Published : 27 Jan 2018 10:13 AM
Last Updated : 27 Jan 2018 10:13 AM
வீ
டியோ கேம்களைக் கொண்டு கல்வியிலும், கற்றல் திறன்களை மேம்படுத்துவதிலும் பெரும் புரட்சியை செய்துவரும் மனிதர் ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் மார்க் பெர்கின்ஸி. கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேல் வீடியோ கேம் துறையில் பல கோடிகளை முதலீடு செய்துள்ளார். குறிப்பாகக் கல்வி தொடர்பான வீடியோ கேம்களை அதிகமாக தயாரித்திருக்கிறது இவருடைய நிறுவனம். வீடியோ கேம்களை பழிக்காதீர்கள், முறையாக பயன்படுத்தினால் அதனால் பல நன்மைகள் கிடைக்கும் எனத் தொடர்ந்து போராடி வருபவர் இவர்.
வீடியோ கேம்கள் பற்றி இரண்டு முக்கிய வாதங்களை மார்க் முன்வைக்கிறார்.
பழைய சீனப் பழமொழியின்படி, ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு நிகரானது.
தொழில்நுட்ப முன்னேற்றம் என்பது ஒரு வழி பாதை, இனி நாம் இதிலிருந்து பின்வாங்க முடியாது. பழமைவாதிகள் குறைகூறத்தான் செய்வார்கள். அவர்களை கண்டுக்கொள்ளாதீர்கள்.
காட்சியின் சிறப்பு
நீங்கள் ஆயிரம் வார்த்தைகளில் விளக்க வேண்டிய விஷயத்தை ஒரு படத்தில் விளக்கிவிடலாம் என்பதுதான் அந்த சீனப் பழமொழியின் அர்த்தம். இதை நாமே வாழ்க்கையில் பலமுறை உணர்ந்திருப்போம். ஆயிரம் ஆயிரம் வார்த்தைகளில் சொல்ல வேண்டிய அவல நிலையை, ஒரு கார்ட்டூன் அழகாகச் சொல்லிவிடும். இப்பொழுதெல்லாம் இன்டர்நெட்டில் பரவி வரும் மீம்ஸ்களுக்கும் இது பொருந்தும். இந்த முக்கிய பண்பைத்தான் வீடியோ கேம்களின் வலுவான அம்சமாக மார்க் முன்வைக்கிறார்.
ஒரு விஷயத்தை சிறு குழந்தைக்குப் புரிய வைக்க ஆறு மணி நேரம் விளக்க வேண்டும். அதையே ஒரு படத்தை வைத்து விளக்கினால்? ஆம், அதை அவர்கள் எளிதாகப் புரிந்துக்கொள்வார்கள். அதையேதான் வீடியோ கேம்களும் செய்கின்றன.
வீடியோ கேம்களின் பலனை முழுமையாகப் பெற கடினமான கருத்துக்கள், கோட்பாடுகள், அறிவியல் பரிசோதனைகளைப் புரிய வைக்க மாணவர்களுக்குப் பயன்படுத்தலாம். அடுத்ததாகக் குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வீடியோ கேம்களைப் பயன்படுத்தலாம்.
கல்வி, விழிப்புணர்வுக்கான பல வீடியோ கேம்களை சந்தையில் வெற்றிகரமாக கொண்டுவந்தவர் மார்க் பெர்கின்ஸி என்பது குறிப்பிடதக்கது.
இனி திரும்ப முடியாது
இப்பொழுது நம்மிடையே இருக்கும் நவீனத் தொழில்நுட்பம் என்பது முன்னேறியபடியேதான் செல்லும். இங்கிருந்து நாம் பழமைக்குத் திரும்பிச் செல்ல முடியாது. இதை ஒரு வழிப் பாதை என்கிறார்கள். “அந்த காலத்துல எல்லாம் எப்படியிருந்துச்சு தெரியுமா..“ என்பது போன்ற வாதங்கள் தேவையற்றவை. வீண் நேர விரயம்தான்.
இந்த வாதத்தை நமக்குப் புரிய வைக்க, சாக்ரடீஸை மார்க் துணைக்கு அழைக்கிறார். ஆம், கிரேக்க தத்துவ மேதையான அதே சாக்ரடீஸேதான். சாக்ரடீஸ் மிக சிறந்த தத்துவ ஞானி, அற்புதமான சொற்பொழிவாளார். மக்கள் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தவர். அதற்காக வறுமையில் வாடினாலும், ஒரு பைசா வாங்கிக்கொள்ளாமல் தொடர்ந்து ஏதென்ஸ் நகர வீதிகளில் பரப்புரை செய்தவர்.
அறிவை மதித்து வந்த சாக்ரடீஸுக்கு எழுதுவது (குறிப்பெடுப்பது) பிடிக்காது. அவர் சொற்பொழிவு ஆற்றும்போது யாரவது ஏதாவது குறிப்பெடுத்தால், அவருக்குக் கோபம் வந்துவிடும். பேசும்போது கவனிக்காமல்- அதை புரிந்துகொள்ளாத - ஒருவர் எவ்வளவுதான் அதைப் பற்றிக் குறிப்பெடுத்தாலும் வீண் என்பது சாக்ரடீஸின் கருத்து. கவனிக்காமல் எழுதுவதால் மனிதன் சிந்திக்கும் திறனையும் நினைவாற்றலையும் இழந்துவிடுவான் என சாக்ரடீஸ் எச்சரித்து வந்தார்.
அதிகம் பயப்படாதீர்கள்
ஆனால் எழுதுவதால் உண்மையில் என்ன நடந்தது? நிச்சயம் சாக்ரடீஸ் எதிர்பார்த்ததுபோல் மனிதனின் அறிவு மங்கிவிடவில்லை. மாறாக எழுதி வைப்பது என்ற நிலை வந்தபின்னர்தான், நம் மனித சமூகம் வேகமாக முன்னேறியது.
இதே வாதத்தைத்தான் மார்க்கும் முன்வைக்கிறார். சாக்ரடீஸ் போன்று தேவை இல்லாமல் பயப்படாதீர்கள், பயமுறுத்தாதீர்கள். வீடியோ கேம்களை முறையாகப் பயன்படுத்தினால் பல நன்மைகள் உண்டு, அவற்றின் பயன்களை குறைத்து மதிப்பிடாதீர்கள் என்கிறார்.
(அடுத்த வாரம்: இன்னும் சில நன்மைகள்)
கட்டுரையாளர், டிஜிட்டல் சமூக ஆய்வாளர்
தொடர்புக்கு: write2vinod11@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment