Published : 30 Dec 2017 11:59 AM
Last Updated : 30 Dec 2017 11:59 AM
சூதாட்டம் என்பது நமக்கு மகாபாரதக் கதைகளில் இருந்தே தெரியும். சூதாட்டம் ஆடுவது தவறு என்று சொல்லித்தான் பெற்றோர்கள் பலரும் தங்களின் குழந்தைகளை வளர்க்கிறார்கள். இதனால் சூதாட்டம் ஒழிந்துவிட்டதா என்ன? இன்று, டெக்னாலஜி உதவியுடன் பணம் பிடுங்க வந்துவிட்டது, ஆன்லைன் சூதாட்டம்.
மங்காத்தா, மூணு சீட்டு, ரம்மி, குதிரை ரேஸ், கிரிக்கெட் பெட்டிங் என்று சூதாட்டம் பல பரிமாணங்களை எட்டிவிட்டது. கிராமத்தில் சிலர் சீட்டு விளையாடிக்கொண்டிருப்பார்கள். போலீஸ் வருகிறது என்று தெரிந்தால் துண்டைக் காணோம் துணியைக் கணோம் என்று ஓடிவிடுவார்கள்.
சூதாட்டங்களின் சொர்க்கபுரி
திருமண வீடுகளில் பொழுதுபோக்குக்காக ரம்மி விளையாடுவார்கள். ஆனால், பொதுவாக சண்டையில்லாமல் முடிந்தது இல்லை. நகரங்களில் கிளப்புகளில் விளையாடப்படும் சூதாட்டம் வெளிப்பார்வைக்குப் பெரிதாகத் தெரிவதில்லை. கோவாவில் இதற்கென கேசினோக்கள் இருக்கின்றன. அமெரிக்காவுக்குச் சென்றவர்களுக்குத் தெரியும், லாஸ் வேகாஸ் என்றாலே சூதாட்டம்தான் என்று. அது சூதாட்டங்களின் சொர்க்கபுரி.
தமிழ்நாட்டில் குதிரை பந்தயம் தடைசெய்யப்பட்டுவிட்டது. அதன் நினைவாக வைக்கப்பட்ட குதிரை சிலை இன்றும் அண்ணா சாலையில் நிற்கிறது. கிரிக்கெட்டில் நடக்கும் சூதாட்டம் பற்றிச் செய்திகளில் படிக்கிறோம். ஆனால் ஒன்று தெரியுமா… இங்கிலாந்திலும் ஆஸ்திரேலியாவிலும், கிரிக்கெட் மட்டுமல்லாமல் எந்த ஒரு விளையாட்டுக்கும் நீங்கள் பெட் கட்டி ஆடலாம்.
ஆன்லைன் சூதாட்டங்கள்
எல்லாம் சரி… வீடியோ கேமில் சூதாட்டம் எப்படி? முன்பெல்லாம் அங்கே இங்கே என்று திரைமறைவாக ஆடிக்கொண்டிருந்த சூதாட்டம் இன்று ஆன்லைன் உதவியுடன் உங்கள் உள்ளங்கைக்கே வந்துவிட்டது. ஸ்மார்ட்போனில் இதற்கென நிறைய ‘ஆப்’கள் வந்துவிட்டன. தரவிறக்கம் செய்துகொண்ட அடுத்த நொடி, நீங்கள் சூதாடலாம்.
இதில் பதின் வயது சிறுவர்கள் நிறைய பேர் ஈடுபட்டுள்ளனர். இதில் இருக்கும் முதன்மைப் பிரச்சினை, உங்கள் வாரிசு இதில் விளையாடினால் உங்களால் கண்காணிப்பது மிகவும் கடினம். அதனால் நம் வாரிசுகளை இதிலிருந்து காப்பாற்ற நாம் அதைப் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்வது அவசியம்.
(அடுத்த வாரம்: உங்களை ‘இணை’க்கும் சூது!)
கட்டுரையாளர்,டிஜிட்டல் சமூக ஆய்வாளர்
தொடர்புக்கு: write2vinod11@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment