Published : 18 Aug 2018 11:15 AM
Last Updated : 18 Aug 2018 11:15 AM
'நாள் தள்ளி போயிருக் குன்னு நினைக்கிறேன்’ என்று மகிழும் முதல் கணத்தில், உள்ளத்தில் ஏற்படும் குதூகலத்தின் முதல் தேடல், ‘இனிப்பு’. ஆனால், இனிப்பு தேசத்தில், இனி இனிப்பால் அந்த மகிழ்வைக் கொண்டாடுவதில் நிறையவே சிக்கல் ஏற்படும். ஆம்! புளிப்பு வேண்டுமானால் பிடித்துப் போகலாம். நிச்சயம், அதிக இனிப்பு கூடாது என்கிறது நவீன மருத்துவம்.
இனிப்பு என்றால் வெள்ளைச் சர்க்கரையும் அந்த வெள்ளை விஷத்தில் செய்த அத்தனை பண்டங்களையும், கருத்தரித்துள்ள காலத்தில் கொஞ்சம் தள்ளிவைத்தோ, தவிர்ப்பதோ கர்ப்பிணிக்கு நலக் கவசம் என்கிறார் கள் ஆய்வாளர்கள். ஏனென்றால், கர்ப்பிணிப் பெண்களுக்கு வரும் சர்க்கரை நோயான ‘ஜெஸ்டேஷனல் டயாபடீஸ் மெல்லிட்டஸ்’ (GDM) இன்று மெல்ல மெல்ல பெருகி வருவதுதான்.
கர்ப்பக் காலத்தில் சர்க்கரை நோயா?
ஜி.டி.எம். எனும் இந்த கருத்தரித்த காலத்துச் சர்க்கரை, சரியான உணவுக் கட்டுப்பட்டின் மூலமே, 75 சதவீதம் சரியாக்கிவிட முடியும். 25 சதவீதம் பேருக்குத்தான் மருத்துவம் அவசியப்படுகிறது. சில நேரம் எளிய மருந்துகள் அல்லது இன்சுலின் ஊசி. ‘கருத்தரித்த காலத்தில் ஊசியா? அய்யகோ!’ என அலற வேண்டியதில்லை. சரியாக மருத்துவம் செய்துகொள்ளாதபோது குழந்தை அதிகபட்ச உடல் எடையுடனோ, சில நேரங்களில் உடல் ஊனமாகவோ பிறக்கக்கூடும். ஆதலால் கருத்தரித்துள்ள காலத்தில் ரத்தச் சர்க்கரையை அளவாக வைத்திருத்தல் மிக மிக முக்கியம்.
ஜி.டி.எம். வராது காக்க, கருத்தரிக்கும் முன்னரே முறையான உடற்பயிற்சி, எடைக் கட்டுப்பாடு போன்றவை மிக அவசியம். அதிக உடல் எடை இருந்தாலோ, முதல் பிரசவத்தில் கூடிய எடை குறையாது இருந்தாலோ, அடுத்து வரும் கருத்தரிப்பில், அந்தப் பெண்ணுக்குச் சர்க்கரை நோய் வர சாத்தியம் அதிகம். எடையைக் குறைக்கச் சரியான உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் இருந்தால், இந்தச் சிக்கல் வராது தவிர்க்க இயலும் எனப் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தாய் தந்தையருக்கு இனிப்பு நோய் உள்ளபோது, மகளுக்கு கருத்தரித்துள்ள காலத்தில் இந்தத் தற்காலிகச் சர்க்கரை நோய் வரலாம். மாதவிடாய் தொடங்கிய இளம்வயதில் சரியாக தீர்க்கப்படாத சினைப்பை நீர்க்கட்டிகள் இருந்து, அதிக உடல் எடையும் இருந்தாலும், கருத்தரிக்கும் காலத்தில் சர்க்கரை நோய் வரலாம். இப்படிப் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், இன்னும் மிகத் துல்லியமாக, கருத்தரித்த காலத்தில் ஏன் இந்நோய் வருகிறது என்ற விவரம் நவீன அறிவியலுக்குப் புலப்படவில்லை.
பழத்தை அப்படியே சாப்பிடலாம்!
பொதுவாக, கருதரிக்கும்போது, ‘அட புள்ள வாயும் வயிறுமாய் இருக்கு’ எனச் சொல்லி, கொஞ்சம் ஊட்ட உணவைத் தேடித் தேடிக் கொடுத்து வளர்ப்பது நம் பண்பாடு. ஊட்ட உணவு கொடுக்க முற்படும் அதேசமயம், ‘லோ கிளைசிமிக் உணவை’ தேர்ந்தெடுத்துக் கொடுப்பதும் அவசியம். பழங்களில், ஆரஞ்சில் தொடங்கி மாதுளை, கொய்யா, ஆப்பிள் போன்றவற்றைக் கொடுக்கலாம். மா, பலா, வாழை தவிர்க்கலாம்.
பழங்களையும் ‘ஜூஸ்’ போட்டுத் தராமல், துண்டுகளாய்க் கொடுக்கலாம். முக்கிய விஷயம் என்னவென்றால், கருத்தரித்து சர்க்கரை நோய் பெற்ற பெண்ணுக்குத்தான் மேலே சொன்ன இந்தக் கட்டுப்பாடு எல்லாம். அல்லது சர்க்கரை நோயராக இருக்கும் பெற்றோரைக் கொண்டவர்களுக்கும் இது பொருந்தும். ஆரோக்கியமான இதர பெண்கள் அதிகம் பயப்பட வேண்டியதில்லை.
கஞ்சி வேண்டாம்!
பட்டை தீட்டாத கைக்குத்தல் அரிசி வகைகளில் பாரம்பரியமான குள்ளக்கார், குழியடிச்சான், மாப் பிள்ளைச் சம்பா வகை அரிசி அல்லது பிரவுன் அரிசி எனும் உமி நீக்காத அரிசியில் உணவு சாப்பிடுவதும் ஜி.டி.எம். உள்ள பெண்களுக்குச் சிறந்தது. சத்துமாவுக் கஞ்சி முதலான எல்லாக் கஞ்சி வகையும் சர்க்கரையை வேகமாக ரத்ததில் கலப்பவை. குழந்தைகளுக்கும், உடல் எடையை உயர்த்த விரும்புவோருக்கும் அந்த வகைக் கஞ்சி மிக ஏற்றது. ஆனால், இனிப்பு நோயுள்ள கர்ப்பிணிகள் கஞ்சியைக் காட்டிலும் முழு தானியமாய்ச் சமைத்துச் சாப்பிடுவதே நல்லது.
சிறுதானியங்களான தினை, கேழ்வரகு, கம்பு, குதியரைவாலி போன்றவற்றைச் சோறாகவோ, அவற்றின் உடைத்த குருணையை உப்புமாவாகவோ, காய்கறிகள் சேர்த்து கிச்சடியாகவோ பயன்படுத்த வேண்டும். பாலில் வெல்லமோ, கருப்பட்டியோ, தேநீரில் தேனையோ சேர்த்துச் சாப்பிடலாம்.
(தொடரும்)
கட்டுரையாளர், சித்த மருத்துவர்
தொடர்புக்கு: herbsiddha@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment