Published : 26 May 2018 11:43 AM
Last Updated : 26 May 2018 11:43 AM
கா
லை உணவில் காட்டும் அக்கறை, பல நோய்களில் இருந்து நம்மைக் காக்கும். கூடவே சூழலியல் பிரச்சினைகளில் இருந்து, உணவு அரசியலின் வணிகப் பிடியில் இருந்து நம் தேசத்தையும் சேர்த்தே காக்கும். 120 கோடி மக்களின் உணவுச் சந்தையைக் கைப்பற்ற, நமக்கு மூளைச்சலவை செய்ய என பல உத்திகளுடன் "வசதி, துரிதம், சத்து நிறைந்தது, சுவையானது, அடுப்பங்கரையில் அதிகம் மெனக்கெடத் தேவையற்றது" என்கிற கூப்பாடுகளுடன், பல சக்கை உணவுகளை நம் முன் கொட்டுகின்றன பல உணவு நிறுவனங்கள்.
இவற்றின் பெருக்கத்துக்கும் இந்திய தேசம் இனிப்பு தேசமானதுக்கும் பின்னால் தொடர்பு இருக்கிறது. இந்தத் துரித உணவு வகைகள் நம் உடலை நாசம் செய்கின்றன. அவற்றைச் சுமந்துவரும் பிளாஸ்டிக் புட்டிகளும் தயாரிக்கப் பயன்படுத்தும் ரசாயனங்களும் இந்த பூமியை நாசம் செய்கின்றன.
இங்கு மட்டுமல்ல உலகெங்கும் இந்தச் சிக்கல் உண்டு. எக்குத்தப்பாக, வீரிய ரகங்களாகவும், மரபணு மாற்றம் செய்தும் தேவைக்கு அதிகமாக மக்காச் சோளத்தை உற்பத்தி செய்து குவித்தார்கள். பின்னர், விளைந்த சோளத்தை என்ன செய்யலாம் என யோசித்த கம்பெனிகள், அதிலிருந்து High fructose corn sugar-ஐ உருவாக்கினார்கள். இனிப்புச் சுவையுள்ள அத்தனை உணவிலும் இந்தப் பொருளைச் சேர்த்து, இந்த இனிப்பை பல லட்சம் டன் புழங்கவிட்ட பின்னர்தான் உலகின் நீரிழிவு நோயின் புள்ளிவிவரம் தடாலடியாக உயர்ந்தது.
கேரி டௌபேஸ் எனும் அறிவியல் எழுத்தாளர் தன்னுடைய The Case Against Sugar; Why We Get Fat; Good Calories, Bad Calories ஆகிய நூல்களில் சந்தை உணவுக்கும் உலகின் நீரிழிவு நோய்ப் பெருக்கத்துக்கும் இடையே உள்ள தொடர்பை மிகத் துல்லியமாக விவரித்துள்ளார்.
பிளேக்ஸ் சாப்பிடலாமா?
அரக்க பறக்க, அவசரமாக அள்ளிச் சாப்பிடுவோருக்கு நீரிழிவு நோய் தாக்கம் இருக்கும் அல்லது ஏற்கெனவே நீரிழிவுக்குப் பாதை அமைந்திருக்கும். நொறுங்கத் தின்றால் நூறு வயது என நம் முன்னோர் சொன்னது இதற்காகவும் சேர்த்துத்தான். ஒரு கையில் கார் ஸ்டியரிங் இன்னொரு கையில் சாண்ட்விச் என சாப்பிட்டுக்கொண்டே பயணிப்பவர் சாலையில் மட்டுமல்ல, உடலிலும் விபத்தை ஏற்படுத்துகிறார் என்பதில் சந்தேகமில்லை.
துரிதமாகச் சாப்பிட வேண்டும் என்பதற்காக தயார் நிலை அவலை (பிளேக்ஸ்), அவதி அவதியாகப் பாலூற்றிச் சாப்பிடுவோருக்கும் இதே கதிதான். முதலில் மெல்ல மெல்லப் பற்களால் உணவை நொறுக்கி, உமிழ்நீரின் 'சலைவரி அமைலேஸ்' எனும் நொதி, உணவோடு சீராக உறவாடும்படி மென்று சாப்பிடப் பழக வேண்டும். கிணற்றில் கல் போடுவதுபோல் உணவை இரைப்பைக்குள் எறியக் கூடாது.
காலையில் ரத்தத்தில் சர்க்கரையைத் தடாலடியாக சேர்க்காத ‘குறைந்த சர்க்கரை' (லோ கிளைசிமிக்) தன்மை உள்ள பட்டைதீட்டாத சிறுதானிய உணவை நீரிழிவு நோயாளர் சாப்பிடலாம்.
முதலில் கொஞ்சம் காய்கறித் துண்டுகள், கூடவே அதிக இனிப்பு இல்லாத கொய்யா, பப்பாளி முதலான பழத்துண்டுக்ளைச் சாப்பிட வேண்டும். பழச்சாறுகள் வேண்டாம். கீரை சூப் குடிக்கலாம். சூப்பை கூழாக மாற்றப் பயன்படுத்தப்படும் சோள மாவு வேண்டாம். ரசத்தைப் போலிருந்தால் போதும். இன்னும் பசித்தால், சிறுதானியப் பொங்கல் அல்லது உப்புமா/கிச்சடி ஆகியவற்றைக் குறைந்த அளவு, உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் அளவில் சாப்பிடலாம்.
தானியக் கஞ்சி நல்லது தானே?
நிறைய பேர் எல்லா தானியங்களையும் ஒன்றாக மாவாக்கி, 'கஞ்சி, தோசை - அதுக்கு தொட்டுக்க கெட்டிச் சட்னி' எனச் சாப்பிடுகின்றனர். சிறுதானியத்தின் முழுப்பலன் வேண்டுமானால், அவற்றை மாவாக்காமல் முழு தானியமாகவே பொங்கலாகவோ உப்புமாவாகவோ சாப்பிட வேண்டும். பட்டை தீட்டி வெள்ளை வெளேர் என சிறு தானியத்தையும் இன்று சந்தையில் புழங்கவிட ஆரம்பித்துவிட்டார்கள்.
அதை வாங்கி தோசை மாவாக்கி 'நானும் சிறிதானியம்தான் சாப்பிடுறேன்' எனச் சொல்வதில் பலன் இல்லை. சிறுதானிய காய்கறிக் கிச்சடி, சிறுதானிய இட்லியைவிட நிச்சயம் மேல்.
இன்னொரு முக்கியமான விஷயம். களி, கஞ்சி எல்லாம் நீரிழிவு நோயருக்கு அவ்வளவு நல்லதல்ல. கேழ்வரகு / ராகிக் கஞ்சி உடலுக்கு கால்சியம், இரும்பு, இன்னபிற பல சத்துக்கள் கொடுக்கக்கூடியது என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், குழந்தைகளுக்குத்தான் இது மிகச் சிறந்தது. நீரிழிவு நோயுள்ளோருக்கு இக்கஞ்சியின் கார்போஹைட்ரேட்டும் வேகமாக உடலுள் உறிஞ்சப்பட்டுவிடும்.
தற்போது பல நீரிழிவு நோயர்கள் காலையில் இந்த கஞ்சியை அருந்தும் பழக்கம் இருக்கிறது. அது தவறு. ராகி மாவை அடையாகச் செய்து சாப்பிடலாம். அதில் சிறிய வெங்காயம், முருங்கைக் கீரை சேர்த்துச் சாப்பிடுவது ராகியின் பலனைக் கூட்டும். கூடவே அதில் உள்ள கார்போஹைட்ரேட் வேகமாக ரத்ததில் சேர்வதைத் தாமதப்படுத்தவும் செய்யும்.
உணவை மாற்றுங்கள்
வெள்ளை வெளேர் மல்லிகைப்பூ இட்லி, நீரிழிவு நோயாளிக்கு மட்டுமல்ல, எவருமே ஆசைப்படுவது நல்லதல்ல. வீட்டில் எப்போதுமே தூயமல்லி, குள்ளக்கார் சம்பா அல்லது குதிரைவாலி அரிசியும், தோல் நீக்காத முழு உளுந்தும் வெந்தயமும் சேர்ந்த தோசை மாவில் செய்த இட்லி, கம்பு - சோள தோசை, கேழ்வரகு கீரைப் புட்டு (அது என்ன கேழ்வரகு கீரைப் புட்டு? கேள்விப்பட்டதே இல்லையே என்போர், இலங்கை நண்பர்களிடம் செய்முறையைக் கேளுங்கள்) எனச் சாப்பிட ஆரம்பித்தால், நீரிழிவின் பக்கம் வராதிருக்க முடியும்.
பழத்துண்டுகளைக் காலை உணவுக்கு முன்னதாகச் சாப்பிடுவதும், உணவுக்கு பின் இன்னொரு காபி சாப்பிடும் பழக்கத்தை தவிர்ப்பதும்கூட நீரிழிவை தள்ளிப்போடும். பசி வந்தால் பத்தும் பறக்கும் எனச் சொல்லி, பசி நேரத்தில் எப்போதும் கோபத்தில் குதிக்கிறீர்களா? ஒரு எட்டு நடந்து போய், GTT எனும் Glucose Tolerance Test பரிசோதித்துப் பாருங்கள். ஒருவேளை சர்க்கரைக்கு முந்தைய நிலையான Impaired Glucose Tolerance நிலை உங்களுக்கு இருக்கலாம். இப்போதிருந்தே உணவில், உடற்பயிற்சியில் கவனமிருந்தால் IGT நிலை, முழு நீரிழிவு நோயாக மாறாமல் தடுக்கலாம். அல்லது தாமதிக்க வைக்கலாம்.
(தொடரும்)
கட்டுரையாளர், சித்த மருத்துவர்
தொடர்புக்கு: herbsiddha@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT