில் வேர்டு பிராஸசர்கள் வரத் தொடங்கிய உடனே, மின் புத்தகங்களும் வரத் தொடங்கிவிட்டன. ஆனால் இன்றோ, மின் புத்தகத்துக்கெனத் தனிச் சந்தையே உருவாகிவிட்டது. அச்சுப் புத்தகங்களை வெகுவிரைவில் இந்த மின் புத்தகங்கள் விழுங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதைப் பற்றிக் கடைசியில் பார்ப்போம்.
அமேசான் புத்தகங்கள் மட்டுமே!
அமேசான் நிறுவனத்தில் கிண்டில் சாதனத்தைப் பணம் கொடுத்துத்தான் வாங்க வேண்டும். ஆனால், செயலியைக் கணினியிலும் ஸ்மார்ட்ஃபோனிலும் இலவசமாகவே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். கிண்டில் சாதனம் கொடுக்கும் அந்த ஒளி அமைப்பு, செயலிகளில் இல்லை.
கிண்டில் சாதனத்தின் திரை, படிப்பதற்காகவே சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. குறுங்கணினிகள் காலத்தில், படிப்பதற்காகவே ஒரு கருவியை உருவாக்கத் தைரியம் வேண்டும். ஆனால், கிண்டிலைப் பயன்படுத்திவிட்டீர்கள் என்றால், அதற்கு நீங்கள் அடிமையாகிவிடுவீர்கள்.
நீங்கள் கிண்டிலைப் பயன்படுத்தி மின் புத்தகங்கள், ஆவணங்கள் ஆகியவற்றைத் தரவிறக்கிப் படிக்கலாம். இதற்கான புத்தகங்களை நீங்கள் அமேசான் நிறுவனத்திடம் மட்டும்தான் வாங்க முடியும். வேறு மின் புத்தகங்கள் வாங்கியிருந்தாலும், அதை கிண்டிலுக்கு உகந்த வடிவத்தில் மாற்ற வேண்டும்.
ஒரே ‘க்ளிக்’கில் உடனடி புத்தகம்
கிண்டில் திரையில் கண்ணை உறுத்தாத எழுத்துகளில், நன்றாக இடைவெளிவிட்டு, முத்துக்களைப் போல் எழுத்துக்கள் பளிச்சிடும். ‘டச் ஸ்கிரீன்’ வசதியுடன் அடுத்த பக்கத்துக்குச் சென்றுவிடலாம். ஒரு வார்த்தையின் அர்த்தம் வேண்டுமா? மிருதுவாக அந்த வார்த்தையை அழுத்துங்கள். அதன் அர்த்தம், அதைப் பற்றிய செய்திகள் என அனைத்தும் ஒரு ‘க்ளிக்’கில் உங்கள் கண் முன் விரியும். நீங்கள் அங்கேயே இன்னும் கொஞ்சம் அழுத்தி உங்களுக்குப் பிடித்த வரிகளை ‘ஹைலைட்’ செய்து கொள்ளவும் முடியும். தேவையான புத்தகங்களைத் தேடுவதும் எளிது.
புத்தகத்தின் எந்த இடத்தில் வேண்டுமானாலும், உங்கள் குறிப்புகளை எழுதி சேமித்துக் கொள்ளலாம். கிண்டிலில் படிக்கும் மின் புத்தகங்களை ஒரு சில நிமிடங்களில் வாங்கிவிடலாம். அச்சுப் புத்தகத்தை ‘ஆர்டர்’ செய்துவிட்டு நீங்கள் காத்திருப்பதுபோல் மின் புத்தகத்துக்குக் காத்திருக்கத் தேவையில்லை. இணையத் தொடர்பில் இருந்தால் போதும். அமெரிக்காவில் சில நிமிடங்களுக்கு முன்னால் வெளியான புத்தகத்தை, அடுத்த சில நிமிடங்களில் வாங்கி, படிக்கக் தொடங்கலாம்.
உங்களைப் படிக்கும் சாதனம்
கிண்டில் சாதனம் / செயலி இரண்டுமே உங்களின் வாசிப்பைப் பற்றிய தகவல்களைத் தொடர்ந்து சேகரித்தபடியே இருக்கும். நீங்கள் எந்த வகைப் புத்தகங்களை வாங்குகிறீர்கள், எந்த எழுத்தாளரின் புத்தகத்தை வாங்குகிறீர்கள், ஒரு புத்தகத்தை எவ்வளவு நேரத்தில் படிக்கிறீர்கள் என்பது போன்ற சகல தகவல்களையும் சேகரித்துக்கொண்டு, தங்கள் வணிகத்துக்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். சுருக்கமாகச் சொல்வதென்றால், நீங்கள் புத்தகத்தைப் படிக்கிறீர்கள், புத்தகம் உங்களைப் படிக்கிறது!
அந்தத் தகவல்களைக்கொண்டு உங்களுக்கு எந்த மாதிரியான சலுகைகளை வழங்க வேண்டும், எந்த வகை புத்தகத்துக்குச் சலுகைகள் வழங்க வேண்டும், எந்த மாதிரியான புத்தகத்தைப் பரிந்துரைக்க வேண்டும் என அமேசான் ‘அல்காரித’ங்கள் கணக்கிட்டுக்கொண்டே இருக்கும்.
கிண்டிலில் தனிநபர் சிக்கல்
டிஜிட்டல் சாதனங்கள் நம் கவனச் சிதறலுக்குக் காரணமாக இருக்கின்றன என்று புலம்பும் அதே நேரத்தில், நாம் கவனம் குவித்துப் படிப்பதற்கும் ‘கிண்டில்’ போன்ற டிஜிட்டல் சாதனங்கள் உதவுவது, ஒரு முரண்தான். ஆனால், இதிலும் சிக்கல்கள் இல்லாமல் இல்லை.
நீங்கள் ஒரு புத்தகப் புழுவாக இருக்கும்பட்சத்தில், உங்களுக்குக் கழுத்து வலி, கை வலி ஆகியவை நிச்சயம். மின் சாதனம் அல்லது ஸ்மார்ட்ஃபோன் உதவியுடன் என்றால், கண்ணுக்கும் ஆபத்து. அதீத மின்னொளி, கண் பார்வையை அதிகம் பாதிக்கும்.
அடுத்து, கிண்டில் பயன்படுத்து பவரின் தகவல்கள் சேமிக்கப்படுவது, ‘புத்தகங்களைப் பரிந்துரைக்கத்தான்’ என்று அமேசான் சொன்னாலும், லாப நோக்கம்தான் இதன் முக்கியக் காரணம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் வாசிப்பைப் பற்றி அவர்கள் எவ்வளவு தெரிந்து கொள்கிறார்களோ, அவ்வளவு லாபத்தைப் பார்த்துவிடுவார்கள்.
ஒரு உதாரணம், நீங்கள் வரலாற்றுத் துறை சார்ந்த புத்தகங்களை அதிகம் வாசிக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு வரலாறு தொடர்பான புத்தகங்களில் எந்த விதச் சலுகையையும் செயலி தராது. காரணம், எப்படியும் அந்தப் புத்தகங்களை என்ன விலை கொடுத்தாவது நீங்கள் நிச்சயம் வாங்கிவிடுவீர்கள் என்பது அவர்களுக்குத் தெரிந்துவிடும். தொடர்ந்து சலுகை விலையில் அவர்களிடம் இருக்கும் வேறு புத்தகங்களைப் பரிந்துரை செய்து, உங்களை வாங்க வைத்துவிடுவார்கள். என்ன… படிக்காத புத்தகங்களை வாங்கி வைத்துக்கொண்டு அலமாரியில் தூசி தட்டும் வேலை மட்டும்தான் இல்லை. மற்றபடி, பணச் செலவுதான்.
கிண்டில் எனும் சமூகச் சிக்கல்
அடுத்து மிகப் பெரிய சமூகச் சிக்கல். மின் புத்தகத் துறையில், அமேசான் நிறுவனம் ஒரு சர்வாதிகாரி. அமேசான் நினைத்தால் நீங்கள் எழுதும் புத்தகங்களைப் புதைத்துவிடுவார்கள் என்பது பல எழுத்தாளர்களின் குற்றசாட்டு. அவர்களது அல்காரிதங்களைப் பகைத்துக்கொண்டு உங்களால் உங்கள் புத்தகங்களை விற்றுவிட முடியாது.
இப்போது கிண்டில் மின் புத்தகங்களில், சிறிய அனிமேஷன் கொண்டு உங்கள் வாசிப்பு அனுபவத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறார்கள். இருந்தாலும் இன்றைய தலைமுறை அச்சுப் புத்தகங்களையே விரும்பவதாக ஆய்வுகள் கூறுகின்றன. புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் எந்த விஷயத்தையும் நாம் ஆதரிக்கிறோம். ஆனால், மின் புத்தகங்கள் என்றால், குறைந்த நேரமே பயன்படுத்துங்கள். தொடர் வாசிப்புக்குக் கண்கள் முக்கியமல்லவா!
கட்டுரையாளர், டிஜிட்டல் சமூக ஆய்வாளர்,
தொடர்புக்கு: Digitaldiet4all@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT