Published : 22 Jul 2014 10:08 AM
Last Updated : 22 Jul 2014 10:08 AM
ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ உணவுப் பழக்கம் இன்றியமையாதது. எப்படிச் சாப்பிட வேண்டும் என்பதுடன், சாப்பிட்ட பின் செய்யும் விஷயங்களும் உடல்நலனைப் பாதிக்கும். அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள, சாப்பிட்ட பின் செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன?
#சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால், அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதலை விளைவிக்கும். பல சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் புற்றுநோய் ஏற்பட எந்த அளவு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டோ, அவ்வளவு பெரிய தீமை இது.
#உணவு சாப்பிட்ட உடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் பலருக்கு உள்ளது, அது கெடுதல். அது காற்றை வயிற்றுக்குள் அனுப்பி, வயிறு உப்புசத்துக்கு ஆளாக்கும் நிலையை (Bloated with air) உருவாக்குகிறது. எனவே, சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்பு பழத்தைச் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி, 2 மணி நேரத்துக்குப் பின்னர் பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
#சாப்பிட்டவுடன் தேநீர் குடிக்காதீர்கள். தேயிலையில் அமிலத்தன்மை உள்ளது. இது உணவில் உள்ள புரதச் சத்தைக் கடினமாக்கிச் செரிமானத்தைக் கடினமாக்கும் வாய்ப்பு உண்டு.
#சாப்பிட்ட பிறகு பெல்ட்டுகளைத் தளர்த்திவிடாதீர்கள். அது குடலை வளைத்துத் தடுக்க வாய்ப்புள்ளது.
#சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கம் கூடாது. குளிக்கும்போது உடல், கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் வயிற்றுச் செரிமானத்துக்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது. வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை இது பாதிக்கக்கூடும்.
#சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று விவரமறிந்தவர்கள்கூடச் சொல்வது உண்டு. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமல் தடுக்க, உடனடி நடை உதவும் என்றுகூடச் சிலர் சொல்லலாம். சாப்பிட்ட பின் நடந்தால் செரிமான உறுப்புகளுக்கு உணவு போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, உணவின் சத்துகளை ரத்தத்தில் சேர்க்கவிடாமல் அந்த நடை செய்துவிடும். எனவே, இந்தப் பழக்கத்தைக் கைவிடுவது நல்லது.
#மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்துத் தூங்கக் கூடாது. உணவு உண்ட பின் அரை மணி நேரம் கழித்தே உறங்கச் செல்ல வேண்டும். அப்போதுதான் உணவு முறையாகச் செரிக்கும்.
வாசகர் பக்கம்
வாசகர்கள் கவனத்திற்கு... இப்பகுதிக்கு நீங்களும் பங்களிக்கலாம். உடல்நலம் சார்ந்த தகவல்களை உரிய ஆதாரத்துடன் எங்களுக்கு எழுதலாம்.
டி.எஸ்.உமாராணி- மின்னஞ்சல் முகவரி: nalamvaazha @thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT