Published : 30 Jan 2016 11:35 AM
Last Updated : 30 Jan 2016 11:35 AM
இங்கே இடம் பெற்றிருக்கும் ஓவியங்களைப் பாருங்கள். தேர்ந்த ஓவியர்களின் ஒரு சில தெறிப்புகளை இந்த ஓவியங்களில் உணர முடிகிறதா? இவற்றை வரைந்தது யாராக இருக்கும்?
தொழுநோய் இந்த வார்த்தையைக் கேட்டவுடன் ஏதோ அருவருப்பான விஷயத்தைத் தொட்டுவிட்டதைப் போலவே பலரும் விலகிப் போவார்கள், முகம் சுளிப்பார்கள். வார்த்தைக்கே இப்படி என்றால், இந்த நோய் தாக்கியவர்களை நம் சமூகம் எப்படி எதிர்கொள்கிறது என்பதைத் தனியாகச் சொல்லத் தேவையில்லை. நம் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டிருப்பவர்களின் பட்டியலில், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களும் தொடர்ந்து இடம்பெற்று வருகிறார்கள். 'அவர்களால் உழைக்க முடியாது' என்பது முதல் 'அவர்களுக்கு உணர்ச்சிகளைச் சிறப்பாக வெளிப்படுத்தத் தெரியாது' என்பதுவரை பல்வேறு மூடநம்பிக்கை கள் அவர்களைச் சூழ்ந்துள்ளன.
ஓவிய ஆச்சரியம்
இங்கே இடம்பெற்றுள்ள ஓவியங்களை வரைந்தவர்கள் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள். ஆச்சரியமளிக்கக்கூடிய இந்த ஓவியங்களுக்கு உருக்கொடுத்தவர்கள் அவர்கள்தான். செங்கல்பட்டுக்கு அருகேயுள்ள பாரதபுரத்துக்குப் போனால், தொழுநோய் பாதித்தவர்கள் கூட்டம்கூட்டமாக ஓவியம் வரைந்துகொண்டிருப்பதைப் பார்க்கலாம். ‘பிந்து ஓவிய முன்னெடுப்பு' என்ற மாறுபட்ட ஒரு திட்டத்தின் கீழ்தான், இது நடந்து வருகிறது. தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்கான தூண்டுகோலாக இந்தத் திட்டம் திகழ்கிறது.
தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் களால் சாதாரண வேலைகளையே செய்ய முடியாது என்ற மூடநம்பிக்கை நிலவிவரும் நிலையில், கற்பனைத் திறனின் உச்சங்களில் ஒன்றான ஓவியங்களை அவர்களால் படைக்க முடியும் என்பதை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது பிந்து ஓவிய முன்னெடுப்பு. இந்தத் திட்டத்தின் கீழ் படைக்கப்பட்ட ஓவியங்களின் கண்காட்சி, சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள தட்சிணசித்ராவில் பிப்ரவரி 3-ம் தேதிவரை நடைபெறுகிறது.
புறக்கணிப்பின் வலி
ஆஸ்திரியரான ஓவியர் வெர்னர் டார்னிக் 1977-ல் இந்தியா வந்தார். அப்போது வாராணசியிலும் நாட்டின் வேறு பல பகுதிகளிலும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கையேந்துவதையும் சமூகத்தில் மிக மோசமாக அவர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதையும் பார்த்து மனம் வருந்தினார். பல பத்தாண்டுகள் கடந்தும் இந்தியாவில் தொழுநோயாளிகளின் துயர வாழ்க்கையில் எந்தப் பெரிய மாற்றமும் ஏற்படவில்லை.
முற்றிலும் குணப்படுத்தக்கூடிய நோயாக இருந்தாலும், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களைச் சமூகம் முழு மனதுடன் ஏற்கவில்லை. இதன் தொடர்ச்சியாக நீண்ட சிந்தனைக்குப் பிறகு, அவருடைய மனதில் உதித்ததுதான் 'பிந்து ஓவிய முன்னெடுப்புத்' திட்டம்.
அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காகத் திரும்பவும் இந்தியா வந்தார். தொழுநோயாளிகளின் நலவாழ்வுக்காகச் செயல்பட்டுக் கொண்டிருந்த பத்மாவின் (முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமனின் மகள்) ஆதரவுடன் 2005-ம் ஆண்டில் இந்தத் திட்டத்தைத் தொடங்கினார். வெர்னர் டார்னிக்கும் அவருடைய மனைவியும் ஓவிய ஆசிரியையுமான டாக்மர் வோக்கும் ஒவ்வோர் ஆண்டும் சில மாதங்களுக்குப் பாரதபுரம் வந்து, ஓவியப் பயிற்சியளித்துச் செல்கிறார்கள்.
காட்சியும் கற்பனையும்
'பிந்து ஓவிய முன்னெடுப்புத்' திட்டத்தில் 25-75 வயது வரையுள்ளவர்கள் ஓவியப் பயிற்சி பெறுகிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் படிப்பறிவு இல்லாதவர்கள். அதேநேரம் இந்த ஓவியங்களின் கற்பனையிலோ, அதைக் காட்சியாக வெளிப்படுத்தும் தன்மையிலோ எந்த வகையிலும் குறை காண முடியவில்லை.
வாழ்க்கையில் எதிர்கொண்ட அனுபவங்கள், உள்ளார்ந்த மதிப்பீடுகள் போன்றவற்றை அவர்களுடைய ஓவியங்கள் பிரதிபலிக்கின்றன. ஒவ்வொரு ஓவியமும் முன்வைக்கும் எளிமையானதொரு கரு, ஓவியத்துக்கான வெளியைப் பயன்படுத்தியுள்ள முறை, அலங்காரங்கள் போன்றவை கவர்கின்றன. எதை வரைய வேண்டும்-எப்படி வரைய வேண்டும் என்று அறிவுறுத்தப்படாமல், வரைய வேண்டிய கருவை அவர்களாகவே தேர்ந்தெடுக்க வலியுறுத்தப்படுவதே இதற்கு முக்கியக் காரணம்.
புதிய பாதை
இங்குப் பயிற்சி பெறும் ஒவ்வொருவரும் சுயமாக ஓவியம் வரைவது மட்டுமில்லாமல், தொழுநோய் பாதிக்கப்பட்ட புதியவர்களுக்குப் பயிற்றுவிக்கவும் செய்கிறார்கள். இது அவர்களுடைய மனதுக்குப் பெரும் உத்வேகத்தை அளிக்கிறது. அவர்களுடைய ஓவியப் படைப்புகள் உலகின் கண்களுக்கு வரும்போது, புறக்கணிக்கப்பட்டவர்களாக இருப்பதிலிருந்து மதிக்கப்படுபவர் களாகவும் மரியாதையுடன் நடத்தப்படுபவர்களாகவும் அவர்களை உயர்த்துகின்றன.
தொழுநோயாளிகள் எந்த வேலையிலும் எளிதில் சேர்த்துக்கொள்ளப்படாத நிலையில், இந்தத் திட்டத்தில் பங்கேற்று ஓவியம் வரைவதன் மூலம் பொருளாதாரச் சுதந்திரத்தைப் பெறுகின்றனர். இவர்கள் வரையும் ஓவியங்கள் சர்வதேசக் கண்காட்சிகள், ஆன்லைன் மூலமாகவும், உள்ளூரிலும் விற்கப்படுகின்றன. கிடைக்கும் தொகை திட்டத்தில் பங்கேற்பவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. அத்துடன் திட்டத்தின் நிர்வாகச் செலவுகள் ஓவியம் வரையத் தேவையான பொருட்களை வாங்குவதற்கும் பயன்படுத்திக்கொள்ளப்படுகிறது.
வெறும் மருந்துகளால் மட்டும் ஒரு நோயை முற்றிலும் குணப்படுத்திவிட முடியாது. மருந்துகள் உடலைச் சீர் செய்தாலும், நோய் கண்ட மனிதனின் மனதைச் சீர் செய்து சுயமரியாதையுடன் வாழ்வதற்கான நம்பிக்கையை விதைத்தால் மட்டுமே முழுமையாகக் குணம் பெற்றதாக அர்த்தம். அந்த அரிய சிகிச்சையை 'பிந்து ஓவிய முன்னெடுப்புத்' திட்டம் செய்துள்ளது. புறக்கணிக்கப்பட்டவர்களுக்குக் கம்பீரமான வாழ்க்கையைத் தந்துள்ளது. நோய் பாதிக்கப்பட்டவர்களின் படைப்பாக்கத் திறன் அகழ்ந்தெடுக்கப்படும்போது, அவர்கள் வேறொரு பரிணாமத்தை அடைகிறார்கள். அதற்கான பாதையை ‘பிந்து ஓவிய முன்னெடுப்புத்' திட்டம் வகுத்துக் கொடுத்துள்ளது.
பிந்து ஓவிய முன்னெடுப்புத் திட்டம்
தொடர்புக்கு::w.dornik@utanet.at
இணையதளம்: http://www.bindu-art.at/
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT