Published : 10 Feb 2018 11:53 AM
Last Updated : 10 Feb 2018 11:53 AM
க
ணினி நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் இளம் பெண் ஒருவர் தன்னுடைய கண் திடீரென மங்கலாகத் தெரிந்ததால், கண்ணை பரிசோதனை செய்துகொள்ள மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அவர் கண்களைப் பரிசோதித்த கண் மருத்துவர் அவருடைய விழித்திரையில் ரத்தக் கசிவு உள்ளதாகவும் அதனால்தான் பார்வை மங்கலாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இளம் வயதில் இப்படி விழித்திரை ரத்தக் கசிவு ஏற்படுவதற்கு நீரிழிவு நோய், ரத்தக்கொதிப்பு போன்றவை காரணமாக இருக்கலாம் எனக் கருதப்பட்டது. விழித்திரை ரத்தக் கசிவு ஏற்பட்டதற்கான காரணங்களைக் கண்டறிய ரத்தப் பரிசோதனை செய்து பார்த்தபோது , அவருக்கு சிறுநீரகம் செயலிழந்து காணப்பட்டது.
இரண்டாவது சம்பவம்
விழித்திரையைப் பார்த்து சிறுநீரக பாதிப்பை எப்படிக் கண்டுபிடிக்க முடியும் என ஆச்சரியத்துடன் மனதுக்குள் முணுமுணுக்கும் உங்களுக்கு இன்னொரு ரகசியமும் சொல்கிறேன். அரசு மருத்துவமனைக்கு ஒரு நாள் நடந்துவந்தால் இழுப்பு வாங்குகிறது, களைப்பாக இருக்கிறது, முகம் வீங்கிக்கொள்கிறது, பார்வை மங்கலாக இருக்கிறது என்று வந்த 46 வயதுப் பெண்மணியின் விழித்திரையை கண் மருத்துவர் பரிசோதித்தார். அந்த பெண்ணுக்கு புற்றுநோய் இருக்கலாம் எனக் கருதி ரத்தப் பரிசோதனை செய்து பார்த்தபோது, அவருக்கு ரத்தப் புற்றுநோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டு மேல்சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார். எப்படி இதைக் கண்டுபிடிக்க முடியும்?
அந்த பெண்ணின் விழித்திரையை பரிசோதித்தபோது அந்த விழித்திரையில் ரத்தக் கசிவு இருந்தது. அந்த ரத்தக் கசிவின் மையத்தில் வெள்ளையாக இருக்கும். அதற்கு பெயர் தான் ரோத் ஸ்பாட் (Roth spot).
அது இருந்தால் இதய வால்வு பாதிப்பு (infective endocarditis ), ரத்தப் புற்றுநோய், உடலில் மற்ற பகுதிகளில் உள்ள புற்றுநோய் இருப்பதைக் கண்டுபிடிக்கலாம்.
மூன்றாவது சம்பவம்
கல்லூரியில் படிக்கும் தன் மகளை அழைத்துக்கொண்டு பிரபல கண் மருத்துவமனைக்கு ஒரு தாய் சென்றார். தன் மகளுக்கு ஓராண்டாக பார்வை மங்கி இருப்பதாகவும், ஓராண்டுக்கு முன் பார்வைக் குறைபாடு காரணமாக கண்ணாடி அணிந்ததாகவும், தற்போது கண்ணாடி அணிந்தாலும் பார்வை சரியாகத் தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.
அவரை பரிசோதித்த கண் மருத்துவர் பார்வை நரம்பு வீங்கி இருந்த காரணத்தால் தலைக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் அவருடைய மூளையில் பிட்யூட்டரி சுரப்பியில் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின் மூளைப் பகுதியில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால் அவருக்கு பார்வை பறிபோயிருக்கும். மூளைக் கட்டி ஆபத்தை ஏற்படுத்தியிருக்கும்.
எப்படிக் கண்டுபிடிக்கலாம்?
ஆயிரக்கணக்கான சிலந்தி வலைகளை ஒன்றின் மேல் மற்றொன்று அடுக்கிவைத்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் சிறுசிறு நரம்புக்கற்றைகள் அடுக்கப்பட்ட ஒரு அமைப்பு நம் விழித்திரை.
கேமராவில் உள்ள மெமரி கார்டுபோலத்தான் மனிதனின் விழித்திரை உயிரோட்டமாக இருக்க சிறுசிறு ரத்த நாளங்கள் விழித்திரை நரம்புக்கற்றைகளிடையே படர்ந்திருக்கும். அந்த விழித்திரை நரம்புக்கற்றைகள் ஒன்றுகூடி பார்வை நரம்பாகவும், அந்த சிறுசிறு ரத்த நாளங்கள் ஒன்றுகூடி ரத்தக் குழாயாக மாறி பார்வை நரம்பின் மையப் பகுதி வழியாக மூளைக்கும் செல்லும்.
நம்முடைய மூளை பயா, அரக்கினாய்டு ,டியூரா என்ற மூன்று சவ்வுகளால் சூழப்பட்டுள்ளது. முதல் இரண்டு சவ்வுகளுக்கு இடையில் சென்ரல் சீரஸ் திரவத்தில்தான் மூளை மிதக்கிறது.
அந்த திரவம் மூளையிலிருந்து கண் நரம்பு நுணிப் பகுதிவரை பரவியிருக்கும். மூளையில் எந்த பாதிப்பு ஏற்பட்டாலும், அதாவது கட்டி ஏற்பட்டு சி.எஸ்.எப். திரவத்தின் சுரப்பு தடைபட்டாலோ அல்லது கிருமி பாதிப்பில் அதிகமாகச் சுரந்தாலோ, மூளை நீர் அழுத்தம் அதிகமாகி அது மூளை நரம்பை வீக்கம் அடைய செய்யும்.
ஆண்டுக்கு ஒரு முறை விழித்திரை பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் நமது மூளையில் ஏதாவது பிரச்சினை இருந்தால் முன்கூட்டியே கண்டுபிடித்துவிடலாம் .
ரத்தக்கொதிப்பு பாதிப்பு
ஒரு நாள் திருமண நிகழ்ச்சியில் போட்டோ எடுத்துக்கொண்டிருந்த ஒரு போட்டோகிராபர் திடீரென ஒரு கண்ணில் பார்வை சுத்தமாகத் தெரியவில்லை என மருத்துவரை சந்தித்தபோது, அவரைப் பரிசோதித்த கண் மருத்துவர் அவருடைய விழித்திரையில் உள்ள முக்கியமான பகுதியான மேக்குலாவில் ரத்தக் கசிவு ஏற்பட்டு, அந்த பகுதி வீங்கி இருப்பதைக் கண்டுபிடித்தார். இது கண்ணில் ஏற்படும் ஸ்டிரோக் (stroke).
இளம் வயதில் ரத்தக் கசிவு ஏற்பட்டதால் சந்தேகமடைந்து அவருடைய ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்தபோது 200/100 இருந்தது. உடனடியாக அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது.
ரத்த அழுத்தம் அதிகமாகிக் கண்ணில் ரத்தக் கசிவு உண்டாகிறது. கண் ரத்தக் குழாயில் தற்போது ஏற்பட்ட கசிவு மூளையில் உள்ள ரத்தக் குழாயில் ஏற்பட்டிருந்தால், ஒரு கை, ஒரு காலை இயக்க முடியாமல் பக்கவாதம் ஏற்பட்டிருக்கும். கண்ணில் ஏற்பட்டதால் சிகிச்சை மூலம் சரிசெய்யப்பட்டது.
உடல் நலனை மீட்கலாம்
நமது உடலில் உள்ள சிறுசிறு ரத்தக் குழாய்களை நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பு கண் விழித்திரையில் மட்டுமே சாத்தியம்.
அந்த ரத்தக் குழாயின் தன்மையும் கிட்னி, இதயம், மூளையில் உள்ள சிறுசிறு ரத்தக் குழாயின் தன்மையும் ஏறக்குறைய ஒரே தன்மையுடன் இருப்பதால் கண்ணில் இருக்கும் ரத்த குழாயில் பாதிப்பை காணும்போது அதற்கு இணையான பாதிப்பு இதயம், சிறுநீரகம், மூளையில் உள்ள சிறுசிறு ரத்த குழாய்களிலும் பாதிப்பு இருக்க வாய்ப்புள்ளது.
அதனால் நீரிழிவு நோயாளிகளை பொறுத்தவரை கண் விழித்திரை பரிசோதனை ஒரு முழு உடல் பரிசோதனையை செய்வதற்குச் சமம்.
ஆண்டுக்கு ஒரு முறை அனைவரும் கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். குறிப்பாக நீரிழிவு நோயாளிகள், ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், கண்ணாடி அணித்திருப்பவர்கள், கண் அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள், குழந்தைகள் அனைவரும் வருடத்துக்கு ஒருமுறை விழித்திரை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்
அதன்மூலம் விழித்திரையில் பதிந்திருக்கும் நம் உடல்நலம் சார்ந்த ரகசியங்களைக் கண்டு, உடல்நலத்தை மீட்கலாம் .
கட்டுரையாளர், அரசு கண் மருத்துவர்
தொடர்புக்கு: kpranganathan83@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment