Last Updated : 25 May, 2024 06:18 AM

 

Published : 25 May 2024 06:18 AM
Last Updated : 25 May 2024 06:18 AM

மருத்துவச் செயலிகள்: தண்ணீர் குடித்தீர்களா?

உடல், உள நலத்தைப் பேணுவது இந்தக் காலகட்டத்தில் மிகவும் அவசியம். ஏனெனில், உடற்பயிற்சியின்மையால் ஆண்களைவிடப் பெண்கள்தான் அதிகம் பாதிப்புக்கு ஆளாகின்றனர். நாம் சத்துள்ள உணவைத்தான் உண்கிறோமா, சரியான உடற்பயிற்சியைச் செய்கிறோமா என்கிற கேள்விகள் நமக்கு எழலாம். அதைத் தீர்த்து நம் ஆரோக்கியத்துக்கு வழிகாட்டும் மருத்துவச் செயலிகள் பல உள்ளன.

My Fitness Pal: கலோரிகளைக் கண்காணிப்பதற்கான சிறந்த செயலி இது. இதில் உங்களுக்குத் தேவையான அனைத்து உணவுப் பொருள்களும் அவற்றின் ஊட்டச்சத்துக் குறிப்புகளும் இருக்கின்றன.

கலோரி, கொழுப்பு, புரதம், கார்போஹைட்ரேட், சர்க்கரை, நீர், விட்டமின் ஆகியவற்றைக் கண்காணிக்கக்கூடிய ஊட்டச்சத்து டிராக்கரும் இதில் உண்டு. ஒரு நாளைக்கு எவ்வளவு கலோரிகள் சாப்பிட வேண்டும் என்பதை இச்செயலி உங்களுக்குத் தெரிவிக்கும். Fitbit, Lifesum, 8fit, Pacer போன்ற செயலிகளும் நமது உணவு முறையை ஒழுங்குபடுத்துகின்றன.

Headspace: நாம் உடல்நலத்தில் எந்த அளவுக்குக் கவனம் செலுத்த வேண்டுமோ அதேபோல் உள நலத்திலும் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு Headspace செயலி நமக்கு உதவும்.

மன அழுத்தத்தைக் குறைத்து, கவனத்தை மேம்படுத்து வதற்கான தியானம், உறக்கம், மன அமைதிக்கான வழிமுறைகளை இச்செயலி வழங்குகிறது. மேலும், Calm, Moodnotes, MyLifeMeditation போன்ற பிற செயலிகள் மூலமாகவும் நமது உள நலத்தைப் பேணலாம்.

Water Balance: உடல் நலம், உள நலத்தைப் பாதுகாப்பதில் தண்ணீர் பெரும்பங்கு வகிக்கிறது. பரபரப்பான ஓட்டத்தில் சில நேரம் தண்ணீர் குடிப்பதையே நாம் மறந்துவிடுகிறோம். அப்போது, ‘நீங்கள் தண்ணீர் குடிக்க வேண்டும்’ என யாராவது நினைவுபடுத்தினால் நன்றாக இருக்கும் அல்லவா? அதைத்தான் இச்செயலி செய்கிறது. தினசரி நாம் அருந்தும் நீரின் அளவைக் கண்காணிக்கவும் தண்ணீர் குடிப்பதை நினைவூட்டவும் இது உதவும்.

மிக எளிமையான முறையில் இச்செயலியைப் பயன்படுத்த முடியும். நமது அன்றாடத்தைக் கவனித்தத் தண்ணீர் குடிப்பதை ஆரோக்கியமான பழக்கமாக இச்செயலி மாற்றுகிறது.

Water Minder, My Water போன்ற செயலிகளும் நாம் அருந்தும் தண்ணீரின் அளவைக் கண்காணிக்கப் பயன்படுகின்றன. இச்செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x