Published : 04 Aug 2018 11:02 AM
Last Updated : 04 Aug 2018 11:02 AM
பிறந்தவுடன் குழந்தைக்குக் கிடைக்க வேண்டிய முதல் பரிசு… தாய்ப்பால்!
ஆகஸ்ட் 1 முதல் 7-ம் தேதி வரை ‘உலக தாய்ப்பால் வாரம்’ கொண்டாடப்படுகிறது. ‘இதற்கெல்லாம் ஒரு வாரமா?’ என்னும் கேள்வி நம்மில் பலருக்கு எழலாம். அப்படியானவர்களுக்குத் தாய்ப்பால் பற்றிய மகத்துவம், நீடித்து, முறையாக அதை தருவதால் தாய்-சேய்க்கு ஏற்படும் நன்மைகள் போன்றவை குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்தவே இந்த வாரம் கொண்டாடப்படுகிறது.
இன்னுமொரு கூடுதலான விஷயம் என்ன தெரியுமா? அப்படி நீடித்து தாய்ப்பால் ஊட்டி வந்ததன் காரணமாகவே மார்பகப் புற்றுநோய்த் தாக்கமும், அதன் எண்ணிக்கையும் 20 வருடங்களுக்கு முன்புவரை பெண்களிடத்தில் மிகவும் குறைவாகவே இருந்தது என்பதுதான்.
நோய்களைத் தடுக்கும் தாய்ப்பால்
தாய்ப்பால், குழந்தை பிறந்த உடன் அடிக்கடி கொடுக்க, ‘ஆக்சிடோசின்’ எனும் ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கும். அதனால், பிள்ளை பெற்ற பின் உண்டான அதிக ரத்த இழப்பை ஈடுசெய்வது மட்டுமல்லாமல், கருப்பை வீக்கத்தையும் விரைவில் இயல்பு நிலைக்குக் கொண்டுவரும்.
கிராமங்களில், தாய்ப்பால் புகட்டுவதை நீட்டிக்கும் வழக்கம், நகரத்தைச் சார்ந்த தாய்மார்களைக் காட்டிலும் அதிகமே. பொதுவாகவே, பெரும்பான்மையான பெண்களுக்கு, ஹார்மோன்களின் மாற்றங்களால் மாதவிடாய் ஏற்படுவது தள்ளிப்போகும். குறிப்பாக ‘ஈஸ்ட்ரோஜன்’ எனும் ஹார்மோனின் தாக்கம் தாய்ப்பாலூட்டும் காலத்தில் அதிக அளவில் இருக்காது.
இதனால் மார்பகப் புற்றுநோய் வரும் சாத்தியம் மிகப் பெரிய அளவில் குறைகிறது. மேலும், பெண்களுக்கு இயல்பாகவே ஏற்படும் ‘சினைமுட்டை உடைதல்’ எனும் பணி, தாய்ப்பாலூட்டும் காலத்தில் நடைபெறாது இருப்பதால், சினைப்பைப் புற்றுநோய் வருவதையும் பெரிதும் தடுப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
உடல் எடை குறைய…
அதேபோன்று, பிரசவ காலத்தில் சர்க்கரை நோய் பாதிப்படைந்த தாய்மார்களில் மூன்றில் ஒருவருக்கு, பிற்காலத்தில் நீரழிவு நோய் வரும் சாத்தியம் அதிகம். நீடித்துப் பாலூட்டும் போது, அவ்வாறு நீரழிவு நோய் வராமலிருக்கவும் உதவும். எப்படி? முன் சொன்ன ‘ஆக்சிடோசின்’தான் காரணம்! தாயின் உடலும் மனதும் நல்ல நிலையில் இருக்க இந்த ஹார்மோன் உதவுகிறது. ஆகவே, நீரழிவு நோய் ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்றான மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
தவிர, தாய்ப்பால் ஊட்டுவதால் தாய் உண்ட உணவில் உள்ள ‘கலோரி’ குழந்தைக்கும் செல்வதால், பிரசவ காலத்தில் அதிகரித்த உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.
தாய்ப்பால் கூட்டும் அழகு
பெரும்பாலான பெண்கள், தங்கள் குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டினால் தங்களின் அழகு குறைவதாகத் தவறான எண்ணம் கொண்டுள்ளனர். மாறாக, எப்படித் தாய்ப்பாலூட்டுவது ஒரு பக்கம் உடல் எடையைக் குறைக்கிறதோ அதுபோலவே, ஹார்மோன்களை அதிக அளவில் சுரக்கச் செய்து, முகப் பொலிவையும் அழகையும் கூட்டுகிறது என்பதே உண்மை!
ரத்த அழுத்தத்தைச் சீராக வைப்பது, மார்பகப் பகுதியில் ஏற்படும் ரத்த நாளப் புடைப்பு உண்டா காமல் தடுப்பது எனத் தாய்ப்பால் ஊட்டுவதில் இருக்கும் நன்மைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இந்த வருட ‘உலக தாய்ப்பால் வார’ மையக் கருத்து, ‘தாய்ப்பால்: வாழ்வின் அடித்தளம்’ என்பதாக இருக்கிறது. அதில் சந்தேகமென்ன?
இன்னும் சில தகவல்கள்
# சிலருக்குத் தாய்ப்பால் கொடுப்பதால் மார்புப் பகுதியில் வெடிப்புகள் ஏற்படும். பதற வேண்டாம். வெடிப்புள்ள பகுதியில் தேங்காய் எண்ணெய் தடவி வர குணமாகும். குழந்தை வாய் வைத்துச் சப்ப சப்ப குழந்தையின் உமிழ் நீரிலேயே வெடிப்பு குணமாகவும் செய்யும்.
# பால் கட்டு ஏற்பட்டிருக்கும் நேரத்தில் கண்டிப்பாக முதலில் சில சொட்டுப் பாலைப் பீய்ச்சி விட்டுத்தான் கொடுக்க வேண்டும். தவறினால், குழந்தைக்குச் செரிமானத் தொந்தரவு ஏற்படலாம். இரண்டு மார்பகங்களிலும் சரி சமமாகப் பால் கொடுத்துப் பழக்கினால், பால் கட்டு ஏற்படும் சாத்தியம் மிகக் குறைவு. அதே போன்று, பால் கட்டும் நேரத்தில், பால் பெருக்கி உணவு வகைகளைக் குறைத்துக் கொள்ளுதல் நலம்.
# தாய்ப்பால் ஊட்டும் முன்பு, நல்ல சுத்தமான துணியை வெந்நீரில் நனைத்து, தனது மார்புக் காம்புகளைச் சுத்தம் செய்து துடைத்து, பிறகு பாலூட்டும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.
# மார்பகங்களில் மஞ்சள் தடவிக் குளித்து வருவது, அந்த இடத்தில் நோய்த்தொற்றை ஏற்படுத்தும் கிருமிகள் வராமல் தடுக்கும். இதனால் குழந்தைக்குக் கிருமிகளின் தொந்தரவு இருக்காது. தாய் குளித்து வந்தவுடன், ஈரம் காய்வதற்குள் பால் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில், அந்த ஈரம், சீதமாக மாறி குழந்தையைத் தாக்கும். அதனால் சளியோ, காய்ச்சலோ வர வாய்ப்புகள் அதிகம்.
# எக்காரணம் கொண்டும் படுத்துக்கொண்டு குழந்தைக்குப் பாலூட்டக் கூடாது..
கட்டுரையாளர், சித்த மருத்துவர்
தொடர்புக்கு: siddhathiru@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT