Published : 21 Apr 2018 10:20 AM
Last Updated : 21 Apr 2018 10:20 AM

காதலின் சுவையறிதல்

ர்மம், அர்த்தம், காமத்துக்குப் பிறகே மோட்சத்தைப் பற்றிப் பேசுகின்றன இந்தியாவின் சமய நூல்கள். பிறவியின் பெரும்தேடலாம் தன்னையறியும் முயற்சியில் காமமும் ஒரு பகுதியாய் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. காமம், தன்னையறிவது மட்டுமல்ல, தன் இணையையும் சேர்த்தே அறிவது.

அறம், பொருளுக்கு வழிகாட்ட நீதி நூல்கள் இயற்றப்பட்டதுபோலவே இன்பத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இந்தியாவில் இயற்றப்பட்ட காம சாஸ்திரங்களின் தாக்கத்தில் அராபிய தேசங்கள் தங்களுக்கான காமசூத்திரங்களை எழுதிக்கொண்டன. நெஃப்சுவாஹி என்பரால் எழுதப்பட்டதாகக் கருதப்படும் ‘நறுமணத் தோட்டம்’ அதிலொன்று.

அராபிய காமசூத்திரம்

இந்தியாவின் வாத்ஸ்யாயனர் எழுதிய காமசூத்திரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ரிச்சர்ட் பர்ட்டன், அராபியாவின் ‘நறுமணத் தோட்ட’ வாசனையையும் ஆங்கிலத்துக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். ‘ஆயிரத்தொரு அராபிய இரவுகளை’ ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரும் இவர்தான். தற்போது ஆங்கிலம் வழியாக பெரு.முருகனின் மொழிபெயர்ப்பில் தமிழுக்கு வந்திருக்கிறது ‘நறுமணத் தோட்டம்’.

இந்தப் புத்தகம் ஆண்களும் பெண்களும் தங்களை ஈர்ப்புக்குரிய ஆளுமைகளாக மாற்றிக்கொள்ளும் வித்தையைக் கற்றுக்கொடுக்கிறது. கலவி இன்பத்தின் நுட்பங்களை உணர்த்துவதோடு மட்டுமின்றி, உடல்நலம் தொடர்பாகக் கவனத்தில் கொள்ள வேண்டியவற்றையும் சொல்லிக்கொடுக்கிறது. ஆண், பெண் மலட்டுத் தன்மைகளுக்கும் குழந்தைப் பேறு இல்லாமைக்கும் மருந்துகளையும்கூடப் பரிந்துரைக்கிறது.

ஆதிகாலத்தின் தொடர்ச்சி

இந்நூல் எழுதப்பட்டு ஏறக்குறைய 600 ஆண்டுகள் ஆகின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்போதிருந்த சூழலில் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் அவை. மருத்துவ அறிவியல், கடந்த காலத்தில் மாபெரும் சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது. எனவே, உடல்கள் சேரும் இன்பம் என்பது குறைகளையும் உள்ளடக்கியது, அவற்றை நிவர்த்தி செய்துகொள்ள முடியும் என்றளவிலேயே இந்நூல் பரிந்துரைக்கும் மருந்துகளின் பட்டியலையும் சிகிச்சை முறைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மற்றபடி, மனிதனின் கலவி என்பது ஆதி காலத்தின் தொடர்ச்சிதான். அதன் உடல், உள தேவைகளும் அதையொட்டி எழுகின்ற அச்சங்களும் சந்தேகங்களும் காலகாலத்துக்கும் தொடரவே செய்யும். ஐயங்களை நீக்குவதில் நறுமணத் தோட்டம் வழிகாட்டி நிற்கும்.

இணையின் துணையோடு வெல்லுதல்

உயிர் இயல்புகளில் ஒன்றான கலவி, உள்ளச் சேர்க்கையாலேயே முழுமை அடைகிறது. சமூக நியமங்களுக்கும் திருமண நெறிகளுக்கும் அது கட்டுப்பட்டிருக்க வேண்டும் என்பதும் இந்நூலில் உணர்த்தப்படுகிறது. என்றாலும், வாத்ஸ்யாயனர்போல நெஃப்சுவாஹி இந்த நூலில் வலுவாகச் சொல்லவில்லை. ‘காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம், கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்’ என்று கொண்டாடிக் கூத்தாடும் வேளையிலும், அதன் இறுதிப்பயன் சந்ததிப் பெருக்கம் என்ற இயற்கையின் கட்டளைதான் என்பதை அடிக்கோடிட்டுச் செல்கிறது நறுமணத் தோட்டம். எனவே தலைவனோ தலைவியோ இணையின் துணையோடு மட்டும்தான் காமனை வென்றாக வேண்டும்!

அன்றைய சூழலில் பாலியல் குறித்த ஒரு அறிமுக நூலாக இது பயன்பட்டிருக்கும். ஆனால், சமூகத்தின் உயர்மட்டத்தினருக்குள்ளே மட்டும்தான் இது புழங்கியிருக்க முடியும். அந்த வகையில், இன்றைய சமூக மதிப்பீடுகள் சார்ந்து இந்நூலின் கருத்துகளில் குறைகளையும் காண முடியும். அதேநேரத்தில் பாலியல் கல்வி என்பதைத் தாண்டி பாலியல் சார்ந்த முன்னோடி இலக்கியம் என்ற வகையிலும் இந்நூலுக்கு முக்கியத்துவம் இருக்கிறது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் சொல்லப்படும் கதைகளிலும் உவமைகளிலும் உரையாடல்களின் உள்ளுறை அர்த்தங்களிலும் இலக்கியச் சுவையையும் சேர்த்து அனுபவிக்க முடியும்.

எரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பு

இந்நூலுக்கு இன்னொரு மொழிபெயர்ப்பையும் ரிச்சர்ட் பர்ட்டன் எழுதிவைத்திருந்தார். அதை வெளியிடுவதற்கு முன்பே, அவர் காலமாகிவிட்டார். அந்த இரண்டாவது மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பர்ட்டனின் ஏராளமான எழுத்துகளை அவருடைய மனைவி இஸபெல் எரித்துவிட்டார். விக்டோரிய சமூகத்தின் ஒழுக்கக் கட்டுப்பாடுகள் மீதான அச்சமும் பயமும்தான் அதற்குக் காரணம்.

பாலியல் இலக்கியங்களில் பலவும் இப்படி அனல்வாதங்கள், புனல்வாதங்களைத் தாண்டித்தான் இன்று நம் கையில் கிடைத்திருக்கின்றன. தீயெனச் சுட்டெரிக்கும் காமம், தீயையும் வென்று இன்றும் சுடர் விட்டெரிகிறது.

நெஃப்சுவாஹியின்

நறுமணத் தோட்டம்

ஆங்கிலம்: ரிச்சர்ட் பர்ட்டன்

தமிழில்: பெரு.முருகன்

கடற்குதிரை பதிப்பகம், சென்னை- 5

விலை ரூ.200

தொடர்புக்கு: 99402 56596

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x