Last Updated : 23 Dec, 2017 11:59 AM

 

Published : 23 Dec 2017 11:59 AM
Last Updated : 23 Dec 2017 11:59 AM

நலம் தரும் நான்கெழுத்து 14: சோகம்... சுகமா, சுமையா..?

எப்போதெல்லாம் வானம் இருண்டு கருக்கிறதோ, அப்போதுதான் நட்சத்திரங்கள் தோன்றுகின்றன.

- காப்மேயர்

இந்தத் தொடரில் அச்சம் , கோபம், சந்தேகம் போன்ற அடிப்படை உணர்வுகள் ஏன் மனிதனுக்குத் தோன்றின, அவை சமநிலை சீர்குலைந்தால் என்னவாகும் எனப் பார்த்துவருகிறோம். இன்னும் சில முக்கியமான அடிப்படைக் குணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று சோகம்.

துக்கப்படுதல் என்பது எப்படித் தேவையான உணர்வாக முடியும்? இதற்கு விடை அளிக்க சார்லஸ் டார்வினைத்தான் நாம் துணைகொள்ள வேண்டும். வருத்தம் அல்லது கவலை என்பது ஏதேனும் இழப்பைத் தொடர்ந்து வருவது. எப்படி கோபம் என்னும் உணர்வு விலங்குகளை எதிரிகளிடமிருந்து காக்க உதவுகிறதோ அது போன்றே துக்கம் எனும் உணர்வு இழப்பைச் சமாளிக்க உதவுகிறது.

இழப்பினால் ஏற்படும் வலியை எதிர்கொள்ளும் காலகட்டம், இழப்புப் பருவம், அதாவது ‘க்ரீஃப்’ என ஆங்கிலத்தில் அழைக்கப்படும். இக்கால கட்டத்தில் எதிலும் ஆர்வமின்றி ஒதுங்கி இருப்பது, இழப்பைப் பற்றி மட்டுமே எண்ணுவது, பசி, தூக்கம் போன்றவை குறைவது, அழுவது போன்ற பல வெளிப்பாடுகள் தோன்றுகின்றன. இவை எல்லாவற்றுக்குமே பரிணாம ரீதியாகச் சில காரணங்கள் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

எதிர்கால இழப்புகளைத் தவிர்க்க…

வலி என்பது நாமெல்லாம் விரும்பாத ஒரு உணர்வு. ஆனால் வலி நமக்கு ஆபத்தை உணர்த்தும் ஒரு ஆதி உணர்வு. முள் குத்துவதையோ, தீ சுடுவதையோ உணர முடியவில்லை என்றால் எவ்வளவு பாதிப்புகள் ஏற்படுகின்றன?. அதுபோன்றே சோகம் என்னும் உணர்வும் நமக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பைப் பற்றி நம்முடைய முழுகவனத்தையும் ஈர்த்து எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய இழப்புக்களைத் தவிர்க்கக் கவனமாக இருக்க உதவுகிறது.

இதில் வியப்பு என்னவென்றால் மூளையில், உடலில் ஏற்படும் வலியை உணரும் அதே பகுதிகள்தான் வருத்தம், சோகம் போன்ற உணர்வுகளையும் உணர வைக்கின்றன. மூளைக்கு உடல்வலி, மனவலி இரண்டுமே ஒன்றுதான் போலிருக்கிறது.

பாரம் குறைக்கும் அழுகை

அதுபோன்றே துயரப்படும்போது அழுவதற்கும் காரணம் சொல்கிறார்கள் உளவியலாளர்கள். அழுவது என்பது ஒரு இறுக்கம் தளர்த்தும் செயல். குக்கரில் அழுத்தம் அதிகமானவுடன் நீராவி விசிலடித்து வெளியேறுவதுபோல், அழுதவுடன் நமது உடல் மற்றும் மூளையில் ஏற்படும் மாற்றங்கள் அவற்றிற்குப் புத்துணர்வு அளிக்கின்றன. அழுதவுடன் மனம் லேசாவது அதனால்தான்.

பெண்களுக்கு இதயநோய் குறைவாகக் காணப்படுவதற்கு அவர்கள் அடிக்கடி அழுது மனம் இளகுவதும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. அழுகை இன்னொரு சமூகரீதியான அறிகுறியாகவும் பயன்படுகிறது. ‘நான் இழப்பில் இருக்கிறேன். எனக்கு உதவி தேவை’ என உடலின் மொழியாகச் செய்தி சொல்வதும் கண்ணீர்தான்.

சோகம் இயல்பானது

உளவியல் அறிஞர் சிக்மண்ட் பிராய்டு சொல்வதைப் போல், சிலவகை மனரீதியான பாதிப்புகள் அவற்றைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தாலே குறைகின்றன. ஆக, சோகம் என்பது இன்ஜின் சூடானால் அதற்கு ஓய்வு கொடுத்துத் தண்ணீர் (கண்ணீர்) விட்டுக் குளிர்விக்க உதவும் ஒரு அத்தியாவசியச் செயல். அது இழப்பின்போது இயல்பானதும் இன்றியமையாததும்கூட. சில காலத்துக்குப் பின், இழப்பைப் பற்றி உணர்ச்சிவசப்படாமல் நம்மால் விலகி நின்று பேச முடிகிறது.

ஆனால் சிறு இழப்புகளுக்குக்கூட, அல்லது காரணமேயின்றி அதீதமாகத் துயரமும் சோகமும் அடைவது மனச்சோர்வு நோயாக மாறிவிடும் (டிப்ரஷன்). இது, இன்றைய காலகட்டத்தில் மிகவும் பரவலாகக் காணப்படும் பாதிப்பாகும். அதீத மனச்சோர்வு மற்றும் வருத்தத்தில் உழல்வது, எதிலும் நாட்டமின்றி இருப்பது, தூக்கமின்மை, அமைதியின்மை, உடல்சோர்வு, பசியின்மை மற்றும் தற்கொலை எண்ணங்கள் எனப் பல்வேறு அறிகுறிகள் இதனால் தோன்றுகின்றன. ஆக, வருத்தப்படுவது இயல்பானது. அது, அதீதமானால் தொந்தரவு. அவ்வளவுதான் சாராம்சம்.

(அடுத்த வாரம்: மகிழ்ச்சியும் துயரமே!)

கட்டுரையாளர், மனநலத் துறைப் பேராசிரியர்

தொடர்புக்கு: ramsych2@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x