Published : 28 Jul 2018 11:00 AM
Last Updated : 28 Jul 2018 11:00 AM

ஆரோக்கியமான மூளைக்குச் சுத்தமான காற்று!

2014-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஜூலை 22 அன்று ‘உலக மூளை தினம்’ அனுசரிக்கப்படுகிறது. சுற்றுப்புறத்துக்கும் மூளைக்கும் உள்ள தொடர்பை வலியுறுத்தவும், மூளையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் இந்த தினம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்ற வருடம் பக்கவாதத்தைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த வருடம் ‘சுத்தமான காற்றே, மூளையின் ஆரோக்கியம்’ என்பதுதான் இந்த தினத்தின் மையக் கருத்து.

 நம்மால் உணவு, நீர் ஆகியவை இல்லாமல் ஒரு வாரம் வரை உயிர் வாழ முடியும். ஆனால், காற்று இல்லாமல் ஐந்து நிமிடம்கூட இருக்க முடியாது. நாம் ஒரு நாளைக்கு 22 ஆயிரம் முறை சுவாசிக்கிறோம், 16 ஆயிரம் முறை காற்றை உள்ளிழுத்து வெளிவிடுகிறோம். நாம் சுவாசிக்கும் இந்தக் காற்றில் 78 சதவீதம் நைட்ரஜனும் 21 சதவீதம் ஆக்ஸிஜனும் மீதமுள்ள 1 சதவீதம் கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு, சல்ஃபர் ஆக்சைடு, ஓசோன், மீத்தேன் என்று இன்னும் பல வாயுக்களும் கலந்துள்ளன. வளர்ந்துவரும் நாகரிகத்தாலும், வாகனங்களின் அதிகரிப்பாலும், தொழிற்சாலைகளின் தொடர் இயக்கத்தாலும், காற்று மாசுபடுவதும் அதிகரித்துவருகிறது.

 நச்சுத்தன்மையுள்ள வாயுக்கள் நாம் வாழும் இந்தப் பூமியின் காற்றை மாசுபடுத்திய வண்ணமே உள்ளன. காற்றுதானே மாசுபடுகிறது அதனால் நமக்கென்ன கவலை என்று நாம் யாரும் ஒதுங்கிவிட முடியாது. நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு குறையக் குறைய, நச்சுத்தன்மையுள்ள நுண்வாயுக்களின் அளவு அதிகரிக்க அதிகரிக்க, மனிதர்கள் பல்வேறு நோய்களால் இறக்க நேரிடும்.

 மூளையைப் பாதிக்கும் காற்று

 காற்று மாசுபடுவதால் ஒரு வருடத்துக்கு 90 லட்சம் முதல் 120 லட்சம்வரையானோர் இறக்கிறார்கள். பக்கவாத நோய் 25 சதவீதமும் மாரடைப்பு நோய் 25 சதவீதமும் நுரையீரல் நோய் 43 சதவீதமும் புற்றுநோய் போன்ற நோய்களும் அதிகரித்த வண்ணமே உள்ளன. காற்று மாசுபடுவதால் நுரையீரல் நோய் வரும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், காற்றும் கபாலத்தினுள் இருக்கும் மூளையும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையது. காற்று மாசுபட்டால் நமது மூளையிலும் பாதிப்பு ஏற்படும் என்கின்றன புதிய ஆய்வுகள். எப்படி?

நமது மூக்கில் உள்ள ஆல்ஃபாக்டரி எபிதீலியம் எனும் உறுப்பு, நாம் வாசனையை உணர்வதற்கு உதவுகிறது. இதுவே நம் மூளையையும் காற்றையும் தொடர்புபடுத்துகிறது.

நமது மூக்கின் வழியாக உள்ளிழுக்கும் காற்றில் மாசு கலந்திருக்கும்போது, மாசின் அளவைப் பொறுத்து பாதிப்பு ஏற்படுகிறது. மாசுத் துகளின் அளவு அதிகமாக இருந்தால், நமது மூக்கில் இருக்கும் முடியானது துகள் உள்ளே செல்லாமல் தடுக்கிறது. இந்தத் துகளானது கொஞ்சம் சிறியதாக இருந்தால் நமது தொண்டைப் பகுதிவரை செல்கிறது. ஆனால், இந்தத் துகள் நுரையீரலைச் சென்றடையாமல், நாம் இதை இருமல் மற்றும் தும்மல் வழியாக வெளித்தள்ளுகிறோம். இந்தத் துகள், மிகவும் நுண்ணிய அளவில் இருந்தால் ஆல்ஃபாக்டரி எபிதீலியம் வழியாகச் சென்று மூளையில் படிந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.

குழந்தைகளுக்கும் பாதிப்பு

அசுத்தமான காற்றைச் சுவாசிப்பதால் நச்சுத்தன்மையுள்ள துகள்கள் மூக்கில் ஆல்ஃபாக்டரி எபிதீலியம் வழியாக மூளையைச் சென்றடைந்து ‘பிளட் பிரெய்ன் பேர்ரியர்’ (Blood Brain Barrier) எனும் மூளையின் பாதுகாப்பு வளையத்தைச் சிதைத்து விடுகிறது. அதனால் சாதாரணமாக மூளைக்குள் நுழைய முடியாத பல கிருமிகள், வேதியியல் பொருட்கள் போன்றவை மூளையைத் தாக்கி ‘இம்யூன் டிஸ்ரெகுலேஷன்’ (Immune Dysregulation) என்ற பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ‘மல்டிபிள் ஸ்கெலரோசிஸ்’ (Multiple Sclerosis) எனப்படும் கொடிய வியாதி மூளையைத் தாக்கிப் பல உயிர்கள் இறக்கின்றன. மூளையில் ஞாபகத் திறன் குறைந்து மூளை தன்னிலை இழந்து நிற்கும். எனவே, காற்றைச் சுத்தமாக வைக்க முயல்வோம்!

குழந்தைகளின் மூளையானது முதல் ஆயிரம் நாட்களில்தான் (அதாவது 2¾ வயதுக்குள்) 90 சதவீத வளர்ச்சியைப் பெறுகிறது. இந்த நாட்களில் குழந்தை, மாசுபட்ட காற்றைச் சுவாசிப்பதால், இந்த நச்சுப் பொருட்கள் மூளையில் உள்ள வெள்ளைப் படலத்தைப் பாதிக்கிறது. இதனால் குழந்தையின் அறிவுத்திறன் பாதிக்கிறது. அதுமட்டுமல்லாமல் குழந்தையின் நடவடிக்கையிலும் மாறுதல் ஏற்படுகிறது. அந்தக் குழந்தையிடம் கோபமும் சமூகத்துக்கு எதிரான சிந்தனைகளும் அதிகரிக்கின்றன.

மாசுபட்ட காற்று, நமது மரபணுவையே பாதிக்கும் தன்மை கொண்டது. இதனால் நாம், கற்பனைகூடச் செய்து பார்க்க முடியாத அளவுக்குச் சிறுவயதிலேயே பல நோய்கள் வருவதற்குக் காரணமாக அமைகிறது.

பெரும்பாலான மக்கள் ‘பாடி ஸ்பிரே’, ‘கார் ஸ்பிரே’, ‘ரூம் ஸ்பிரே’ எனப் பலவித வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்துகிறார்கள். இதனாலும் காற்று மாசுபடுகிறது. இதில் உள்ள நுண் துகள்கள் நுரையீரல், மூளை, தோல் ஆகியவற்றைப் பாதித்து, நமது நோய் எதிர்ப்பாற்றல் சக்தியை நமக்கு எதிராகவே வேலை செய்யத் தூண்டுகிறது. இதனால் வாழ்நாள் முழுவதும் மாத்திரைகளை உட்கொள்ளும் நிலை ஏற்படும். அப்படி உட்கொண்டாலும் இந்த நோய் முழுமையாகக் குணமாவதில்லை என்பதுதான் வேதனைக்குரியது!

காற்று மாசுபடாமலிருக்க நாம் செய்ய வேண்டியவை

 வாகனங்களிலிருந்து வரும் புகை, மாசுக் கட்டுப்பாட்டு அளவுக்குள் உள்ளதா என்று மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதிக்க வேண்டும்.

தெருவில் சேரும் குப்பைகளைத் தீமூட்டக் கூடாது.

சைக்கிள் பயன்பாட்டை அதிகரித்து, எரிபொருள் மூலம் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்.

நம் வீட்டில் காற்றைச் சுத்தப்படுத்தும் தொட்டிச் செடிகளை வளர்க்கலாம். துளசி, கற்றாழை, மஞ்சள், மணி ப்ளான்ட், ஓமவல்லி, புதினா ஆகிய சிறிய செடிகள் காற்றைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டவை. வேப்பமரம், புங்கமரம் ஆகிய இரண்டையும் வளர்க்கலாம்.

கட்டுரையாளர்,

மூளை நரம்பியல் நிபுணர்,

தொடர்புக்கு: drveni1980@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x