Published : 23 Dec 2017 11:50 AM
Last Updated : 23 Dec 2017 11:50 AM
எனக்கு 23 வயது. பல வருடங்களாகவே பற்சொத்தைப் பிரச்சினை உள்ளது. இதுவரை எந்த சிகிச்சையையும் நான் எடுக்கவில்லை. இதன் விளைவாக பின்கடைவாயின் இருபுறமும், மேல் கீழாக 4 பற்கள் சொத்தையாகிவிட்டன, ஈறுகளில் ரத்தக்கசிவும் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினை உளவியல் ரீதியாகவும் என்னை பாதித்துள்ளது. வலது மார்பில் அவ்வப்போது வலி தோன்றி மறைகிறது. ‘பற்சொத்தையில் பாக்டீரியா இருக்கும், இவை ரத்த நாளங்கள் வழியாகச் சென்று இதய வால்வுகளைத் தாக்கக்கூடும்’ என்று ஒரு கட்டுரையில் படித்தேன். இது எனக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. திடீரென்று மாரடைப்பு எற்பட்டுவிடுமோ என்று பயப்படுகிறேன். இந்த அறிகுறி மேற்சொன்னதன் வெளிப்பாடுதானா? என்னைத் தெளிவுபடுத்த வேண்டுகிறேன். கூடவே மீதமுள்ள பற்கள், ஈறுகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிகளையும் காட்டுங்கள்.
- சந்தோஷ்குமார், சேலம்.
பல் சொத்தை ஏற்படுவதற்கு முக்கியக் காரணம், இனிப்புகளை அதிகமாகச் சாப்பிடுவது. குறிப்பாக, பற்களில் ஒட்டக்கூடிய இனிப்பு மாவு, பிஸ்கட், மிட்டாய், சாக்லேட்டு, ஐஸ்கிரீம், கேக், பேக்கரிப் பண்டங்கள் போன்றவற்றில் உள்ள சர்க்கரைப் பொருள், பல் இடுக்குகளில் ஒட்டிக்கொள்ளும்போது, வாயில் உள்ள பாக்டீரியா இவற்றுடன் வினைபுரிந்து, லேக்டிக் அமிலத்தைச் சுரக்கின்றன. இந்த அமிலம் பல்லின் வெளிப்பூச்சான எனாமலை அரித்துச் சிதைக்கிறது. இதன் விளைவால் பற்கள் சொத்தையாகின்றன.
பற்களைச் சுத்தமாகப் பராமரிக்கத் தவறினாலும் பாக்டீரியா வளர்ந்து பல் சொத்தையை உண்டாக்கும். புகைப்பிடிப்பது, வெற்றிலைப் பாக்குப் போடுவது போன்றவற்றால் பற்களில் கரை படியும். இதில் பாக்டீரியா குஷியாக வாழும். இந்த நிலைமை நீடித்தால், பற்களில் சொத்தை விழும்.
சொத்தைப் பல்லை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால், எனாமலை அடுத்துள்ள டென்டைன் பகுதிக்கும் சொத்தை பரவிவிடும். அப்போது பற்களில் கறுப்புப் புள்ளி தெரியும். அங்கு குழி விழும். இந்த நிலைமையிலும் சிகிச்சை பெறாவிட்டால், பல் கூழ் மற்றும் வேர்களும் பழுதாகிவிடும். நாளடைவில் இந்த வேர்கள் வலுவிழந்து போகும். அப்போது பற்கள் ஆட்டம் கண்டு தாமாகவே விழுந்துவிடும்.
பல் இடைவெளிகளில் உணவுத் துகள்கள் தங்கினாலும், குச்சி, குண்டூசி போன்றவற்றால் பல் குத்தினாலும், கிருமித் தொற்று ஏற்பட்டு ஈறுகள் வீங்கி வலிக்கும். பல் துலக்கும்போது இந்த ஈறுகளிலிருந்து ரத்தம் கசியும். வாய் நாற்றம் ஏற்படும். பல் ஆட்டம் கண்டு விரைவில் விழுந்துவிடும். ‘பயோரியா’ என்று இதற்குப் பெயர்.
இவற்றுக்கெல்லாம் இப்போது நவீன சிகிச்சைகள் வந்துள்ளன. பல் மருத்துவரை நேரில் அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள்.
பற்களிலிருந்து பாக்டீரியா இதயத்துக்குப் பரவினால், இதய வால்வில் பிரச்சினை வரும் என்பது உண்மைதான். ஆனால், அந்த நிலைமை உங்களுக்கு ஏற்படவில்லை. அதனால் வீணான பயமும் தேவையில்லாத உளவியல் சிந்தனைகளும் வேண்டாம்.
உங்கள் மார்பில் வரும் வலி மாரடைப்புக்கான அறிகுறி இல்லை. எனவே, மாரடைப்பு குறித்த பயமும் தேவையில்லை. ஒரு பொது மருத்துவரைச் சந்தித்து இந்த வலிக்குக் காரணம் தெரிந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள்.
பற்கள் மற்றும் ஈறுளைப் பாதுகாக்க....
பற்சுத்தம் மிக முக்கியம். காலையில் எழுந்ததும் ஒருமுறை, இரவு தூங்கச் செல்லும் முன்பு ஒருமுறை என இருமுறை பல் துலக்க வேண்டும்.
பல் கரை அதிகமிருந்தால், மருத்துவரைச் சந்தித்து ‘ஸ்கேலிங்’ முறையில் அதை அகற்றிவிடலாம். அதன் பின்பு ‘பிளீச்சிங்’ முறையில் பற்களைச் சுத்தம் செய்து இதைச் சரிப்படுத்திவிடலாம்.
கரி, உப்பு, மண், செங்கற்பொடி, சாம்பல், நெல்உமி போன்றவற்றால் பல் துலக்கக் கூடாது.
தினமும் ஒரு காரட் அல்லது ஒரு வெள்ளரி சாப்பிட்டால், பல் சுத்தமடைந்து ஆரோக்கியத்துடன் இருக்கும்.
பற்களில் ஒட்டும் தன்மையுள்ள சாக்லேட், மிட்டாய், பிஸ்கட், இனிப்பு மாவு, சூயிங்கம், ஐஸ்கிரீம் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட நேர்ந்தால், உடனே தண்ணீரால் வாயை நன்றாகக் கொப்பளித்துவிட வேண்டும்.
குண்டூசி, குச்சி போன்றவற்றால் பல் ஈறுகளைக் குத்தி அழுக்கு எடுக்கக்கூடாது.
நகம் கடிக்கக் கூடாது.
குளிர்பானங்களை அதிகம் குடிக்கக்கூடாது.
மது, புகையிலை, வெற்றிலை, பான்மசாலா போன்றவை பற்களுக்கு எதிரிகள்.
ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் ஆலோசனை பெறும் பழக்கம் இருந்தால், பல்லில் ஏற்படுகிற பல பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே தடுத்துவிட முடியும்.
‘நலம், நலமறிய ஆவல்' கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் பிரபல மருத்துவ எழுத்தாளர் டாக்டர் கு. கணேசன். தங்களுடைய முக்கியமான மருத்துவச் சந்தேகங்களை வாசகர்கள் இப்பகுதிக்கு அனுப்பலாம்.
மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in
முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம்,
124, வாலாஜா சாலை, சென்னை - 600 002.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT