Published : 02 Dec 2017 11:08 AM
Last Updated : 02 Dec 2017 11:08 AM

டிஜிட்டல் போதை 11: அடிமையான ராணுவ மருத்துவர்!

 

ரி

ச்சர்டு டொனால்ட் நமக்குப் பழக்கமானவர்தான். வாஷிங்டனில் உள்ள அமெரிக்க ராணுவ மருத்துவமனையில் மார்பைனுக்குப் பதிலாக வீடியோ கேமை பரிந்துரைத்தவர் இவர்தான் என்று இந்தத் தொடரின் ஆரம்ப அத்தியாயங்களில் கண்டிருக்கிறோம்.

அவர் அப்படிச் செய்ததற்குக் காரணம் இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன், வீடியோ கேமுக்கு அடிமையாகித் தன் குடும்ப வாழ்க்கையை டான் (டொனால்ட்) இழந்திருந்தார். சொந்த வாழ்க்கை அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. ஆனால் சுதாரித்துக்கொண்ட டான், வீடியோ கேம் அடிமைப் பழக்கத்திலிருந்து மீண்டு இப்போது திருந்தி வாழ்கிறார்.

வீடியோ கேமின் ‘ஆட்டம்’

முன்னதாக, டான் மருத்துவ மேற்படிப்புப் படித்து முடித்தவுடன் ராணுவ மருத்துவமனையில் வேலை கிடைத்தது. சில ஆண்டுகளில் திருமணம் செய்துகொண்டார். இரண்டு பிள்ளைகள் பிறந்தன. அமைதியான வாழ்க்கை. வேலையில் பெரும் சுமை இல்லை. அப்போது அமெரிக்கா பெரிய போர் எதிலும் ஈடுபடாத நேரம்.

ராணுவ மருத்துவமனையில் ஓய்வு நேரத்தில் வெறுப்பாக இருக்கும். நேரத்தைக் கழிக்க வீடியோ கேம் விளையாடத் தொடங்கினார். எதிரிகளைத் தேடித் தேடிச் சுடும் விளையாட்டு. திடீர் திடீர் என எதிர்ப்படும் எதிரிகள், அதனால் ஏற்படும் ‘அட்ரினலின் ரஷ்’, அந்த சிலிர்ப்பான அனுபவத்துக்கு டான் அடிமையாகிவிட்டார். அங்குதான் பிடித்தது சனியன்.

பொழுதுபோக வீடியோ கேம் என்ற நிலை போய் சதா சர்வ காலமும் வீடியோ கேம் விளையாட ஆரம்பித்தார். வீட்டுக்கு வந்து சிறிது நேரம் குடும்பத்துடன் இருப்பார். அவர்கள் உறங்கிய பின் தனக்கு அலுவலக வேலை இருப்பதாகக் கூறிவிட்டுக் கணினி முன் உட்கார்ந்து விளையாடத் தொடங்கிவிடுவார். இதோ அதோ என்பதற்குள் விடிந்துவிடும். பிறகு, வேலைக்குச் செல்வார். அங்கேயும் வீடீயோ கேம். உடல் சோர்வுற்றால் வேலை நேரத்திலேயே தூங்குவார். அல்லது வீட்டில் தூங்கிவிடுவார். மருத்துவமனைக்கே செல்லாமல் இருந்தார்.

விளையாட்டு தந்த விளைவு

தூக்கமின்மை தன் வேலையைக் காட்ட ஆரம்பித்தது. முதலில் உடல் சோர்வு. மெல்ல மனச்சோர்வும் வர ஆரம்பித்தது. மனச்சோர்விலிருந்து தப்பிக்க அவர் மீண்டும் வீடியோ கேம் விளையாடினார். எந்நேரமும் வீடியோ கேம் விளையாட்டுதான். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அவருடைய மனைவி ஒரு நாள் வெடித்துவிட்டார். ஆனால், எந்தப் பயனும் இல்லை. டான் காது கொடுத்துக் கேட்கவில்லை. விளையாடிக்கொண்டேதான் இருந்தார். வேறு வழி இல்லை என்று, டானின் மனைவி கணினியைப் பலவந்தமாக அணைத்துவிட்டார்.

டானுக்கு வந்ததே கோபம். அவர் எதிரில் நிற்பது அவரின் காதல் மனைவி என்று டானின் மூளைக்கு அப்போது உறைக்கவில்லை. வீடியோ கேமில் வரும் எதிரிதான் என அவர் மூளை நினைத்துக்கொண்டது. மிகவும் மூர்க்கமாகத் தன் மனைவியை அடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து அவர் மனைவி இவரைப் பிரிந்து குழந்தைகளைத் தன்னுடன் அழைத்து சென்றுவிட்டார்.

பாதிக்கப்படும் மனம்

டான் உடன் பணிபுரியும் மருத்துவர், அப்போதுதான் வீடியோ கேம்கள் போதைப் பழக்கத்துக்கு நிகராக அதை விளையாடுபவர்களை அடிமையாக்குவதைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார். ஆனால் டானின் அன்றாட நிகழ்வுகளைப் பார்த்ததில், அது உண்மைதான் என அவர் உணர்ந்துவிட்டார். டானை மெல்ல வழிக்குக் கொண்டுவந்தது அவர்தான். டானும் அவரும் வீடியோ கேம்களைப் பற்றி நிறைய ஆய்வுக் கட்டுரைகளைப் படித்தார்கள். டான் மெல்ல வீடியோ கேமை மறந்து இன்று திருந்தி வாழ்கிறார்.

வீடியோ கேமின் விளைவுகளைப் பற்றி டான் சரியாகப் பட்டியலிடுகிறார். ஆய்வுகளில் கூறுவதுபோல அது ஒரு போதைப்பொருள்தான் என ஒப்புக்கொள்கிறார். வீடியோ கேம் விளையாடும்போது டோபோமைன் அதிகமாவதும் அட்ரினலின் ரஷ் தனக்கு ஏற்பட்டதாகக் கூறுகிறார்.

ஆனால் மேலும் சில விளைவுகளைச் சேர்க்கிறார். முதலில் தூக்கமின்மை. அதனால் ஏற்படும் தொல்லைகள், சிக்கல்கள். அடுத்து உணர்வு நிலை குன்றுவது. மனச்சோர்வு, மனக் கலக்கம், மனக் குழப்பம் போன்றவை.

(அடுத்த வாரம்:வராத தூக்கம்… வராத கவனம்!)
கட்டுரையாளர், டிஜிட்டல் சமூக ஆய்வாளர்
தொடர்புக்கு: write2vinod11@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x