Published : 27 Oct 2018 10:41 AM
Last Updated : 27 Oct 2018 10:41 AM
இது ‘லைவ்’களின் காலம். ஒரு காலத்தில் சுற்றுலா சென்றால் பிலிம்ரோலை கேமராவில் போட்டு, போட்டோக்களைப் பிடித்து, பின்பு அந்த போட்டோக்களை ஸ்டுடியோவில் டெவலப் செய்து, சில நாட்கள்வரை காத்திருந்து, நீங்கள் சுற்றுலாவில் மெய்மறந்த அந்த ஒரு நொடியை ஒளிப்படமாகப் பார்த்து மகிழ்ந்திருப்பீர்கள். இப்போது போட்டோகிராஃப் பார்த்து ‘ஆட்டோகிராஃப்’ நொடிகளை அசைபோடும் பழக்கமெல்லாம் மலையேறிவிட்டது. இன்று எல்லாமே ‘லைவ்’ தான். ஆம்... எல்லாமே!
அந்த நொடியிலேயே உங்கள் உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு வேண்டியவர்கள், வேண்டாத வர்கள் என அனைவருக்கும் காணொலியாக, நிச்சயதார்த்தம், திருமணம், காதுகுத்து, கருமாதி என நீங்கள் அனுபவிக்கும் விஷயங்கள் எல்லாவற்றையும் ‘லைவ்’ காட்டிவிடலாம். அந்த ‘லைவ்’வுக்கு உதவும் ஒரு செயலிதான் ‘பெரிஸ்கோப்’.
இந்த நொடி… இந்த இடம்…
இது ட்விட்டர் நிறுவனத்துக்குச் சொந்தமான செயலி. அதனால் உங்களிடம் ட்விட்டர் கணக்கு இருந்தால் போதும், இந்தச் செயலியை நீங்கள் பயன்படுத்தலாம். மேலும் ட்விட்டர் பயன்படுத்தும் உங்கள் நண்பர்கள், உறவினர்களை இதிலேயே சேர்த்துக்கொள்ளலாம். இந்தச் செயலி இலவசமானதுதான். ஆண்ட்ராய்ட், ஐ.ஓ.எஸ் இயங்குதளங்களில் கிடைக்கிறது.
உங்கள் ட்விட்டர் பயனாளர் கணக்கைக் கொண்டு நீங்கள் இந்தச் செயலிக்குள் நுழைந்துவிட்டால் போதும், மறுநொடி உலகம் முழுவதும் ‘லைவாக’ ஓடிக்கொண்டி ருக்கும் காணொலிகள் பற்றிய தகவல் உங்களுக்குக் கிடைக்கும்.
இதிலிருக்கும் பாதுகாப்பு அம்சம், ஒருவர் லைவ் போகும்போது அதை ‘பிரைவேட்’ அல்லது ‘பப்ளிக்’ என்ற இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். ‘பிரைவேட்’டைத் தேர்வு செய்தால், உங்கள் நண்பர்களுக்கு அல்லது உங்களைப் பின் தொடர்புவர்களுக்கு மட்டும் உங்கள் ‘லைவ்’ தெரியும்படி காட்டலாம். நீங்கள் ‘லைவ்’வில் இருக்கும்போதே அவர்களுடன் ‘சாட்’ செய்யும் வசதியும் உள்ளது.
நீங்கள் இந்தச் செயலியில் ‘லைவ்’வாக வர வேண்டும் என்று நினைத்தால், உங்கள் பெயர், நீங்கள் இருக்கும் இடம், உங்கள் கேமராவைப் பயன்படுத்த இந்தச் செயலிக்கு நீங்கள் ஒப்புதல் கொடுக்க வேண்டும். அவ்வளவுதான், மொபைல் டேட்டா இருந்தால் நீங்கள் இந்த நொடியே உலகத்தினருக்கு உங்கள் செய்தியைச் சொல்லலாம்.
நன்மைகள் என்ன?
ஒருவேளை நீங்கள் ஆபத்தில் சிக்கி இருந்தால் இந்தச் செயலியின் உதவியுடன், உங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தாருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்க முடியும். பல நேரம், நீங்கள் கலந்துகொள்ள முடியாத விழாக்கள் அல்லது கூட்டங்களில் இந்தச் செயலி உதவியுடன் ‘மெய்நிகராக’ கலந்துகொள்ளலாம்.
உங்கள் நண்பர் களுடன் பேசி மகிழலாம். உங்களின் மிக முக்கியமான தருணங்களை உங்கள் நண்பர்களுடன் காணொலியாகப் பகிர்ந்துகொள்ளலாம்.
சிக்கல்கள் என்ன?
இந்தச் செயலி மேற்கூறிய நன்மைகளைக் கொண்டிருந்தாலும் சில சிக்கல்களும் உண்டு. அதில் முக்கியமானது, உங்கள் காணொலியைக் காட்டுவதால் எந்நேரமும் அந்தக் காணொலியிலிருந்து ‘ஸ்க்ரீன்ஷாட்’ எடுக்க முடியும். அந்தப் படங்கள், ஆபாசமாகப் பயன்படுத்தப்பட்ட சாத்தியங்கள் உள்ளன.
உங்களது இடம் பற்றிய தகவல்கள் பிறருக்குத் தெரிவதால் உங்கள் உடைமைக்கோ உயிருக்கோ ஆபத்து நிகழ வாய்ப்பிருக்கிறது. தவறான நபர்கள், அந்நியர்கள் உங்கள் பிள்ளைகளைப் பின்தொடர்ந்து அவர்களுக்கு ஊறு விளைவிக்க சாத்தியம் இருக்கிறது. நீங்கள் பகிர்ந்த அந்தரங்கக் காணொலிகள் தரவிறக்கம் செய்யப்பட்டு இணையத்தில் பதிவேற்றப்படலாம்.
பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?
ஒரு குடும்பத்தில் ஒருவரோ ஒன்றுக்கு மேற்பட்டவரோ வெளிநாடுகளில் வேலை செய்துகொண்டிருந்தால், அவர்கள் இதர குடும்ப உறுப்பினருடன் தொடர்புகொள்ள இந்த ‘பெரிஸ்கோப்’ செயலியைப் பயன்படுத்துவார்கள். அதனால் பிள்ளைகளும் இந்தச் செயலியைப் பயன்படுத்துவது மிகவும் சாதாரணமாகக் கருதப்படலாம். வெளிநாட்டில் இருப்பவர்களுடன் தொடர்புகொள்ளப் பயன்படுத்தும் காரணமும் உங்கள் பிள்ளைகள், பள்ளியில் அல்லது கல்லூரியில் பயன்படுத்தும் காரணமும் ஒன்றல்ல!
ஒருவேளை உங்கள் பிள்ளைகள் இந்தச் செயலியைப் பயன்படுத்துவது பற்றி உங்களுக்குத் தெரிந்தால் முதலில் இந்தச் செயலியின் தீய விளைவுகளைப் பற்றி அவர்களுக்கு விளக்கமாகக் கூறுங்கள்.
திடீரென இந்தச் செயலியைப் பயன்படுத்துவதை நிறுத்துவது. பள்ளிக்குச் செல்ல மறுப்பது அல்லது குறிப்பிட்ட வழியில் பள்ளிக்குச் செல்லாமல் வேறு வழியில் பள்ளிக்குச் செல்வது, குறிப்பிட்ட இடங்களைப் புறக்கணிப்பது போன்று உங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளில் ஏதாவது மாற்றங்கள் தெரிந்தால், நிச்சயம் ஏதோ பிரச்சினை இருக்கிறது. அதனால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆட்பட வாய்ப்பிருக்கிறது. உடனடியாக மனநல ஆலோசகரை நாடுங்கள்.
கட்டுரையாளர், டிஜிட்டல் சமூக ஆய்வாளர்,
தொடர்புக்கு: Digitaldiet4all@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT