Last Updated : 17 Apr, 2014 12:01 PM

 

Published : 17 Apr 2014 12:01 PM
Last Updated : 17 Apr 2014 12:01 PM

மனதுக்கு இல்லை வயது!- 17:04:14

நாற்பது வயதை கடக்கும் ஒவ்வொருவருக்கும் அறுபது வயது முதல் தனது பொருளாதார தேவையை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்கிற அச்சம் கலந்த சந்தேகம் இருக்கும். பிரச்சினையை எதிர்கொள்வதுதான் பிரச்சினையைத் தீர்க்கும் ஒரே வழி.

நாற்பது வயதில் உள்ள நீங்கள் உங்கள் குடும்பத்துடன் வாழ மாதம் முப்பதாயிரம் ரூபாய் தேவை என்று வைத்துக்கொள்வோம். விலைவாசியில் எந்த மாற்றமும் இல்லை என்றால் 20 ஆண்டுகளுக்கு பின்பும் உங்களுக்கு மாதம் முப்பதாயிரம் ரூபாய் இருந்தால் போதுமானது. ஆனால், விலையேற்றம் நடந்தே தீரும். ஆண்டுக்கு 7 சதவீதம் விலையேற்றமாக வைத்துக்கொண்டால்கூட 20 ஆண்டுகளுக்குப் பிறகு குறைந்தது மாத செலவுக்கு 1.20 லட்சம் ரூபாய் தேவை.

அப்படி எனில் 1.20 லட்சம் மாத வட்டி வரக்கூடிய அளவுக்கு உங்களது சேமிப்பு அன்றைய தினம் எவ்வளவு இருக்க வேண்டும்? மாதம் 1.20 லட்சம் ரூபாய் வட்டி வருவாய் வர வேண்டும் என்றால் வருடத்திற்கு 14.40 லட்சம் ரூபாய் கிடைக்கும். வட்டி ஏழு சதவீதம் என்று வைத்துக்கொண்டால் உங்களிடம் அறுபது வயதில் இரண்டு கோடி ரூபாய் முதலீடு இருக்க வேண்டும். ஆக, உங்கள் செலவுகள் நீங்கலாக நீங்கள் இன்னும் 20 ஆண்டுகளில் இரண்டு கோடி ரூபாய் சேமிக்க வேண்டும். இதற்கு ஆண்டுதோறும் 4.80 லட்சம் ரூபாயை 7 சதவீத வட்டியில் முதலீடு செய்யவேண்டும்.

அறுபது வயதுக்கு மேல் வருடம் 7 சதவீதம் விலையேற்றமும், உங்களது மருத்துவ செலவுகளும் அதிகரிக்கும்போது, உங்களுக்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் இன்னும் கூடுதலாக பணம் தேவைப்படும். இதனை சமாளிக்க மேலும் ஒரு கோடி ரூபாய் தேவைப்படலாம். மனம் தளர வேண்டாம். இத்தனையையும் சமாளிக்க வழிகள் உண்டு!

ஒவ்வொரு நாள் காலையும் சீக்கிரம் படுக்கையை விட்டு எழும்போது அன்றைய தினத்தில் நமக்கு வேலை செய்ய கூடுதல் நேரம் கிடைக்கும். அதைப்போலதான் சேமிப்பும். சீக்கிரமே சேமிக்க ஆரம்பியுங்கள்.

பிரச்சினையை எளிதில் சமாளிக்கலாம். மேலே சொன்னதுபோல் இரண்டு கோடியை இருபது ஆண்டுகளில் சேமிக்க ஆண்டுக்கு 4.80 லட்சம் ரூபாய் தேவை. இதையே நீங்கள் முப்பது வயதிலிருந்தே ஆரம்பித்தால் ஆண்டுக்கு 2.12 லட்சம் ரூபாய் சேமித்தாலே போதும்.

இது எப்படி சாத்தியம்? முப்பது வயதில் ஆண்டுக்கு 2.12 லட்சம் ரூபாய் சேமித்தால் அடுத்த 10 ஆண்டுகளில் அது 29 லட்சம் ரூபாயாக மாறும். அதனை அடுத்த 20 ஆண்டுகளில் மீண்டும் முதலீடு செய்தால், அதுமட்டுமே ஒரு கோடி ரூபாயைத் தாண்டும். தொலைநோக்கு பார்வையிலான இளமையில் சேமிப்பு என்பது எவ்வளவு அவசியம் என்பது இப்போது புரிந்திருக்கும்!

(மீண்டும் நாளை சந்திப்போம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x