Last Updated : 14 Jul, 2018 09:55 AM

 

Published : 14 Jul 2018 09:55 AM
Last Updated : 14 Jul 2018 09:55 AM

இனிப்பு தேசம் 14: சர்க்கரையின்றி காமத்துப்பால் இனிக்க…

னிப்பு நோயரின் அதிகக் கசப்பான தருணம், 50-களில் தங்களுக்கு ஏற்படும் உடலுறவுப் பிரச்சினைதான். ஆண் பெண் இருவருக்கும், கட்டுப்பாடற்ற சர்க்கரையால், உடலுறவில் ஆர்வமின்மை முதல், அதில் மகிழ்வாக ஈடுபட இயலாத நிலைவரை பல சிக்கல்கள் அப்போது ஏற்படும். இதனால் உருவாகும் உளவியல் சிக்கல்கள், உறவுச் சிக்கல்கள், குடும்பப் பிரச்சினைகள்… ஏராளம்!

காமத்தை இயல்பாக வெளிப்படையாகப் பேச இயலாத ஒரு சமூகத்தில், இந்தப் பிரச்சினையின் தீவிரம் இன்று சத்தமில்லாமல் அதிகரித்துவருகிறது. கூடவே இந்தக் கூச்சம் கொடுக்கும் மவுனத்தில், இதற்காகவென்றே கூச்சலிட்டு விற்கப்படும் சந்தர்ப்பவாத போலி மருந்துகளும் மருத்துவச் சந்தையில் நிறைய உள்ளன.

பெண்ணுக்கான பிரச்சினை

பெண்ணுக்கு இயல்பாகவே மாதவிடாய் முடியும் நேரத்தில் ஏற்படும் மன அழுத்தமும் அப்போது ஏற்படும் குடும்பச் சுமைகளும் ஒருபுறம் இருக்க, அதே நேரம் சர்க்கரையும் சேர்ந்துகொண்டால், அதைச் சரிவரக் கவனிக்காதபோது, அந்தப் பெண்ணுக்கு உடலுறவில் ஆர்வமின்மை உருவாகும்.

ஒருபக்கம் ஈஸ்ட்ரோஜன் குறைவு. இன்னொரு பக்கம் சர்க்கரைக் கட்டுப்பாடு இல்லாமல் போவதால், பாலியல் ஹார்மோனும் குறைவுபட, பெண் மனத்தில் எதிலும் ஈடுபாடில்லாத வெறுமை நிறைந்திருக்கும். அன்போடு அரவணைக்க வரும் கணவனிடமிருந்து விலகுவதும், இனிய முக மொழி மறந்து, கடுஞ்சொல் கசியும் முகத்தோடும் அவள் நடமாட, அங்கே உறவுச்சிக்கல் உதிக்கும்.

ஆணுக்கான பிரச்சினை

இதுவே ஆண்களில், அதுவரை ‘கண்ணே மணியே’ எனக் காதல் மொழி உதிர்த்த காலம் போய், பரபரப்பு முகம் காட்டத் தொடங்குவது நடக்கும். இட்லியைப் பரிமாறும்போது ‘என்ன ஆச்சு இவருக்கு?’ என ஆதங்கமாய் காரணம் தேடும்போது, அன்புடன் பரிமாறும் அவளின் காதலை ஒதுக்கித் திருப்பும் உதாசீனத்துக்கு ரத்தத்தில் இனிப்பு கூடியதே காரணம்.

‘அப்படியெல்லாம் இல்லை. அன்பும் ஆர்வமும் இருக்கிறது. ஆனால், மகிழ்வைக் கூட்டும் இறுதிக்கு எடுத்துச் செல்ல ரத்தம் மட்டும் ‘அங்கே’ பொங்க மறுக்கிறது’ என்பதுதான் பலரின் பிரச்சினை. குறிப்பாய் இன்சுலின் தேவைப்படாத, மருந்துகளால் சர்க்கரையைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் என்.ஐ.டி.டி.எம். (NIDDM – Non Insulin Dependent Diabetes Mellitus) நோயாளிகளுக்கு, இந்தச் சூழல் அதிகம் வருவதுண்டு. நவீன மருத்துவம் இதை, ‘எரக்டைல் டிஸ்ஃபங்‌ஷன்’ (Erectile dysfunction), அதாவது ஆணுறுப்பு விரைப்புத்தன்மைக் குறைபாடு என்கிறது.

விளைவு? அழகான, அற்புதமான கணங்கள் அத்தனையும் இருவருக்குள்ளும் அரைகுறையாய் முடிய, இருவர் இடையேயும் ஏமாற்றம் ஏராளமாய்ப் பற்றிக்கொள்கிறது. இந்நிகழ்வு அடிக்கடி நிகழும்போது, இனிப்பு நோயருக்கு இயல்பாய் தாழ்வு மனப்பான்மை தொற்றிக்கொள்வதும், ‘மோகத்தைக் கொன்றுவிடு. அல்லால் எந்தன் மூச்சை நிறுத்திவிடு’ எனத் தொடர்பில்லாமல் பாடத் தொடங்குவதும்கூட, அந்த விரக்தியில் வாடிக்கையாகிவிடுகிறது.

போலிகள் ஜாக்கிரதை

சர்க்கரைக் கட்டுப்பாடுதான் வரும் முன் காக்கும் ஒரே வழி. என்னதான் மருந்துகள் உதவியால், இந்தச் சிக்கலைக் களைய முடியும் என்றாலும், கவிதையாய் எழுத வேண்டிய காமத்தை, டியூஷன் வைத்துக் கணக்குப் பாடம் படிக்க வேண்டியது மாதிரியான கட்டாயம் ஏற்படும் என்பது வலியுடன் கூடிய உண்மை!

மூலிகைகள் முதல் வயாகராக்கள்வரை இன்று ஏராளமான மருந்துகள் வந்தாகிவிட்டது. ஆனால், கடையடைக்கும்போது கடைப் பையனிடம் போய், நள்ளிரவு டாக்டர் ஹஸ்கி குரலில் சொன்ன ‘அந்தக் குதிரைப் படம் போட்ட மருந்து’ எனக் கேட்டு வாங்குவது இன்னும் அதிகம் நடக்கும் ஒன்று. பல மருந்துக் கடைகளின் லாபக் கணக்கைத் தீர்மானிப்பதே இந்த வணிகம்தானாம்.

குறை ரத்த அழுத்தம் இருந்தாலோ, இதய தசைத் தளர்வு இருந்தாலோ, சரியான பரிந்துரைச்சீட்டு இல்லாமல் வாங்கப்படும் இந்த வேதி மருந்துகள் விபரீத விளைவைத் தரலாம். ஏதேனும் ஒரு துறை சார்ந்து பயின்று, அறத்துடன் பணியாற்றும் மருத்துவரை அணுகி, உரிய மருந்துகளைப் பெறுவது மட்டுமே சரியான வழி.

சுய பரிந்துரை வேண்டாம்

பூனைக்காலி விதை இச்சிக்கலில் சித்த மருத்துவம் காட்டும் மிக எளிய மருத்துவப் பயறு. ‘வெல்வெட் பீன்ஸ்’ (Velvet beans) என ஆப்பிரிக்கர்கள் அடிக்கடி உணவில் ருசிக்கும் இந்தப் பயறை, சித்த மருத்துவம் இனிப்பு நோயில் வரும் விரைப்புத்தன்மைக் குறைபாட்டுக்குப் பயன்படுத்துகிறது.

சாலாமிசிரி வேர், நெருஞ்சி முள், நீர்முள்ளி விதை, குறுந்தொட்டி வேர், களிப்பாக்கு, மராட்டி மொக்கு, சீமை அமுக்கரா கிழங்கு வேர் என இதற்குப் பயன்படும் மூலிகைகள் ஏராளம். எதை, யாருக்கு, எந்த அளவில், எப்படிச் சீராக்கிக் கொடுக்க வேண்டும் என்பதை சித்த மருத்துவர் அறிவர். அங்கு செல்லாமல், ஆன்லைனிலோ இருட்டில் உலாவும் கடையிலோ வாங்கி ஏமாறாமல், குடும்ப மருத்துவர் உதவியுடன் முறைப்படி பெறலாம்.

ஆரோக்கியமான தாம்பத்திய உறவு, நல வாழ்வின் அடித்தளம். அதைச் சிதைவுறாமல் வைத்திருப்பதற்கு இனிப்பைக் கட்டுப்பாட்டில் வைப்பது மிக முக்கியம். மருந்துகளைவிட நடைப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி, யோகாசனங்கள், முறையான உணவுக் கட்டுப்பாடு போன்றவை இந்தச் சிக்கலில் பயனளிப்பதைப் பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. முதுமையிலும் இனிமையாய்க் காதல் செய்ய, இனிப்பு நோயை வெல்வது மிக மிக அவசியம்.

(தொடரும்)

கட்டுரையாளர்,

சித்த மருத்துவர்

தொடர்புக்கு: herbsiddha@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x