Published : 21 Apr 2014 08:32 AM
Last Updated : 21 Apr 2014 08:32 AM

மனதுக்கு வயது இல்லை- ஏப்ரல் 21,2014

அதிகாலை நேரம். அந்த பெரியவர் எழுந்து மடமடவெனக் குளிக்கிறார். நல்ல உடைகளை அணிந்துகொள்கிறார். பிறகு மனைவியைப் பார்த்து ‘‘நான் வேலைக்குக் கிளம்ப வேண்டும். இன்னுமா சாப்பாடு தயார் பண்ணவில்லை?’’ என்று சத்தம் போடுகிறார். 70 வயதாகும் அந்த பெரியவர் வேலையில் இருந்து ஓய்வு பெற்று 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன. அதையே மறந்துவிட்டார்.

வயதானால் எல்லோருக்கும் மறதி ஏற்படத்தான் செய்யும். சிலருக்கு அது அதி தீவிரமாக இருக்கும்.

டிமென்ஷியா (Dementia) என்று அழைக்கப்படும் இந்த நோய் சாதாரண மறதிபோல ஆரம்பித்தாலும் சில ஆண்டுகளில் நினைவுத் திறன் வெகுவாகக் குறைந்துவிடும். ஆனால் மூளையில் ஏற்கெனவே பதிந்துள்ள விஷயங்கள், குறிப்பாகப் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விஷயங்கள் மறந்து போகாமல் நினைவில் இருக்கும். இடம், காலம் பற்றிய குழப்பம் வரலாம். தாம் இருப்பது பல ஆண்டுகளுக்கு முன்பு வசித்த வீடு அல்லது ஊர் என்று நினைத்துக் குழப்பிக்கொள்வார்கள்.

எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் அருமையான சிறுகதை ஒன்று உண்டு. அதில் நயாகரா நீர் வீழ்ச்சிக்குச் சென்ற முதியவர் ஒருவர் அமெரிக்கா கனடா எல்லையில் வழி மறந்து எதிர் நாட்டுக்குப் போய்விடுவதாக இருக்கும் அக்கதை. அதுபோல காய்கறி, பால் வாங்க வெளியே சென்றால் முதியவர்கள் வழி மறந்து தொலைந்துபோய் விடுவார்கள்.

இன்னும் சிலருக்குச் செயல்திறனும் இழக்கத் தொடங்கிவிடும். சட்டை போடுவது, பல் தேய்ப்பது போன்ற செயல்களை எப்படிச் செய்வது என்றுகூட மறந்து விடும். ஆட்களை அடையாளம் காண்பதிலும் குழப்பம் இருக்கும். பேப்பர்காரரைப் பேரன் என்று நினைத்துப் பேசிக் கொண்டிருப்பார்கள்.

இதுபோன்ற மறதிகள் இருக்கும்போது, ‘வயதானால் இதெல்லாம் சகஜம்’ என்று நினைத்து விட்டுவிடக் கூடாது. இந்த நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய மருந்துகள் இருக்கின்றன.

காலக் குழப்பம் இருப்பதால் பெரிய கடிகாரம், பெரிய காலண்டர் ஆகியவற்றை இவர்களது கண்ணில் படும்படி மாட்டிவைக்க வேண்டும். அடிக்கடி நாள் கிழமை தேதிகளை இவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்.

குடும்ப நபர்கள் அடங்கிய பெரிய புகைப்படத்தை ஹாலில் மாட்டி வைக்கலாம். சாப்பிட்டது, குளித்தது போன்றவற்றை தினமும் டைரி ஒன்றில் எழுதிக் காட்டலாம்.

குறிப்பாகச் சிலர் மாத்திரை சாப்பிட்டதையே மறந்து மீண்டும் மீண்டும் சாப்பிட்டு விடுவார்கள். இதுபோன்ற ஆபத்தைத் தடுக்க அவர்களுக்கான மாத்திரைகளை திங்கள், செவ்வாய் என்றும் காலை, மாலை என்றும் தனித்தனியாக ஒவ்வொரு வேளையாகப் பிரித்து வைக்க வேண்டும்.

எல்லாவற்றையும்விட முக்கியமாக, தினமும் கொஞ்ச நேரமாவது வயதானவர்களை வெளியில் அழைத்துச் சென்றும் அவர்களிடம் பேசியும் அன்று நடந்த விஷயங்களைப் பகிர்ந்துகொண்டும் நேரத்தைச் செலவிட வேண்டும். மறதியை விடப் புறக்கணிப்பு கொடுமையானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x