Last Updated : 19 Aug, 2014 12:00 AM

 

Published : 19 Aug 2014 12:00 AM
Last Updated : 19 Aug 2014 12:00 AM

பிரசவத்தை எளிதாக்கும் இசை

‘‘தாயும் சேயும் நலம்" என்ற வார்த்தையைக் கேட்கப் பிரசவ அறைக்கு வெளியே பதற்றத்துடன் காத்திருக்கும் நெருங்கிய உறவினர்கள் ஒருபுறம், இந்தப் பிரசவம் சுகப் பிரசவம் தானா என்று அறியும் பதற்றம் மறுபுறம் என இந்த இரண்டு தவிப்புகளுக்கும் இடையேதான் உலகமெங்கும் ஒவ்வொரு பிரசவமும் நிகழ்கிறது.

ஆனால், பெரும்பாலான பிரசவங்களைச் சுகப் பிரசவமாக ஆக்க இசையால் முடியும் என்கிறார் டாக்டர் தி. மைதிலி. இசையின் மூலம் பிரசவத்தை எளிதாக்க முடியும் என்பதைப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னரே ஆராய்ச்சி மூலம் நிரூபித்திருக்கிறார்.

வலி நீக்கும்

இசையால் வலி நீக்கும் முறை இரண்டு வகைப்படும். அவை தனித்து, பங்குபெறுவது ஆகிய முறைகளில் செயல்படக்கூடியது. தனித்து என்பது இசையைத் தனியாகக் கேட்பது, பங்குபெறுவது என்பது இணைந்து பாடுவது. அதாவது, பஜனை நிகழ்ச்சிகளைப் போல.

பொதுவாக நோயுற்ற பின்னர்தான், உதாரணத்துக்கு வயிற்று வலி வந்தபின்தான் மருத்துவரை அணுகுவோம். ஆனால் இசை சிகிச்சை (மியூசிக் தெரபி) நலமாக உள்ளவர்கள், உடல் நலமற்றவர்கள் என இரண்டு தரப்பினருக்கும் சிகிச்சை அளிக்கும்.

பிரசவப் பலன்கள்

"தாயின் வயிற்றில் உள்ள 22 வாரக் கரு வெளியில் உள்ள சத்தங்களைக் கேட்கும் என்ற செய்தியை ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. ஆனால், என்னுடைய ஆராய்ச்சியின்படி 19 வாரங்கள், அதாவது 130 நாட்களிலேயே வெளிச் சத்தங்களைக் கேட்கும் என்று தெரியவந்துள்ளது. இந்த நேரத்தில் கருவின் முன் மூளைப் பகுதி ஒளி ஊடுருவுவது (Transparent) போல், மெல்லிய கோடுகள் நிறைந்ததாக இருக்கும்.

இந்தக் காலகட்டத்தில் தாயை ஒரு நாளுக்கு மூன்று முறை இசையைக் கேட்க வைத்தேன். கருவிலுள்ள சிசுவுக்கு அப்பொழுது மொழி தெரியாததால் இசைக் கோவையை, அதாவது டியூனை அளிப்பதுண்டு. இப்படிப் பழகிவிட்ட பிறகு குறிப்பிட்ட நேரத்தில் அந்த டியூனை போடவில்லை என்றால், தாயின் வயிற்றைச் சிசு அதிகமாக உதைத்துத் தன் இசைத் தேவையை உணர்த்தும். இதனால் கருவாக இருக்கும்போதே சிசுவுக்கு ஒருவகை ஒழுங்கு வந்துவிடுகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இருபத்திரண்டு நிமிடங்களுக்கு நீளும் இந்த இசையைப் பிரசவம் வரைக்கும் தினசரிக் குறிப்பிட்ட ஒரே நேரத்தில் கேட்க வைப்போம். இது தரும் பலன்கள் பல. சுகப்பிரசவம் ஏற்பட உதவும். இசை கேட்பது தாய்க்கு ஆனந்தம் தரும் என்பதால் கருவுற்ற தாய்க்கு மனஅழுத்தம் ஏற்படாமல் இருக்கும்" என்கிறார்.

புதிய எண்ணம்

இப்படிக் கருவிலிருக்கும் சிசுவுக்கு இசையைக் கேட்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் இவருக்கு எப்படி உருவானது? மனநலம் குன்றிய குழந்தைகளைப் பார்க்கத் தன் அம்மாவுடன் இவர் சென்றிருக்கிறார். அப்போது அந்தக் குழந்தைகளைப் பார்த்து மனம் வருந்திய இவருடைய அம்மா, "இதற்கு ஏதாவது செய்யக் கூடாதா?" என்று மைதிலியின் சிந்தனையைத் தூண்டியிருக்கிறார். தாயின் கருவுக்குள்ளேயே சிசுவின் மூளையைப் பலப்படுத்திவிட்டால், இந்நிலையைத் தவிர்க்கலாமே என்ற எண்ணத்தால்தான் இந்த இசைக் கோவையை உருவாக்கியதாகச் சொல்கிறார் மைதிலி.

திறன் அதிகரிப்பு

"இந்த இசைக் கோவையைக் கேட்பதால் எண், எழுத்து தொடர்புடைய செய்திகளைப் புரிந்து கொள்ளும் திறமை அதிகரிக்கும். மேலும் வலது பக்க மூளையுடன் தொடர்புடையவற்றை விரைவாகக் கற்றுக்கொள்ள முடியும். இந்தத் திறமைகள் 84 மாதங்களுக்கு, அதாவது 7 வயதுவரை இருக்கும்.

உதாரணத்துக்குப் பெற்றோர்கள் பாடத் தெரியாதவர்களாக இருந்தாலும், சொன்னதுபோல இசையைக் கேட்டுப் பிறந்த குழந்தை, இசையைக் கற்றுக்கொள்ளும் திறமையைக் கூடுதலாகப் பெற்றிருக்கும்," என்கிறார் மைதிலி.

புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணாவின் நாற்பதாண்டு காலச் சிஷ்யை இவர். இசையை ஆதாரமாகக் கொண்டு உடல் வலி நீக்கிக் குணப்படுத்துதல், குழந்தைகளைத் தூங்கச் செய்தல், இளைப்பாறுதல், குழந்தையின் அழுகையை நிறுத்துதல், தலைவலி - மைக்ரேன் தலைவலியை நீக்குதல், அறிவூட்டல் மற்றும் புத்தாக்கம், மனஅழுத்தம் மற்றும் வலி நீக்குதல், தூக்கம் மற்றும் இளைப்பாறுதல், கருவுறுதலும் குழந்தையும், மன அமைதி, இதயத்துக்கு இசை, பயம் மற்றும் கவலை, அறிவுக் குவிப்பு மற்றும் நினைவாற்றல், மனஅழுத்தம், நீரிழிவு நோய் போன்ற தலைப்புகளில் இசைக் கோவைகளை வெளியிட்டுள்ளார்.



டாக்டர் மைதிலி

தொடர்புக்கு: dr.tmythily@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x