Published : 14 Jul 2018 09:53 AM
Last Updated : 14 Jul 2018 09:53 AM
மீன்கள் விரைவில் கெட்டுப்போகாமல் இருப்பதற்காகப் புற்றுநோயை உண்டாக்கும் பார்மலின் வேதிப்பொருள் ஊட்டப்பட்டு விற்கப்படுவது சமீபத்தில் தெரியவந்திருக்கிறது. சென்னை சிந்தாதிரிப்பேட்டை, காசிமேடு ஆகிய பெரிய மீன் சந்தைகளில் ‘தி இந்து’ (ஆங்கிலம்) சார்பாக 30 மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில் 11 மாதிரிகளில் பார்மலின் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்தப் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
மீன்களைப் பாதுகாக்க வழக்கமாகப் பயன்படுத்தப்படும் புற்றுநோய்க் காரணியான வேதிப்பொருளின் அளவைப் பரிசோதிக்க நடத்தப்பட்ட ஆய்வின் முடிவு இது. ஜூலை 4, 8 தேதிகளில் இந்த மீன் மாதிரிகள் வாங்கப்பட்டன. அன்றே பரிசோதனையும் செய்யப்பட்டது. தமிழகத்தில் மீன்களுக்கு பார்மலின் ஊட்டப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் முதல் நிகழ்வு இது.
ஏற்படும் பாதிப்புகள்
பார்மலின் கலந்த மீனைச் சாப்பிடுபவர்களுக்குக் கண், தொண்டை, தோல், வயிற்றில் நமைச்சல் போன்றவை முதல் கட்டமாக ஏற்படும். தொடர்ந்து உட்கொள்பவர்களுக்குச் சிறுநீரகம், கல்லீரல் பாதிக்கப்பட்டு் புற்றுநோயை ஏற்படுத்தும்.
தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு அனுப்பப்படும் மீன்களில் பார்மலின் சேர்க்கப்படுவதாக அந்த மாநிலத்தில் எழுந்த பீதியை அடுத்து, இந்திய உணவுப் பாதுகாப்பு - தர ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மாநிலம் முழுவதும் மீன் சந்தைகளிலும் துறைமுகங்களிலும் தற்போது பரிசோதனைகளை நடத்தி வருகின்றனர்.
எப்படி அறிவது?
‘தி இந்து’ நடத்திய பரிசோதனையில் பன்னா, பாறை, கிழங்கான், வெளிச்சி மீன்களில் 20 பி.பி.எம். அளவு பார்மலின் உள்ளது தெரியவந்துள்ளது. சுறா, ஆக்டோபஸ், ஏரி வவ்வால், ஒட்டுக் கணவாய், பேய்க் கணவாய், கெளுத்தி ஆகிய மீன்களில் 5 பி.பி.எம். அளவு பார்மலின் இருந்துள்ளது.
பார்மலின் சோதனைக்காக, மீனிலிருந்து இரண்டு கிராம் எடையுள்ள இறைச்சி எடுக்கப்பட்டு நான்கு மில்லி லிட்டர் செறிவு தளர்த்தும் திரவத்தில் இடப்படும். நன்கு குலுக்கப்பட்ட பிறகு மீனில் பார்மலின் இருந்தால் தனியாக வெளியே வரும். அந்த திரவத்தை வினையூக்கி திரவம் உள்ள குப்பியில் இட்ட பிறகு அந்த திரவம் மஞ்சளாக மாறினால் பார்மலின் உள்ளது என்று அர்த்தம்.
சிவப்பெல்லாம் புதிதல்ல
இதுதொடர்பாக, மீன் சந்தை நிபுணர்களிடம் பேசியபோது, “பார்மலின் அல்லது பார்மால்டிஹைடு திரவம் மீன் மீது தூவப்பட்டோ ஊசி மூலம் செலுத்தப்பட்டோ சந்தைக்கு வருகிறது. பார்மலின் திரவத்தில் மீன்களை அமிழ்த்தியும் வைக்கிறார்கள். இதனால் மீன் குறிப்பிட்ட காலத்தைத் தாண்டியும் கெடாமல் இருக்கும்.
மீன்கள் புதிதாகப் பிடிக்கப்பட்டனவா என்பதை அறியப் பொதுவாகச் செவுள்களைப் பார்த்து வாங்குவார்கள். செவுள் ரத்தச் சிவப்பில் இருந்தால் புது மீன்கள் என்று அர்த்தம். ஆனால் பார்மலின் ஊட்டப்பட்ட மீன்களின் செவுள்களும் நீண்ட நேரத்துக்கு ரத்தச் சிவப்பு நிறத்திலேயே இருக்கும். சில நேரம் செவுள்களில் குங்குமத்தை வைத்து ரத்தச் சிவப்பு நிறத்தைக் கொண்டுவருவார்கள். இதனால் எது நல்ல மீன் என்பதைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படும். இப்படித்தான் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment