Published : 10 Feb 2018 11:49 AM
Last Updated : 10 Feb 2018 11:49 AM
“இ
ன்னுமா உங்கள் குழந்தைகள் கற்கால சாக்பீஸ்-கரும்பலகை மூலம் கற்றுக்கொண்டிருக்கிறார்கள்?” என்ற கேள்வியுடன் இன்று பல பள்ளிகள் எலக்ட்ரானிக் வகுப்பறைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. போட்டிகள் நிறைந்த உலகில், கல்வியிலும் பெரும் போட்டி நிலவுகிறது. பெருகிவிட்ட தனியார் பள்ளிகள் தம் பள்ளியில் அதிகக் கட்டணம் வசூலிப்பதற்கான விளம்பர உத்தியாகவும் பெற்றோர்களை கவரவும் இ-வகுப்பறைகளை பயன்படுத்துகின்றன.
உங்கள் குழந்தைகள் வீடியோ கேம் விளையாடுகிறார்களா? கவலைப்பட வேண்டாம், நாங்கள் கல்வி சம்பந்தமான வீடியோ கேம்களை அறிமுகப்படுத்துகிறோம் என்கிற வலை விரிக்கிறார்கள் சிலர்.
இன்றைக்கு ஆரம்பக் கல்வியே இ-வகுப்பறைகளில் வழங்கப்பட ஆரம்பித்துவிட்டது. சிடி, டிவிடி, டேப்லெட், லேப்டாப், ஸ்மார்ட் போன், இ-போர்ட், இ-எஜுகேம்ஸ் என்று பள்ளி வகுப்பறைகள் தொழில்நுட்பத்தில் ஜொலிக்கின்றன. கேட்கவே அருமையாக இருக்கிறதில்லையா?
எல்லாமே டிஜிட்டல்
உங்கள் குழந்தை படிக்கும் பள்ளி நிர்வாகத்திடம் நீங்களேகூட, “ஏன் லேட்டஸ்ட் டெக்னாலஜியெல்லாம் நீங்கள் பயன்படுவத்துவதில்லை” என கேள்விகூடக் கேட்டிருக்கலாம். முதலில் இந்த இ-வகுப்பறைகளைப் பற்றி தெரிந்துக்கொள்வோம். பின்னர் இது சரியா, தவறா என்கிற விவாதத்துக்குள் போகலாம்.
இ-வகுப்பறைகள் என்பவை அனைத்துவிதமான நவீன டிஜிட்டல் டெக்னாலஜியையும் கல்வியில் பயன்படுத்துவது. அதன்மூலம் கற்றலை மேம்படுத்துவது என்று விளக்கம் தரப்படுகிறது. புத்தகம் படிப்பதை குழந்தைகள் வெறுக்கிறார்கள், ஆனால் தொலைக்காட்சியை விரும்பி பார்க்கிறார்கள். அதனால் திரையிலேயே பாடத்தை நடத்திவிட்டால்? இதுதான் இ-வகுப்பறைகளின் சாரம்சம்.
இன்று பல லட்சம் ரூபாய் கொழிக்கும் தொழில் இது. நம்பவில்லை என்றால் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் பில் கேட்ஸ் இந்த துறையில் பல மில்லியன் டாலர்கள் முதலீடு செய்துள்ளார் என்ற தகவல் உங்களிடம் நம்பகத்தன்மையை ஏற்படுத்தும்.
பார்க்கலாம், விளையாடலாம்
இ-வகுப்பறைகளில் கரும்பலகைகளுக்கு பதிலாக மின்திரை இருக்கும். அதில் பாடம் தொடர்பான வீடியோக்களை ஒளிபரப்புவார்கள். தேவை என்றால் ஆசிரியர் விளக்குவார். குழந்தைகள் கையில் டேப்லெட்கள் திணிக்கப்படும். அதில் இருக்கும் வீடியோக்களை எப்பொழுது வேண்டுமோ, அப்பொழுதெல்லாம் பார்க்கலாம். இதில் இருக்கும் சிறப்புச் செயலிகள் உதவியுடன் படம் தொடர்பான சில பரிசோதனைகளையும் செய்துபார்க்கலாம். கல்வி தொடர்பான வீடியோ கேம்களை விளையாடலாம்.
புத்தகங்களுக்கு பதிலாகக் குறுந்தகடுகள், மடிக் கணினிகள், குறுங்கணினிகள் அந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளும். கரும்பலகைக்கு பதிலாக மின் கரும்பலகைகள் (இ-போர்ட்).இவற்றில் வீடியோ ஒளிபரப்பப்படும். ஆசிரியர்கள் எழுதி விளக்கவும் செய்யலாம். பல வண்ண கிராபிக்ஸ் காட்சிகள் இ-போர்ட்களில் தெரியும்.
மின்-ஆசிரியர் (இ-ட்யுட்டர்)
ஒளிப்பதிவு செய்யப்பட்ட ஆசிரியரின் வீடியோ பாடங்கள் பதிவுசெய்து வைக்கப்பட்டிருக்கும். உங்களுக்கு எப்பொழுது தேவையோ, அப்பொழுதெல்லாம் இந்த வீடியோக்களைப் பார்க்கலாம். வருங்காலத்தில் ரோபோ ஆசிரியர்களும் வந்துவிடுவார்கள்.
பல-பரிமாண வகுப்பறை
முப்பரிமாணமாக (3-D) காட்சிகளைப் பார்ப்பதெல்லாம் பழைய தொழில்நுட்பம் - அதெல்லாம் 'மை டியர் குட்டிச்சாத்தான்' படத்துடன் முடிந்துவிட்டது. இப்பொழுதெல்லாம் பல பரிமாணக் (Multi Dimension) காட்சிகள் வந்துவிட்டன. அப்படிப்பட்ட காட்சிகளைக் கொண்ட வகுப்பறைகளே வருங்காலம். உதாரணத்துக்கு டைனோசர் பற்றிய பாடம் என்றால், ஒரு டைனோசரை 7-டி காட்சியாக வகுப்பறையிலேயே பார்த்துவிடலாம்.
ஸ்மார்ட் வகுப்பறைகள்தான் பள்ளிகளில் டொனேஷனை அதிகரிக்க வந்திருக்கும் புதுப் போக்கு. அரசு தன்னை அப்டு டேட்டாகக் காட்டிக்கொள்ள அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகளை கொண்டு வரப்போவதாக அறிவித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் சுமார் 5 சதவீதமாக இருந்த ஸ்மார்ட் வகுப்பறைகள், இன்று 13 சதவீதமாக உயர்ந்துள்ளன.
எங்கள் பள்ளியில் நீங்கள் ஏன் சேர்க்க வேண்டும் என்பதற்கு 'ஸ்மார்ட் கிளாஸ்' எனும் விளக்கம் முதன்மையாக வைக்கப்படுகிறது. அதைக் கண்டு விட்டில் பூச்சிகளாக பெற்றோர்கள் குவிகிறார்கள். வகுப்பறைகள்தான் ஸ்மார்ட் ஆகியுள்ளன. ஆனால், குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் மனஅழுத்தம் அப்படியேதான் இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.
(ஸ்மார்ட் வகுப்பு: பிரச்சினைகளும் உண்டு)
கட்டுரையாளர், டிஜிட்டல் சமூக ஆய்வாளர்
தொடர்புக்கு: digitaldiet2017@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT