Published : 10 Feb 2018 11:51 AM
Last Updated : 10 Feb 2018 11:51 AM

நலம் தரும் நான்கெழுத்து 21: கண்ணாடி நியூரான்கள் நிகழ்த்தும் மாயம்

“தனிமை என்பது இனிமையானதுதான். ஆனால், அது இனிமையானது எனச் சொல்லிப் பகிர்ந்துகொள்ள ஒரு துணை தேவை”

– பால் சாக்

ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் நடந்த ஒரு விழாவுக்கு மனநல மருத்துவர் ஒருவர் சிறப்பு விருந்தினராகச் சென்றிருந்தார். அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏதேனும் பிரச்சினை என்றால் என்ன செய்வீர்கள் எனக் கூடியிருந்தவர்களிடம் கேட்டபோது மூன்றாவது மாடியில் இருக்கும் ராமசாமியிடம் போய் எல்லோரும் தினமும் அரை மணி நேரம் பேசிவிட்டு வருவோம். பிரச்சினை குறைந்துவிடும் எனச் சொல்லி வைத்ததுபோல், அனைவருமே சொன்னார்கள்.

மனநல மருத்துவருக்கோ ஆச்சரியம் தாளவில்லை. ராமசாமி என்பவர் அவ்வளவு பெரிய திறமை வாய்ந்த ஆலோசகரா என்ன? யாருக்குப் பிரச்சினை என்றாலும் ராமசாமியிடம் போய்ப் பேசிவிட்டு வந்தால், அவர்களது பிரச்சினையெல்லாம் தீர்ந்துவிடுமா எனத் திரும்பவும் கேட்டார். அதற்கு மற்றவர்கள் சொன்னார்கள் ‘எங்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சினையே உரத்த குரலில் ராமசாமி தினமும் பாடுவதுதான். நாங்கள் யாராவது அவரிடம் பேசிக்கொண்டே இருந்தால், அவரால் பாட முடியாது இல்லையா?’ என்றார்கள்.

புரிந்துகொள்ளல்

பிறர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ என அளவுக்கு மீறிக் கவலைப்படும் சமூகப் பதற்ற நோய் பற்றிக் கடந்த வாரம் பார்த்தோம். அதுபோலவே சமூகத்தைப் பற்றிக் கவலையே படாமல் வாழ்வதும், ஒரு வகையில் சமநிலைப் பிறழ்வுதான்.

சமூகமாகச் சேர்ந்திருப்பது மந்திக் குலத்திலிருந்து மனித குலமாக மாறுவதற்கு உதவியது. ஒரு சமூகத்தின் முக்கிய பணியே ஒருவருக்கொருவர் உதவுவது. பிறருக்கு உதவ வேண்டும் என்றால் முதலில் அவருக்கு என்ன பிரச்சினை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆச்சரிய கண்ணாடி நியூரான்கள்

மொழி மூலமாகப் பிறரைத் தொடர்பு கொள்ள முடியுமென்றாலும் மொழியே புரியாத மனிதர் ஒருவர் எப்படிப் பிறரைப் புரிந்துகொள்கிறார்? போர்த்துக்கீசிய மொழி பேசும் ஒருவருக்குக் காலில் முள்குத்தித் துடித்தால் போடிநாயக்கனூரில் உள்ள ஒரு பாட்டியால்கூட அவருக்கு வேதனைதான் ஏற்பட்டுள்ளது என்பதை புரிந்துகொள்ள முடியும்.

இதுவே ஆங்கிலத்தில் ‘எம்பதி’ எனப்படும் பிறரை உணர்தல் அல்லது ஒத்துணர்வு எனப்படுவதாகும். இது எவ்வாறு நடைபெறுகிறது எனப் பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்றன. இத்தாலியைச் சேர்ந்த ரிசோலட்டி என்பவர் குரங்குகளை வைத்து ஆய்வு நடத்திக்கொண்டிருந்தபோது ஒரு பேருண்மையைக் கண்டறிந்தார்.

அதாவது ஒரு குரங்குக்குக் காலிலே ஒரு ஊசியைக் குத்தி வலியை உண்டாக்கினால், அதற்கு மூளையில் வலியை உணரும் நரம்பு செல்களான நியூரான்களில் மாறுதல்கள் ஏற்பட்டன. இது எல்லாருக்கும் தெரிந்ததே. ஆனால் ஆச்சரியப்படும் வகையில் அவர் கண்டறிந்த இன்னொரு விஷயம் என்னவென்றால், இதைப் பார்த்துக்கொண்டிருந்த இன்னொரு குரங்கின் மூளை நரம்புகளிலும் அதே மாறுதல்கள் ஏற்பட்டதுதான்.

பிறருக்கு ஏற்படும் காயத்தைப் பார்த்து அவருக்கு வலிக்கும் என உணரவைக்கும் அடிப்படையான சமூகப் பண்புக்கு இதுவே காரணம். இதுபோல் பிறரது வேதனையைப் பார்த்துவிட்டு வேதனையை உணரும் செல்களுக்குக் கண்ணாடி நியூரான்கள் எனப் பெயரிட்டனர். ‘உன் கண்ணில் நீர் வடிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி’ என்றெல்லாம் பாட இந்தக் கண்ணாடி நியூரான்கள்தான் காரணம்.

யாருடனும் ஒட்டாதவர்கள்

சிலர் பிறரைப் புரிந்துகொள்ளத் தெரியாதவர்களாக இருப்பார்கள். கடந்த வாரக் கட்டுரையில் பதற்றத்தின் காரணமாகப் பழகக் கூச்சப்படுபவர்கள்போல் அல்லாமல், இவர்களுக்குப் பிறருடன் பழகவே தோன்றாது. தன்னுள்ளேயே ஒடுங்கிப்போய் இருப்பார்கள். ஆங்கிலத்தில் இவர்களை 'இன்ட்ராவெர்ட்' என்பார்கள்.

இவர்கள் நண்பர்கள் இல்லாமல் தனிமையிலேயே இருக்க விரும்புவார்கள். மக்களை அதிகம் சந்திக்கும் பணிகளை இவர்கள் விரும்ப மாட்டார்கள். மற்றவர்களுடன் பழகப் பேசக் கூச்சமோ பயமோ இவர்களுக்கு இருப்பதில்லை. அடிப்படை விருப்பமே கிடையாது என்பதை மீண்டும் நினைவுபடுத்திக்கொள்வோம்.

ஆளில்லாத இடத்தில்...

இன்னும் சிலர் அதீதமாகச் சென்று மனித நடமாட்டமே இல்லாத பகுதிகளில் ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றிக் கொண்டிருப்பார்கள். ஆங்கிலத்தில் 'ஸ்கிசாய்டு' ஆளுமைகள் என அழைக்கப்படும் இவர்களில் சிலருக்கு மனப்பிறழ்வு ஏற்படும் சாத்தியம் அதிகம்.

பிறரைப் புரிந்துகொள்ளும் திறன் குறைவாக இருப்பதாலேயே இவர்களால் மற்றவர்களுடன் பழக முடியவில்லை எனக் கூறப்படுகிறது. மேலே குறிப்பிட்டப் பிறரைப் புரிந்துகொள்ளும் கண்ணாடி நியூரான்கள் இவர்களுக்குக் கொஞ்சம் குறைவாக இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ளுதல்

இதேபோன்றே ஆட்டிசம் எனப்படும் மனவளர்ச்சிக் குறைபாட்டால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கும் பிறருடன் பழகுவதில், பிறரைப் புரிந்துகொள்வதில் பிரச்சினைகள் அதிகம் ஏற்படுகின்றன . இவர்கள் மற்ற குழந்தைகளுடன் விளையாடாமல், தனிமையிலே விளையாடிக்கொள்வார்கள். தனக்குள்ளேயே உள்ளொடுங்குதல் என்ற பொருளிலேயே 'ஆட்டிசம்' என இந்த பாதிப்பு அழைக்கப்படுகிறது. இதிலும் கண்ணாடி நியூரான்களின் பங்கு உள்ளதாகத் தெரிகிறது.

இன்னும் சொல்லப் போனால் வாடிய பயிரைக்கூட வேண்டாம், வாடிய உயிரைக் கண்டு வருந்தாதவர்களுக்கெல்லாம்கூட பிறரைப் புரிந்துகொள்ளும் பண்பு குறைவாக இருக்கும். பிறரைத் துன்புறுத்திக் கேடு விளைவிக்கும் சமூக விரோதிகளும் இதில் அடங்குவார்கள்.

முதலிலேயே சொன்னதுபோல் தனிமை இனிமையானதுதான். ஆனால் அந்த இனிமையை உணர்ந்து பகிர்ந்துகொள்வதற்கு ஒரு துணையாவது வேண்டும். சமூகம் என்பது ஒரு கண்ணாடி. நம்மைப் போன்றே பிறரது பிம்பத்தையும் காணும் சமநிலையே நலம்தரும் நான்கெழுத்து.

கட்டுரையாளர், மனநலத் துறைப் பேராசிரியர்
தொடர்புக்கு: ramsych2@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x