Last Updated : 04 Aug, 2018 10:58 AM

 

Published : 04 Aug 2018 10:58 AM
Last Updated : 04 Aug 2018 10:58 AM

எல்லா நலமும் பெற: தோட்டத்தால் குறையும் மன அழுத்தம்!

மூட்டுவலிக்கு இயற்கையான தீர்வு இருக்கிறதா?

மூட்டுவலியைத் தணிக்கும் களிம்பு களைவிடக் கூடுதலான நிவாரணத்தை மஞ்சள் தருவதாகத் தெரிவிக்கும் ஆய்வுகள் உள்ளன. தினசரி மஞ்சளை உட்கொண்டால் அதன் பலன் எட்டு வாரங்களில் வெளிப்பட வாய்ப்பிருக்கிறது. உட்கொள்ளும் மஞ்சளுடன் சிறிதளவு மிளகும் கலந்திருக்க வேண்டும்.

ஒரே இடத்தில் உட்காராமல் உடலைச் சுறுசுறுப்பாக வைத்திருப்பது எப்படி?

கணவருடனோ மனைவியுடனோ நடைப்பயிற்சி செல்லுங்கள். குழந்தைகள், செல்லப் பிராணியுடனும் காலையிலோ மாலையிலோ ‘வாக்’ போகலாம். படி ஏறும் இறங்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் லிஃப்டைப் பயன்படுத்தாமல் நடந்து செல்லுங்கள். நண்பர்களைச் சந்திக்கத் திட்டமிட்டால் நடந்துகொண்டே பேசும் இடங்களைத் தேர்ந்தெடுங்கள்.

கார்கள், இரு சக்கர வாகனங்களுக்குப் பதிலாகப் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துங்கள். தினசரி அலுவலகத்துக்குப் போகும்போதோ வீடு திரும்பும்போதோ இரண்டு நிறுத்தங்களுக்கு முன்னால் இறங்கி நடந்து பாருங்கள். தொலைக்காட்சியில் சேனல் மாற்றும்போது, ரிமோட்டைப் பயன்படுத்தாமல் எழுந்து சென்று டி.வி.யில் சேனலை மாற்றுங்கள்.

மன அழுத்தத்தைச் சரிசெய்யும் இயற்கை வழிமுறைகள் உண்டா?

தோட்ட வேலை செய்வதால் மன அழுத்தம் குறைந்து, நிறைவும் களிப்பும் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வாரத்துக்கு ஆறு மணி நேரமாவது தோட்டத்தில் செலவழிக்கிறவர்களுக்கு மன அழுத்தத்தின் தாக்கம் குறைவாக உள்ளது.

கோக் பானம் ஒரு கிளாஸ், ஆரஞ்சு பழச்சாறு ஒரு கிளாஸ். எது ரத்தத்தில் சர்க்கரையைக் கூடுதலாக அதிகரிக்கும்?

இரண்டுமே ஒரே அளவில்தான் சர்க்கரையை அதிகரிக்கும்.  ‘ஃப்ருக்டோஸ்’ அளவு இரண்டிலும் சமமாகவே உள்ளது. ஒருவகையில் ஆரஞ்சு பழச்சாற்றில் உள்ள கலோரிகள் கோக்கைவிட அதிகம்.

பிரெஞ்ச் ஃப்ரைஸ் போன்ற பொரித்த உணவுகள் நல்லவையா?

கார்போஹைட்ரேட் உணவை எண்ணெய்யில் பொரிக்கும்போது, நரம்புக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வேதிப்பொருளான அக்ரிலமைட் உற்பத்தியாகிறது. சிகரெட் புகையிலும் இந்த அக்ரிலமைட் உள்ளது. சிறுநீரகம், மார்பு, கருப்பைப் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியதாக அக்ரிலமைட் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x