Last Updated : 27 Jan, 2018 10:14 AM

 

Published : 27 Jan 2018 10:14 AM
Last Updated : 27 Jan 2018 10:14 AM

நலம் நலமறிய ஆவல் 19: பித்த வெடிப்பு போகாதா?

எனக்கு வயது 43. இரண்டு பாதங்களிலும் பித்தவெடிப்புகள் உள்ளன. கடைகளில் சில களிம்புகளை வாங்கிப் பயன்படுத்தினேன். களிம்பு தடவும்போது மட்டும் மறைகிறது. மறுபடியும் வந்துவிடுகிறது. டாக்டரிடம் காண்பிக்கவில்லை. இப்போது அந்த வெடிப்புகளில் வலியும் சேர்ந்துகொண்டுவிட்டது. இதற்கு என்ன செய்யலாம்? ஒரு யோசனை சொல்லுங்கள், டாக்டர்!

- க. சிவகாமிநாதன், திருநெல்வேலி.

பாதங்களில் காணப்படும் வியர்வைச் சுரப்பிகளில் வியர்வை சுரப்பது குறைவதால், அங்கு சருமம் உலர்ந்து வெடிக்கிறது. அந்த வெடிப்புகளைப் ‘பித்த வெடிப்புகள்’ என அழைக்கிறோம். பாதங்களின் அடியிலும் பக்கவாட்டிலும் வெடிப்புகள் காணப்படுவது இயல்பு. பக்கவாட்டில் உள்ள வெடிப்புகள் அதிகமாகவும், கடுமையாகவும், அடியில் உள்ள வெடிப்புகள் சற்றே குறைவாகவும் காணப்படும்.

பொதுவாக, பித்த வெடிப்பு கடுமையான பனிக் காலத்திலும், கோடையிலும் தொல்லை கொடுக்கும்; உடற்பருமன் இருந்தால் இது அடிக்கடி ஏற்படும். வெறும் காலில் நடப்பவர்களுக்கு இது ஏற்படும் வாய்ப்பு அதிகம். அல்லது பொருத்தமில்லாத காலணிகளை அணிந்தாலும் இது ஏற்படலாம். நீண்ட நேரம் நின்று வேலை பார்ப்பது பித்தவெடிப்பை வரவேற்கும்.

காலணிகள் ஏற்படுத்தும் ஒவ்வாமையும் பித்த வெடிப்புக்கு ஒரு காரணமாகலாம். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நரம்புகள் பாதிக்கப்படுவதால், இந்த வெடிப்புகள் நிரந்தரமாகவே தொல்லை கொடுக்கும். உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக இருந்தாலும், தைராய்டு சுரப்புக் குறைபாடு, சொரியாசிஸ் நோய் போன்றவை இருந்தாலும் இதே நிலைமைதான்.

இந்தக் காரணங்களில் உங்களுக்கு எது ஒத்துப்போகிறது என்று பாருங்கள். அந்தக் காரணத்தைக் களைந்துவிட்டால், பித்த வெடிப்புகளும் விடைபெற்றுவிடும்.

பித்த வெடிப்புகளை ஆரம்பத்திலேயே கவனித்து தகுந்த சிகிச்சை பெற்றுக்கொண்டால், விரைவில் குணமாகும். காலம் தாழ்த்தினால், வெடிப்புகள் சருமத்தையும் தாண்டி ஆழமாகச் சென்றுவிடும். அல்லது அவற்றில் பாக்டீரியா, பூஞ்சை போன்ற தொற்றுக் கிருமிகள் தொற்றிக்கொள்ளும். அப்போது வலி ஏற்படும். காய்ச்சல், நெறிகட்டுதல், ரத்தம் வருதல் போன்ற துணை அறிகுறிகளும் சேர்ந்து தொல்லைகள் அதிகமாகும். அதிலும் நீரிழிவு நோய் இருந்தால், பித்தவெடிப்புகள் ஆறுவதற்கு நாளாகும்.

உங்களுக்கு மீண்டும் மீண்டும் பித்த வெடிப்புகள் வருவதால், ஒருமுறை சருமநோய் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களுக்கு வலி ஏற்படுவதாகவும் சொல்லியிருக்கிறீர்கள். பித்தவெடிப்புகளில் தொற்று இருக்க வாய்ப்பிருக்கிறது. நீரிழிவு நோய் இருக்கிறதா என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஆரம்ப நிலையில் உள்ள பித்த வெடிப்பைக் குணப்படுத்த, ஈரத்தன்மையைத் தரும் தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், லிக்விட் பாரபின் எண்ணெய் போன்றவற்றில் ஒன்றை காலிலும் பாதங்களிலும் தடவலாம். இதேபோல் ஈரத்தன்மையை ஏற்படுத்தும் வேறு களிம்புகளையும் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பயன்படுத்தலாம்.

பாதங்களில் தொற்றுள்ளவர்களுக்குத் தகுந்த ஆன்டிபயாடிக் மருந்துகள் அல்லது பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள் தேவைப்படும். சிலருக்கு வலிநிவாரணிகளும் தேவைப்படலாம். இந்தத் தொல்லை மீண்டும் ஏற்படாமலிருக்க, பாதங்கள் எப்போதும் ஈரத்தன்மையுடன் இருக்க வேண்டியது அவசியம். அதற்குப் பாதங்களை அடிக்கடி தண்ணீரில் ஈரப்படுத்திக்கொள்ள வேண்டும். பனிக் காலத்து இரவுகளில், ஈரப்படுத்தும் களிம்புகளைப் பாதங்களில் பூசிக்கொண்டு, காலுறைகளையும் அணிந்துகொள்ள வேண்டும்.

மருத்துவரின் யோசனைப்படி நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது, உடல் பருமனைக் குறைப்பது, பொருத்தமான காலணிகளை அணிவது போன்ற தடுப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டியதும் முக்கியம்.

பாத சருமத்தைக் காக்கப் பொதுவான வழிகள்:

சத்துள்ள, சரிவிகித உணவைச் சாப்பிடுங்கள்.

தேவையான அளவு தண்ணீர் குடியுங்கள்.

தினமும் இருமுறை சோப்புப் போட்டுக் குளித்துப் பாதங்களைப் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.

வறண்ட தோலில் 'லிக்விட் பாரபின்' அல்லது ஆலிவ் எண்ணெயைத் தடவலாம்; ஈரப்பசையை உண்டாக்கும் களிம்புகளைத் தடவலாம்.

பொருத்தமான காலணிகளையும் ஷூக்களையும் அணியுங்கள்.

பருத்தியாலான காலுறைகள் மிக நல்லவை.

தேவையில்லாமல் கடுங்குளிரில் / பனியில் செல்வதும் வெயிலில் அலைவதும் ஆகாது.

சோப்பை அடிக்கடி மாற்றுவதும், அழகு சாதனப் பொருட்களை அளவுக்கு மீறிப் பயன்படுத்துவதும் சருமத்தின் ஆரோக்கியத்துக்கு ஆபத்து.

நலம், நலமறிய ஆவல்' கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் பிரபல மருத்துவ எழுத்தாளர் டாக்டர் கு. கணேசன். தங்களுடைய முக்கியமான மருத்துவச் சந்தேகங்களை வாசகர்கள் இப்பகுதிக்கு அனுப்பலாம்.

மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in
முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை,சென்னை - 600 002.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x