Published : 11 Aug 2018 12:37 PM
Last Updated : 11 Aug 2018 12:37 PM
தமிழ் மொழிக்கும் சித்த மருத்துவத்துக்குமான தொடர்பு, தொப்புள் கொடி உறவு. தமிழர் வாழ்க்கை முறைக்கும், சித்தர் தத்துவங்களுக்குமான பிணைப்பு சதைக்கும் குருதிக்கும் ஆனது. அதனாலேயே தமிழ்ச் சமூகம் தன் வாழ்வோடு, அதன் நுணுக்கங்களோடு சித்த மருத்துவத்தைப் பிணைத்து வைத்திருக்கிறது.
இதனாலேயே மொழி மீதும், தமிழ்ச் சமூகம் மீதும் தீராக் காதல் கொண்ட திராவிடக் கட்சிகளும் அதன் மூத்த தலைவர்களான கலைஞருக்கும், அன்பழகனுக்கும் சித்த மருத்துவத்தின் மீது பெரும் மதிப்பும் ஈடுபாடும் எப்போதும் உண்டு.
1965-ல் பாளையங்கோட்டையில் முதல் சித்த மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டு, 1969-70-களில் முதல் சித்த மருத்துவப் பட்டதாரிகள் வெளியேறியபோது, அவர்களுக்கு அப்போது பொறியாளர்களுக்கும், கால்நடை மருத்துவருக்கும் இணையான சம்பளம் வழங்கி, அவர்களைச் சமூகத்தில் அங்கீகரிக்க வேண்டும் என களம் அமைத்தவர் கலைஞர்தாம்!
கூடவே, அறநிலையத் துறைக்குக் கீழாக உள்ள அத்தனை இந்துக் கோயில்களிலும், கோயிலில் ஈட்டப்படும் பொதுமக்கள் வருவாய் மூலம் , கோயில் பணி மட்டுமல்லாது, சித்த மருத்துவப் பணியும் நடக்க வேண்டும் என ஆணையிட்டு, அதில் கல்லூரியில் பயின்று வெளியான சித்த மருத்துவப் பட்டதாரிகளை நியமித்தும் சித்த மருத்துவம் பார்க்கச் சொன்னதும், அப்போதைய கலைஞர் அரசுதான்.
‘சித்தா’வுக்குச் சிறப்பு செய்தவர்
அந்தக் காலத்திலேயே, அதாவது 1970-களில், பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் மூலமாக, அப்போதைய அமைச்சர் அன்பழகன் வழியாக, கலைஞர் அரசுதான், அப்போது சுவடிகளாய் இருந்த பல முக்கிய சித்த மருத்துவ நூல்களை அச்சில் ஏற்றியது. ஹக்கீம் சாயுபுவுடைய ‘அனுபவ வைத்திய நவநீதம்’, ‘தேரன் மருத்து பாரதம்’ போன்ற சித்த மருத்துவ நூல்கள், அப்போது அச்சேற்றப்பட்ட மிக முக்கிய சித்த மருத்துவ நூல்கள். இன்றுவரை சித்த மருத்துவப் பாடத் திட்டத்துக்கு அடிப்படையான பெரும்பாலான பாடநூல்கள், அப்போதுதான் முதன்முதலாக அச்சிலேறின.
தற்போது சென்னை தாம்பரம் பிரதான ஜி.எஸ்.டி சாலையில் மிகப் பிரம்மாண்டாமாய் இயங்கி வரும் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்துக்கு அங்கே இடம் வழங்கியது கலைஞர் அரசுதான். அந்த இடத்தில் தாம்பரம் பேருந்து நிலையம் அமைக்க நெடுநாள் விண்ணப்பம் இருக்க, பல மூத்த சித்த மருத்துவர்கள் அந்த இடத்தை தேசிய சித்த நிறுவனத்துக்குக் கேட்டார்கள்.
அப்போது தாம்பரம் சானிடோரியத்தின் கண்காணிப்பாளாரக இருந்த பேராசிரியர் செ.நெ.தெய்வநாயகம், தேசிய சித்த மருத்துவ நிறுவனத்துக்கே இடம் அளிக்கலாம் எனப் பரிந்துரைக்க, கலைஞர் அதை ஏற்றுக் கொண்டு அனுமதி அளித்தும், பின்னர் இந்த மையத்துக்கு அடிக்கல் நாட்டியதும், சித்த மருத்துவ வரலாற்றில் மிக முக்கிய மைல்கல்.
இன்று தேசிய அளவில் நோயாளிகள் எண்ணிக்கையில், பிற ஆயுஷ் நிறுவனங்களைவிட முதலிடத்திலிருந்து பணியாற்றி வரும் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்துக்கு, பல மாவட்டங்களிலிருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் நோயாளிகள் வருவதற்கு கலைஞர் இந்த முக்கிய இடத்தை அளித்தது மிகப்பெரிய சிறப்பு.
கையெழுத்தால் வாழ்ந்த நிலவேம்பு
2006 டிசம்பரில் தமிழகமே சிக்குன்குனியா சுரத்தில் முடங்கிக் கிடந்தபோது, இந்திய நலவாழ்வு நல்லறத் தலைவர் பேரா செ.நெ.தெய்வநாயகம், அப்போது தமிழக திட்ட கமிஷன் துணைத் தலைவராயிருந்த பேரா. நாகநாதன் மூலமாக, ஒரு காலைப்பொழுதில் அண்ணா அறிவாலயத்தில் நடைப் பயிற்சியிலிருந்த கலைஞரிடம், சித்த மருத்துவ மூலிகையான நிலவேம்பின் மகத்துவத்தை அறிக்கையாகச் சமர்ப்பித்தார்.
அதை மிக உன்னிப்பாய்ப் படித்துப் பார்த்த கலைஞர், ‘இதை ஏன் தமிழகம் முழுவதும் பரவலாகக் கொண்டு செல்லக் கூடாது?’ என்ற கேள்வியுடன், அப்போதைய மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆரைக் கூப்பிட்டுச் சொல்லி, ‘மு.க.’ என அதன் மூலையில் தன் கையொப்பமிட்டு, அந்த அறிக்கையை அனுப்பி வைத்ததுதான், அன்று சிக்குன்குனியாவை தமிழகமெங்கும் நிலவேம்பு மூலம் கட்டுக்குள் வைக்க, உதவியது. அதன் பின் இன்றுவரை ஒவ்வொருமுறை, டெங்குவுக்கும், அத்தனை இல்லத்தரசிகளும் தன் வீட்டு அஞ்சறைப் பெட்டியில் நிலவேம்பை வாங்கி வைப்பதற்கும் கலைஞரின் அந்தக் கையெழுத்துதான் முதல் முனைப்பு.
பி.டி. கத்தரிக்காய்க்குத் தடை
‘சரியாய்ப் பத்து நிமிடம்தான்’ என கலைஞரின் செயலர் சண்முகநாதன் சொல்லி, கோபாலபுரத்து மாடி அறைக்கு ‘பூவுலகின் நண்பர்களாய்’ வந்திருந்த எங்களை அழைத்துச் செல்ல, நடந்தது வேறு. கிட்டத்தட்ட 55 நிமிடங்கள் பி.டி. கத்தரிக்காய் குறித்த எங்கள் கருத்துகளைக் கேட்டதோடு, ‘அந்த பேப்பரெல்லாம் கொடுப்பா...’ என அத்தனை தரவுகளையும் படித்துப் பார்த்துவிட்டு, ஏராளமான வாதிடல்களுக்கும் கேள்விகளுக்கும் பின்னர் ‘சரி பார்க்கலாம்’ எனப் புன்னகைத்தார்.
நாங்கள், ‘ஐயா, உங்கள் அரசு இதை அனுமதிக்கக் கூடாது, சூழல், விவசாயம், உடல் நலம் அத்தனைக்கும் இந்த பி.டி. கத்தரி ஆபத்தானது. மரபணுக் கசிவால், கத்தரிக்காய் மட்டுமல்லாது பல மூலிகைகளுக்கும் இதனால் ஆபத்து நேரக் கூடும். நம் தமிழ் மருத்துவத்துக்கும் இது ஏற்புடையதல்ல. தடை செய்யுங்கள்’ என அழுத்தமாய்ச் சொல்லி நகர்ந்து, சரியாய் 2 மணி நேரத்துக்கெல்லாம், ‘தமிழகத்தில் பி.டி. கத்தரி தடை’ என அரசாணை பிறப்பித்தார்.
காங்கிரஸின் நேசக்கட்சியாக இருந்தும், தன் தமிழ் மக்கள் மீதான அக்கறையை வெளிப்படுத்தினார் கலைஞர். அந்தத் தடை உத்தரவுதான் அப்போதைய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷின் இந்தியா மொத்தமுமான பி.டி. கத்தரிக்கான தடை கொடுக்க எடுத்த முடிவுக்கு, அரசியல் ரீதியான பெரும் பக்கபலமாக கலைஞரின் சொல் இருந்தது. தமிழ் மருத்துவத்துக்கும் தமிழ்ச் சமூகத்தின் உடல் நலத்துக்கும் கலைஞரின் பணி வரலாற்றில் தவிர்க்க இயலாத முக்கியத்துவம் கொண்டது!
கட்டுரையாளர், சித்த மருத்துவர்
தொடர்புக்கு: herbsiddha@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT