Published : 14 Apr 2018 10:52 AM
Last Updated : 14 Apr 2018 10:52 AM
செ
ன்ற வாரம், செல்ஃபி குறித்துப் பார்த்தோம். அது ஏற்படுத்தும் மனச்சோர்வு பற்றித் தெரியுமா? பதின் வயதினர் தம்மைச் சுற்றி இருப்பவர்கள் மத்தியில், அவர்களைப் பற்றி ஒரு பிம்பத்தை உருவாக்கும் முயற்சியில் இருப்பார்கள். அதேபோல் தன் உடல், தோற்றம் போன்றவற்றில் அதிக அக்கறை செலுத்துவார்கள். தம் தோற்றத்தை மேம்படுத்திக் காட்ட எந்த எல்லைக்கும் செல்வார்கள். சமூகத்தின் மத்தியில் தன் தோற்றம் எவ்வாறு எடுத்துக்கொள்ளபடுகிறது என்பதைப் பொறுத்து அவர்களின் மனநிலையில் மாற்றம் இருக்கும்.
பதின் வயதினரின் இந்த வளர்ச்சி நிலையில்தான் செல்ஃபி பல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. ஒரு செல்ஃபி எடுத்து, அதைப் பகிர்ந்துவிட்டபின் அதற்கு வரும் கருத்துகள் நேரடியாக அவர்கள் மனநிலையில் பல தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. தன் பதிவுக்குத் தொடர்ந்து நேர்மறையான கருத்துகள் வந்தால், அவர்கள் மெல்ல நார்ஸிஸத்தை நோக்கி நகர்வார்கள். ‘நார்ஸிஸம்’ என்பது தன்னை முன்னிலைப்படுத்தும் ஒரு வித மனநோய்.
அதிகப்படியான எதிர்மறை கருத்துகள் வந்தால், தன் உடல் மீதும், தன் சுயத்தின் மீதும் வெறுப்புக்கொள்வது, மனச்சோர்வடைவது, மன உளச்சலுக்கு ஆளாவது என மீண்டும் மனநோயின் வசம் சிக்கிக்கொள்கிறார்கள். செல்ஃபி மோகம் ஏற்படுத்தும் உளவியல் பிரச்சினைகளைப் பற்றி நடந்த பல ஆய்வுகள் இதை உறுதிசெய்கின்றன. ஆம், எப்படிப் பார்த்தாலும் செல்ஃபி என்பது இரண்டு பக்கமும் கூர்மையான ஆயுதம்தான். ஆனால், எந்தப் பக்கத்தை நல்லபடியாகப் பயன்படுத்தினால், அது நல்ல ஆயுதமாக இருக்கும் என்று சொல்ல முடியாது.
டிஜிட்டல் எனும் மாத்திரை
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ‘டிஜிட்டல் உலகம்’ என்பதுதான் எதிர்காலம். அதற்குப் பின்னால் பெரும் வணிகம் இருக்கிறது. அது தொடர்பான பன்னாட்டு நிறுவனங்கள், தங்களின் சந்தையைக் கட்டுப்படுத்த என்ன வேண்டுமானாலும் செய்யும். அவர்களை எதிர்த்துப் போராட நமக்கு விழிப்புணர்வு தேவை. எனவே அதை முன்னிட்டு, கடந்த சில மாதங்களாக டிஜிட்டல் துறையைப் பற்றியும் அதனால் ஏற்படும் மாற்றங்களைப் பற்றியும் தகவல்களைப் பகிர்ந்துகொண்டேன்.
வீடியோ கேம்கள் முதல் ‘கூகுள் ஹோம்’ வரையிலான இதர டிஜிட்டல் சாதனங்கள் நம் வாழ்வை மேம்படுத்தவும் செய்கின்றன, கொஞ்சம் அசந்தால் நம் வாழ்க்கையைச் சூறையாடவும் செய்கின்றன. நாம்தான் அதன் சாதக பாதகங்களை நன்கு அறிந்து மிகவும் கவனமாகக் கையாள வேண்டும்.
ஒரு கேள்வி கேட்கிறேன். உங்களுக்கு ஒரு மாத்திரை கொடுக்கிறார்கள். அந்த மாத்திரயை உண்டால் உங்களுக்கு உற்சாகம் பொங்கும், நீங்கள் நினைத்த காரியத்தை எல்லாம் செய்து முடிக்கும் ஆற்றல் கிடைக்கும். ஆனால் ஒன்று, அந்த மாத்திரையின் பின்விளைவுகளை இதுவரை சோதித்துப் பார்க்கவில்லை என்கிறார்கள். அந்த மாத்திரையை உண்டால் அதன் உடனடிப் பலனை பட்டியலிடுபவர்கள், அதன் நீண்டகால பின்விளைவுகளைப் பற்றித் தெரியாதவர்கள். நீங்கள் அந்த மாத்திரையை உண்பீர்களா? உங்கள் பிள்ளைகளுக்கும் அந்த மாத்திரயைக் கொடுப்பீர்களா?அந்த மாத்திரைதான் டிஜிட்டல் கருவிகள்.
விவாதித்தபடி இருப்போம்
இன்றுவரை நடந்த எந்த ஆய்வுகளை எடுத்துக்கொண்டாலும், டிஜிட்டல் உலகம் மனிதர் மீது ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றி ஆதரவாகவோ எதிராகவோ வாதாடப் போதுமான அறிவியல்பூர்வமான முடிவுகள் இல்லை. இருக்கும் அனைத்து ஆய்வுகளும் தொடக்க நிலையிலேயே உள்ளன. நாம் இப்போது கண்கூடாகப் பார்ப்பது இன்றைய நன்மை தீமைகள் மட்டும்தான். சில பத்து ஆண்டுகளில் அதன் தாக்கம் என்னவாக இருக்கும் என்று ஊகிக்க முடியாது.
நம்மிடம் இருப்பது பரிசோதனைகளுக்கு உட்படாத மாத்திரை. உடனடி பலன்களைக் கருத்தில் கொள்ளாமல், நீண்டகால நோக்கில் விழிப்புடன் இதை அணுகுவதே நலம்.
இந்தத் தொடர் முடிவுற்றதாக நான் கருதவில்லை. ஒரு விவாதத்தின் தொடக்கமாகக் கருதுகிறேன். வருங்காலத்தில் டிஜிட்டல் உலகத்தைப் பற்றிய விவாதங்கள் தொடரவே செய்யும். விவாதித்தபடி இருப்போம். தற்காலிகமாக ஒரு சிறு இடைவெளி.
(நிறைந்தது)
கட்டுரையாளர், டிஜிட்டல் சமூக ஆய்வாளர்
தொடர்புக்கு: digitaldiet2017@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT