Last Updated : 18 Aug, 2018 11:15 AM

 

Published : 18 Aug 2018 11:15 AM
Last Updated : 18 Aug 2018 11:15 AM

புத்தகத் திருவிழா: மருத்துவத் தமிழ் சாத்தியமா?

தாய்மொழிவழிக் கல்வியே உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கல்வி முறை. எதையுமே தாய்மொழியில் படிக்கும்போதுதான் அதன் முழுமையான பொருளுணர்ந்து படிக்க முடியும். அங்கு மனப்பாடத்துக்குத் தேவையிருக்காது.

பள்ளிக் கல்வி வரை தாய்மொழிவழிக் கல்விக்கு ஆதரவு தருகிற பலரும், கல்லூரிப் படிப்பையும் அதைத் தொடர்ந்த மேற்படிப்புகளையும் ஆங்கிலவழியில் படிக்கவே விரும்புகின்றனர். பெரும்பாலான தொழிற்துறை படிப்புகள் தமிழில் இருப்பதில்லை. மருத்துவப் படிப்பும் அவற்றில் ஒன்று.

நோய்களின் பெயர்களும் அவற்றுக்கான தீர்வுகளும் மருந்துகளும் ஆங்கிலத்தில் நிலைபெற்றுவிட்ட இந்நாளில் ஆங்கில மருத்துவத்தைத் தமிழில் படிப்பது இயலாத காரியமாகவே நம்பப்படுகிறது. ஆனால், கொஞ்சம் மெனக்கெட்டால் தமிழ்வழி மருத்துவக் கல்வி சாத்தியமே என்கிறார் டாக்டர் சு. நரேந்திரன்.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு நிலை அறுவைசிகிச்சைப் பேராசிரியராகப் பணிபுரியும் இவர், தமிழ்வழி மருத்துவக் கல்வி காலத்தின் தேவை என்கிறார். சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் மருத்துவச் சொற்களைத் தன் வாதத்துக்கு அவர் துணைக்கு அழைக்கிறார். அலோபதி மருத்துவ முறைகள் இந்தியாவுக்குள் நுழைவதற்கு முன்பே, அப்போது வழக்கத்தில் இருந்த மருத்துவ முறைகளையும், பயன்பாட்டில் இருந்த மருத்துவக் கலைச் சொற்களையும் தரவுகளோடு தொகுத்திருக்கிறார்.

ஐரோப்பிய மிஷனரிகளின் வழியாகத் தமிழகத்தில் அலோபதி மருத்துவம் நுழைகிறது. அதன் தொடர்ச்சியாக மருத்துவ நூல்கள் வெளியிடப்படுகின்றன. மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையிலான உரையாடலை நேர்ப்படுத்த உரையாடல் கையேடும் வெளியிடப்பட்டிருக்கிறது. இருமொழிக் கலப்பில் மருத்துவ அகராதிகளும் வெளியாகின. இவற்றுக்கு நடுவே மருத்துவர் சாமுவேல் ஃபிஷ்கிரீன், ஆங்கில மருத்துவ நூலைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுகிறார்.

ஆனால், அலோபதி மருத்துவ முறையில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை உருவாக்குவதில் உள்ள சுணக்கமே தமிழ்வழி மருத்துவப் படிப்புக்குத் தடையாக இருப்பதாக மருத்துவர் நரேந்திரன் குறிப்பிட்டிருக்கிறார். அதைக் களையும் வகையில் கலைச்சொல்லாக்கம் குறித்தும் அதற்கான சில வழிகாட்டுதல்களையும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

ஒரு காலத்தில் ‘நோ இந்தி, நோ இங்கிலீஷ்’ என்ற முழக்கத்தோடு தமிழில் மட்டுமே மருத்துவ நூல்கள் வெளிவந்த காலம் கனவாக மட்டுமே நிலைபெற்றுவிட்ட நிலையில், தனித் தமிழில் மருத்துவம் பயில்வது நல்ல முன்னெடுப்பாக இருக்கும். ஆனால், அதற்குப் பின்னால் இருக்கும் நடைமுறைச் சிக்கல்களையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.

தமிழால் மருத்துவக் கல்வி முடியும்

ஆசிரியர்: டாக்டர் சு. நரேந்திரன்

வெள்யீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,

அம்பத்தூர், சென்னை – 600 098.

தொடர்புக்கு: 044-26251968/26258410

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x