Last Updated : 09 Dec, 2017 12:20 PM

1  

Published : 09 Dec 2017 12:20 PM
Last Updated : 09 Dec 2017 12:20 PM

குழந்தை மனசு புதிரல்ல

“சார் என் பையனை என்ன செய்யணும்னு தெரியலை. சொன்ன பேச்சைக் கேட்க மாட்டேங்கிறான். அடிக்கடி பொய் சொல்றான். மற்ற பசங்களை அடிக்கிறான்” என்று சிலர் தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் புலம்புவதைக் கேட்டிருக்கலாம்.

சிலருக்கு வேறு விதமான பிரச்சினை. “சார் ஒரு இடத்திலே இருக்க மாட்டேங்கிறான் சார். ஒரு வீட்டுக்கு அழைச்சுட்டுப் போக முடியலை. அங்க இருக்கிற சாமான்களையெல்லாம் எடுக்கிறான். உடைக்கிறான். ஓடுறான்” என்பார்கள்.

“விவரமாத்தான் இருக்கான். ஆனால் படிப்புல அதைக் காட்ட மாட்டேங்கிறான். மார்க் வாங்காம இருந்து என்ன புண்ணியம்?”. இது இன்னும் சில பெற்றோரின் புலம்பல்.

இன்று, கல்வி மற்றும் அதற்கான பணச் சுமை ஆகியவற்றால் குழந்தைகள், பெற்றோர்கள் இருவருக்குமே மன அழுத்தமும் நெருக்கடியும் உண்டாகின்றன. ஆனால் அறிவியல் யுகத்தில் இந்தப் பிரச்சினையைச் சரியாகக் கையாண்டால் எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் என்பதை உறுதிசெய்ய முடியும்.

இதைத்தான் ‘மருத்துவர் பார்வையில் குழந்தைகள் மனநலம்’ எனும் புத்தகத்தில் மனநல மருத்துவர் பி.பி. கண்ணன் தெரிவிக்கிறார். சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இவர் இணைப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் உதவிப் பேராசிரியராக ஆறு ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார்.

தமிழில் அறிவியல் நூல்கள் குறைவாகவே வருகின்றன. அதிலும் தான் சார்ந்த துறைகளில் மிகவும் அனுபவம் மிக்கவர்கள் அதைப் புத்தகங்களாகப் பதிவு செய்வதில்லை. குழந்தைகள் மனநலத் துறையில் இருக்கும் இந்தத் தேவையை மருத்துவர் கண்ணனின் புத்தகம் பூர்த்தி செய்கிறது.

படிப்பு சாராக் கல்வி

குழந்தைகளுக்கு ஒவ்வொரு பருவத்திலும் ஏற்படும் சிக்கல்கள், நெருக்கடிகள், கீழ்ப்படியாமை, நடத்தைக் குறைபாடு, நினைவுத்திறன், பாலியல் உணர்வுகள், பாலியல் துன்புறுத்தல்கள், தேர்வு தொடர்பான பயம் என எல்லாவற்றையும் விலாவாரியாக மனநல மருத்துவம் மற்றும் கள அனுபவத்தின் மூலம் விளக்கியிருக்கும் கண்ணன், எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வுகளையும் முன்வைக்கிறார்.

குறிப்பாக, அடிப்பதாலோ வேறு தண்டனைகளைக் கொடுப்பதாலோ பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்பதைத் தெளிவாக தெரிவிக்கிறார்.

கவனச்சிதைவு நிலை (அட்டென்ஷன் டிஃபிசிட் ஹைபர் ஆக்டிவ் டிஸார்டர்) குறித்துப் பேசும் கண்ணன், ‘இத்தகைய குழந்தைகளுக்கு விளையாட்டு, பரதநாட்டியம் போன்ற பயிற்சிகளை அளிப்பதன் மூலம் அவர்களிடமிருக்கும் திறன்களை வெளிப்படுத்த முடியும். தொடக்கக் கல்வி நிலையில் இருந்தே அவர்களுக்குப் படிப்பு சாராக் கல்வியும் (எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டி) தகுந்த அளவில் கலந்து அளிக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது பிரச்சினை உள்ள சிறுவர்கள், ஒரு குறிப்பிட்டத் துறையில் மற்றவர்களுக்கு வழிகாட்டும் நிலையில் சமுதாயத்தில் மிளிர்வார்கள்’ என்கிறார்.

தரம் பிரிக்கும் தேர்வு

இன்றைய காலக்கட்டத்தில் மிகவும் முக்கியமாகப் பேசப்படும் தேர்வு முறை குறித்து அவர் சொல்வது கவனிக்கத்தக்கது. “தேர்வு என்பது பத்துப் பன்னிரண்டு லட்சம் பள்ளி மாணவர்களை அவர்களின் கற்கும் திறன் அடிப்படையில், நினைவாற்றலின் அடிப்படையில் தரம் பிரிக்கும் ஒரு செயல், அவ்வளவே” என்பது இவரது வாதம்.

அதேபோல, “பொதுவாக ஒரு மாணவனின் ஆர்வம், வேட்கை எந்தத் துறையில் உள்ளது, அவனால் அதைப் படிக்க இயலுமா என்பதை அறிந்து ஆலோசனை கூற வேண்டும். கணிதம் சுத்தமாக வராத மாணவனை பொறியியல் துறையில் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்” என்கிறார்.

இன்று பல்வேறு பாடத் திட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. சி.பி.எஸ்.இ. படித்த மாணவன், மாநிலப் படத்திட்டத்தில் படித்தவனைவிடப் புத்திசாலி என்கிறார்கள். ஆனால் கண்ணனோ, “நம்முடைய பாடத்திட்டம் மட்டுமல்ல, உலகம் முழுவதிலுமே அனைத்துப் பாடத்திட்டங்களும் அடிப்படைக் கருத்துகளையும் கோட்பாடுகளையும் மனப்பாடம் செய்யவைத்து அவற்றை ஒப்பித்தலையோ அல்லது வாந்தி எடுத்தாற்போல எழுதுவதையோ மட்டுமே மையமாகக்கொண்டு அமைந்துள்ளன. அளவில் வேண்டுமானால் மாறுபடலாம். அடிப்படை ஒன்றுதான்” என்கிறார்.

பிரத்யேகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கிறதோ இல்லையோ, தங்கள் குழந்தைகளிடமிருக்கும் பிரச்சினைகளின் தன்மைகளை பெற்றோர்கள் புரிந்துகொள்வதற்கு இப்புத்தகம் பெரிதும் உதவும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x