Published : 05 May 2018 10:57 AM
Last Updated : 05 May 2018 10:57 AM
50
ஆண்டுகள்! ஆம், இந்தியாவுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு கிடைத்து, இந்த ஆண்டுடன் அரை நூற்றாண்டைக் கடக்கிறோம். 1968-ம் ஆண்டு, ஹர் கோவிந்த் கொரானா என்பவருக்கு அந்தப் பரிசு கிடைத்தது. ஆனாலும், அதை நாம் முழு மனதுடன் கொண்டாட முடியாது. ஏனென்றால், அவர் அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராக இருந்தார். அதற்குப் பிறகு, மருத்துவத்துக்கான நோபல் என்பது இந்தியாவுக்குக் கனவாகவே இருந்துவருகிறது.
இந்தியா போன்ற உயிரினப் பன்மை (Bio diversity) அதிகமாக இருக்கும் நாட்டில், தாவரங்களுக்குப் பஞ்சமில்லை. அதிலும் மருத்துவத் தாவரங்கள். பன்னெடுங்காலமாக, இந்தியாவில் மூலிகைகளைப் பயன்படுத்தி பல நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்திருக்கிறது. அந்த மூலிகைகளில் ஏதேனும் ஒன்றால் நமக்கு நோபல் பரிசு கிடைத்தால் எப்படி இருக்கும்?
ஆனால், அதிலிருக்கும் சிக்கல், அந்த மூலிகைகளில் உள்ள மருத்துவக் குணங்கள் எல்லாம் அனுபவப்பூர்வமானவை. அதாவது, பழங்காலத்திலிருந்து நம்முடைய முன்னோர், அந்தத் தாவரத்தில் இருக்கும் வேதிக்கூறுகளைப் பற்றித் தெரியாமல், ‘இது இந்தப் பிணியைத் தீர்க்கும்’ என்று சொல்லி வைத்தார்கள். அந்தப் பாரம்பரிய அறிவைப் பின்பற்றி, இன்று தமிழகத்தில் உள்ள பல சித்த மருத்துவர்கள், நிலவேம்பு உள்ளிட்ட மூலிகைகளை டெங்கு போன்ற நோய்க்களுக்கே சிறந்த நிவாரணியாகப் பயன்படுத்தி வருகிறார்கள்.
‘இது இந்தப் பிணியைத் தீர்க்கும்’ என்பது அனுபவ அறிவாக இருக்கலாம். ஆனால் ‘இந்தத் தாவரத்தில் இருக்கும், இந்த வேதிக்கூறால், குறிப்பிட்ட நோய் தீர்க்கப்படுகிறது’ என்பதே அறிவியல் அறிவு. நிலவேம்பில் உள்ள எந்த வேதிக்கூறு டெங்கு நோய்க்கு எதிராகச் செயலாற்றுகிறது என்பது இதுவரை அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.
ஆனால், அதை அறிவியல் முறைப்படி நிரூபிக்கப்படுவதற்கான வாய்ப்பு இப்போது ஏற்பட்டுள்ளது. அதுவும், தமிழகத்தில் இயங்கி வரும் ஆய்வு நிறுவனம் ஒன்றின் மூலம். இது எத்தகைய பெருமைக்குரிய விஷயம்!
இந்தியாவின் பெரிய தரவுத்தளம்
சென்னையில் உள்ளது ‘இந்தியக் கணிதவியல் கழகம்’ (இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேத்தமேடிக்கல் சயின்சஸ்). மத்திய அரசு நிறுவனமான இதில், ‘கம்ப்யூடேஷனல் பயாலஜி’ துறையில் பேராசிரியராகப் பணியாற்றும் அரீஜித் சமல் தலைமையிலான ஆய்வுக் குழு, இந்தியாவில் உள்ள மருத்துவக் குணம் மிக்க தாவரங்களைப் பற்றிய தரவுத்தளம் (டேட்டாபேஸ்) ஒன்றை உருவாக்கியுள்ளது.
“இந்தத் தளத்துக்கு ‘இம்பாட்’ (IMPPAT – Indian Medicinal Plants, Phytochemistry And Therapeutics) என்று பெயரிட்டுள்ளோம். இதில் 1,742 இந்திய மருத்துவத் தாவரங்கள், அவற்றிலிருக்கும் 9,596 வேதியியல் மூலக்கூறுகள், அந்தத் தாவரங்களிலிருந்து கிடைக்கும் 1,124 மருத்துவப் பயன்பாடுகள் ஆகியவற்றைப் பட்டியலிட்டுள்ளோம். இப்போதைக்கு, இவ்வளவு அதிகமான தகவல்களைக் கொண்ட ஒரே தரவுத்தளம், இந்தியாவிலேயே இதுதான்” என்று சொல்லும் அரீஜித் சமல், இப்படி ஒரு தரவுத்தளம் உருவானதற்கான பின்னணியைப் பகிர்ந்துகொண்டார்.
“மனிதர்கள் எடுத்துக்கொள்ளும் உணவுக்கும் மருந்துகளுக்கும் இடையிலான உறவைப் பற்றிய ஆய்வை நாங்கள் மேற்கொண்டிருந்தோம். அப்போது எதேச்சையாக வெண்டை, வாழை போன்ற பல தாவரங்கள் மருத்துவக் குணங்களைக் கொண்டிருப்பதாக அறிந்தோம். அதைத் தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வில், இந்தியாவில் உள்ள மருத்துவத் தாவரங்கள் பலவற்றைப் பற்றி அறிந்துகொண்டோம். அந்தத் தாவரங்களையும் அவற்றிலிருக்கும் மருத்துவக் குணங்களையும் பட்டியலிடலாமே என்று யோசித்தோம்.
இதற்காக, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை சார்ந்த புத்தகங்களில் குறிப்பிட்டுள்ள தாவர விவரங்களைச் சேகரித்தோம். அப்படிச் செய்வதில் எங்களுக்கு இருந்த சவால்… ஒரே தாவரம் வேறு வேறு புத்தகங்களில் வேறு வேறு பெயர்களில் குறிப்பிட்டிருந்ததுதான்.
அவற்றைச் சலித்து, அவற்றுக்குப் பொதுவான பெயர் எது என்பதை அறிந்து, அவற்றைப் பட்டியலிட்டோம். பிறகு, அவற்றின் மருத்துவ குணங்களையும் பட்டியலிட்டோம்” என்று சொன்ன அரீஜித் சமல், இந்த ஆய்வில் சக ஆய்வாளர்களாக இருந்த தன்னுடைய மாணவர்களின் பங்களிப்பைப் பற்றி உயர்வாகப் பேசினார். இவர்களின் இந்த ஆய்வு, ‘நேச்சர்’ பதிப்பகக் குழுமத்திலிருந்து வெளியாகும் ‘சயிண்டிஃபிக் ரிப்போர்ட்ஸ்’ எனும் அறிவியல் இதழில் வெளியாகியுள்ளது.
சீனா – இந்தியா ஒற்றுமை
தாவரங்கள், அவற்றின் மருத்துவக் குணங்கள் ஆகியவற்றைப் பற்றி ஏற்கெனவே பல தரவுத்தளங்களும் புத்தகங்களும் இருக்கும் நிலையில், அவற்றிலிருந்து இந்தத் தளம் எப்படி தனித்துவமாக இருக்கிறது என்பதைப் பற்றி கேட்டபோது, விளக்கினார் அரீஜித்.
“நாங்கள் உருவாக்கியிருக்கும் இந்தத் தளத்தில் தாவரங்கள், அவற்றின் மருத்துவக் குணங்கள் ஆகியவற்றோடு, அந்தத் தாவரங்களில் உள்ள வேதியியல் மூலக்கூறுகளையும் பட்டியலிட்டுள்ளோம். அந்த மூலக்கூறுகளை 2டி, 3டி படங்களாகவும் பதிவுசெய்துள்ளோம். இதன்மூலம், எந்தத் தாவரத்தில் என்னவிதமான வேதிக்கூறுகள் இருக்கின்றன என்பதை அறிய முடிவதுடன், அந்த வேதிக்கூறுகளைப் பயன்படுத்தி புதிய மருந்துகளைக் கண்டறியவும் முடியும்” என்கிறார்.
இந்தியாவில், இவ்வாறு மருத்துவ குணம் கொண்ட தாவரங்களைப் பட்டியலிடுவது குறித்த விழிப்புணர்வு சமீபத்திய ஆண்டுகளாகத்தான் ஏற்பட்டுள்ளது. ஆனால், சீனாவில் பல ஆண்டுகளாக இதைச் செய்துவருகிறார்கள்.
“சீனாவில் சுமார் 6 ஆயிரம் தாவரங்களுக்கு மேல் பட்டியலிட்டுள்ளார்கள். அவர்களுடைய மருத்துவத் தாவரங்களில் உள்ள வேதியியல் மூலக்கூறுகளையும், நம்மிடம் உள்ள வேதியியல் மூலக்கூறுகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, சுமார் 25 சதவீத மூலக்கூறுகளிடையே பல ஒற்றுமைகள் தென்படுகின்றன” என்கிறார் அரீஜித்.
அழியும் நிலையில் தாவரங்கள்
இவர்கள் பட்டியலிட்டுள்ள 1,742 தாவரங்களில் சுமார் 15 தாவரங்கள், இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேசச் சங்கம் (ஐ.யூ.சி.என்.) வெளியிடும் ‘சிவப்புப் பட்டியல்’ புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. அப்படியென்றால், அவை அழியும் நிலையில் உள்ளன என்று பொருள்!
இந்தத் தரவுத்தளத்தை, கல்வி மற்றும் ஆய்வுப் பணிகளுக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம். “ஆனால், இங்கு பட்டியலிடப்பட்டிருக்கும் தாவரங்களைப் பயன்படுத்தி, சுய மருத்துவம் செய்துகொள்ளக்கூடாது” என்று எச்சரிக்கிறார் அரீஜித்.
இந்தத் தரவுத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள 9,596 வேதியியல் மூலக்கூறுகளில் 960 வேதியியல் மூலக்கூறுகள், புதிய மருந்துகளாகப் பயன்படுத்துவதற்கு ஏற்ற தன்மையைக் கொண்டிருக்கின்றன என்று தெரிவிக்கிறது அந்த ஆய்வாளர்கள் குழு. அந்த 960-ல், 32 வேதியியல் மூலக்கூறுகள் ஏற்கெனவே மருந்துகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. அப்படி என்றால், மீதம் 928 மூலக்கூறுகள், அறிவியல்பூர்வமாகப் பரிசோதித்துப் பார்க்கப்பட வேண்டும். அதில், நிலவேம்பும் ஒன்று!
சீனாவில் ‘ஆர்டிமிஸியா அன்னுவா’ (Artemisia annua) என்ற தாவரத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு வேதியியல் மூலக்கூறைக் கொண்டு, மலேரியா நோய் சிகிச்சைக்கான ‘ஆர்டிமிஸினின்’ (Artemisinin) எனும் மருந்தைக் கண்டறிந்தார் அந்நாட்டுப் பேராசிரியர் யூயூ து. 70-களில் உருவாக்கப்பட்ட அந்த மருந்துக்கு 2015-ல் மருத்துவத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது. நிலவேம்பு உள்ளிட்ட இந்திய மூலிகைகள் குறித்து, இப்போதிலிருந்து அறிவியல்பூர்வமான ஆய்வைத் தொடங்கலாம். வருங்காலத்தில் நோபல் பரிசு, இந்தியாவின் கதவுகளையும் தட்டலாம்!
தளத்தை அணுக: https://cb.imsc.res.in/imppat/home
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT