Published : 20 Jan 2018 11:14 AM
Last Updated : 20 Jan 2018 11:14 AM

நலம் தரும் நான்கெழுத்து 18: நுகர்வெனும் பெருவெறி!

தேவையில்லாத பொருட்களையெல்லாம் வாங்கிக்கொண்டே இருந்தால், தேவையான பொருளை வாங்க முடியாமல் போய்விடும்

- வாரென் பஃபெட்

தற்போது சென்னை புத்தகக் காட்சி நடைபெறுகிறது. அதை ஒட்டிய ஒரு நகைச்சுவை. “தேவையில்லாமல் பொருட்கள் வாங்குவதைத் தவிர்ப்பது எப்படி?” என்ற புத்தகம் இருக்கிறதா எனப் புத்தக அரங்கம் ஒன்றில் ஒருவர் கேட்டாராம். இருக்கிறது எனப் பதிப்பகத்தார் சொன்னவுடன் “அந்தப் புத்தகத்தில் பத்து புத்தகங்கள் கொடுங்கள்” என்றாராம் அவர்.

இதுபோல்தான் நாம் தேவையற்ற பல பொருட்களை வாங்கிக் குவிக்கும் ஒரு தலைமுறையாக மாறியிருக்கிறோம். முன்பெல்லாம் ஊருக்கு ஒரு தொலைக்காட்சிப் பெட்டி இருக்கும். கிராமமே அந்தப் பஞ்சாயத்துத் தொலைக்காட்சி முன் குடியிருக்கும். பின்னர் தெருவுக்கு ஒன்று என ஆகி, வீட்டுக்கு ஒன்று என ஆகி, இப்போதெல்லாம் ஒரே வீட்டிலேயே பெரியவர்களுக்கு ஒன்று, குழந்தைகளுக்கு ஒன்று, பதின்வயதினருக்கு ஒன்று என மூன்று, நான்கு தொலைக்காட்சிப் பெட்டிகள் இருக்கின்றன.

தொலைபேசியைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். முன்பெல்லாம் வீட்டுக்கு ஒன்று என இருந்தது, இப்போது காதுக்கு ஒன்று என ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் தலா இரண்டு அலைபேசிகளை வைத்துள்ளனர். எனக்குத் தெரிந்த ஒருவர் அலுவலகத்துக்கு ஒன்று, தனிப்பட்ட முறையில் ஒன்று, முகநூல் - வாட்ஸ் அப் பார்க்க ஒன்று என மூன்று தொலைபேசி எண்கள் வைத்துள்ளார். அநேகமாக நேரில் பேசுவதற்கும்கூட ஒரு எண் வைத்திருப்பார்.

தேவைக்கு அதிகம் வேண்டாம்

தனிமனிதனை மட்டுமன்றி சமூகம், சுற்றுச்சூழல் போன்ற பலவற்றையும் நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது நுகர்வென்னும் பெருவெறி. உலகில் உள்ள அனைவருக்கும் போதுமான வளங்கள் உலகில் உள்ளன. ஆனால், ஒரே ஒரு தனிமனிதனின் பேராசையை நிறைவேற்ற உலகில் உள்ள அனைத்து வளங்களாலும் இயலாது என மகாத்மா காந்தி சொன்னதுபோலத்தான் நாம் வாழ்ந்துவருகிறோம்.

ஸ்டீவ் ஜாப்ஸ் சொன்னதாக ஒரு கூற்றைச் சொல்வார்கள். ‘நான் முதலில் பொருட்களை உருவாக்குவேன். பின்னர் அதற்கான தேவைகளை உருவாக்குவேன்’ என. வணிக நோக்கில் அவரது கருத்து வெற்றிகரமானதாக இருந்தாலும், தனிமனித மற்றும் சமூகச் சூழல் நோக்கில் அக்கருத்து பெரும் பாதிப்புக்களையே ஏற்படுத்தக்கூடியது.

தேவைக்கு அதிகமாகப் பொருட்கள் வாங்குவதுகூட ஒரு மனநல பாதிப்பாக அறியப்படுகிறது. போதை, சூது போன்றவற்றுக்கு அடிமையாவதைப் போன்றே பொருட்களை வாங்கிக் குவிப்பதும் ‘ஆனியோமேனியா’ என்னும் நோயாக அறியப்படுகிறது.

நீளும் பொருட்களின் பட்டியல்

தனிமனிதர்கள் வாழ்க்கைக்குத் தேவையான இன்றியமையாத பொருட்கள் என்ற பட்டியல் பெரிதாகிக்கொண்டே போவதால் வருமானம் என்பதே செலவழிப்பதற்கான ஒன்று என்றாகிவிட்டது. ‘கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்றெல்லாம் கடன்பட்டவர்களின் துன்பங்களைப் பேசியது போய், இப்போதெல்லாம் கடன் வாங்குவதே பெருமையாக மாறிவிட்டது. அதிலும் கடன் அட்டை என்பது பெயருக்கு ஏற்றாற்போல் அட்டைபோல் ஒட்டிக்கொண்டு ரத்தத்தை உறிஞ்சுவதாகவே ஆகிவிட்டது.

‘ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லை

போகாறு அகலாக் கடை’

- என வள்ளுவர் சொன்னபடி வருமானம் அதிகமாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. செலவழிப்பது அதிகம் இல்லாமல் இருந்தால் போதும் என்றிருந்த தலைமுறை, இப்போது டைனோசர்கள்போல் உலகிலிருந்து அழிந்து போய்விட்டது.

அறிவெனும் மாபெரும் அழகிய உலகினுள் நம்மை அழைத்துச் செல்லும் திறவுகோலாக இருக்கவேண்டிய கல்வி, இப்பொருளீட்டும் பந்தயத்தில் வெற்றிபெறப் பயன்படுத்தும் ஊக்க மருந்தாக மாறிவிட்டது. விளைவு, எல்.கே.ஜி. படிக்கும் குழந்தைகள்கூட இன்று ‘வாழ்க்கையே பயங்கர டென்ஷன்’ எனப் புலம்புவதைக் கேட்கிறோம்.

இந்த ஓட்டப்பந்தயமே நமக்குப் பலவிதமான மன அழுத்தத்தை அளிக்கிறது. வெளிநாடுகளில் நல்ல வேலைகளில் வசதியாக இருந்தவர்கள்கூட அதை விட்டு ஓடிவந்து விவசாயம் செய்கிறேன், கால்நடைப் பண்ணை வைக்கிறேன் என்றெல்லம் ‘மினிமலிஸ்டிக் லிவிங்’ எனப்படும் எளிய வாழ்க்கையை நோக்கிச் செயல்படுவது இந்த அழுத்தத்திலிருந்து தப்பிக்கும் முயற்சியே.

ஆக, ஆசையே எல்லா துன்பத்துக்கும் காரணம் எனச் சொல்வது சரிதான். கொஞ்சம் ஆசைகளைக் குறைத்தால் அமைதியாக வாழலாம். ஆனால், அதற்காக ஆசையே இல்லாமல் இருக்க முடியுமா?

கட்டுரையாளர், மனநலத் துறைப் பேராசிரியர்
தொடர்புக்கு: ramsych2@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x