Last Updated : 18 Nov, 2017 12:38 PM

 

Published : 18 Nov 2017 12:38 PM
Last Updated : 18 Nov 2017 12:38 PM

சர்க்கரை கம்மியாய் ஒரு தேகம்!

ம்மில் பெரும்பாலானவர்கள் இனிப்பு ருசிக்கு அடிமையானவர்கள்தான். இனிப்புக்கான வேட்கை, நாம் குழந்தைகளாக அம்மாவிடம் அருந்தும் தாய்ப்பாலிலிருந்து தொடங்குகிறது.

இந்தியாவில் ஒரு நபர் சராசரியாக ஆண்டுக்கு 20 கிலோ வெள்ளைச் சர்க்கரையை உட்கொள்கிறார். ஒரு இந்தியர் சாப்பிடும் சீனியின் அளவை உலக சராசரியுடன் ஒப்பிட்டால், அது நான்கு கிலோ குறைவுதான்.

ஒரு அமெரிக்கர் சராசரியாக தினசரி 20 தேக்கரண்டி வெள்ளைச் சர்க்கரையை உட்கொள்கிறார். ஆனாலும் வெள்ளைச் சர்க்கரை வெறுமனே ஆற்றலைத் தருகிறதே தவிர, அதனால் உடலுக்கு எந்தச் சத்தோ பலனோ கிடைப்பதில்லை. அத்துடன் மூளையில் சார்புத்தன்மையை ஏற்படுத்தும் வெள்ளைச் சர்க்கரை, நம்மை அடிமைப்படுத்தவும் செய்கிறது.

விருந்துகளிலிருந்து கொண்டாட்டங்கள்வரை ஆதிக்கம் செலுத்தும் வெள்ளைச் சர்க்கரை, நம் அன்றாட வாழ்வின் அத்தியாவசியம்போலத் தோன்றினாலும், அது அவசியமில்லை என்பதே உண்மை. வெள்ளைச் சர்க்கரையிலிருந்து படிப்படியாக விடுபடுவதன் மூலம் உள ஆரோக்கியமும் உடல் ஆரோக்கியமும் மேம்படும். அது சாத்தியமும்கூட.

சேர்க்கப்பட்ட சர்க்கரை

வெள்ளைச் சர்க்கரை மட்டுமல்ல, ரொட்டி, மது, செயற்கை இனிப்பான்கள், சாக்லேட்டுகள், கேக்குகள், குளிர்பானங்கள் எல்லாவற்றையும் தவிர்க்கத் தொடங்குவதன் மூலமே வெள்ளைச் சர்க்கரை மீதான வேட்கையிலிருந்து நாம் தப்பிக்க முடியும். அதற்கு முதலில் இயற்கையான சர்க்கரைக்கும் - சேர்க்கப்படும் சர்க்கரைக்கும் உள்ள வித்தியாசத்தை முதலில் அறிந்துகொள்ள வேண்டும்.

இயற்கையான சர்க்கரை பழங்களிலும் காய்கறிகளிலும் கிடைக்கிறது. இவற்றில் புரதம், நார்ச்சத்துடன் சர்க்கரையும் சேர்ந்திருப்பதால் மெதுவாகச் செரிமானம் நடக்கிறது. இது உடலின் ஆற்றலுக்கான ஆரோக்கியமான ஆதாரமாக உள்ளது.

ஆனால், கடைகளில் ஆயத்த நிலையில் கிடைக்கும் பதப்படுத்தப்பட்ட உணவிலும் பானங்களிலும் மேற்கண்ட சத்துகள் எதுவுமே இல்லை. அவை உடலுக்கு வெறும் கலோரிகளையே தருகின்றன. இதைச் சாப்பிட்டவுடன் உடலின் ஆற்றல் சட்டென்று உயரும் அதேநேரம், உடனேயே தாழ்ந்தும் விடும். இவ்வகைச் சர்க்கரை வேகமாகச் செரிக்கப்படுவதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயர்ந்து, அதே வேகத்தில் தாழ்ந்தும் விடுகிறது. ரத்தத்தில் திடீரென்று சர்க்கரை குறைவதால் பசி எடுக்கும். அத்துடன் உடலுக்குப் போதிய உழைப்பில்லாத, உட்கார்ந்திருக்கும் வேலைகளில் ஈடுபடுபவர்கள் இத்தகைய உணவைச் சாப்பிடும்போது உடல் பருமன், நீரிழிவு, இதய நோய்கள், ரத்த அழுத்தம் ஆகியவையும் ஏற்படும்.

சர்க்கரையும் போதைதான்

ஆம். மூளையின் சந்தோஷ மையங்களைக் கிளர்த்தும் ஓபியோயிட், டோபமைன் ஆகியவை நாம் உட்கொள்ளும் சர்க்கரையால் வெளியிடப்படுகின்றன. போதை மருந்துகளும் இதைத்தான் உடலில் வெளியிடுகின்றன. இதில் ஒரு நல்ல செய்தியும் இருக்கிறது. மற்ற போதை மருந்துகளைப் போல, சர்க்கரையிலிருந்து நாம் விடுபட முயற்சித்தால் பக்க விளைவுகள் ஏதும் இருக்காது.

தீவிரமான உடல்நலக் கோளாறுகளுக்கு வெள்ளைச் சர்க்கரை காரணமாக இருக்கிறதென்பது சமீபத்திய ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. உடல் செல்கள் சீக்கிரம் சீர்குலைவது, மரபணு சேதமடைதல், இளமையில் வயோதிகம் ஆகியவற்றுக்கும் வெள்ளைச் சர்க்கரை நாட்டமே காரணமாக உள்ளது. மிகையாக வெள்ளைச் சர்க்கரையை எடுத்துக்கொள்வதால் பெருங்குடல் புற்றுநோய் உள்ளிட்ட புற்றுநோய்களும் ஏற்படுகின்றன.

பத்து நாட்கள் போதும்

வெள்ளைச் சர்க்கரையை பத்து நாட்களுக்குத் தவிர்த்துப் பாருங்கள். உடல் பருமனுள்ள குழந்தைகளின் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தில் பெரும் மாறுதலைக் காணமுடியும். கட்டுப்பாடாக சர்க்கரையை உட்கொள்வது இதய நலம், கொழுப்பு, கல்லீரல் செயல்பாடுகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

பழங்கள், காய்கறிகளில் ஈடுபாடில்லாமல் இருப்பவர்கள் வெள்ளைச் சர்க்கரை உட்கொள்வதைக் குறைக்கும்போது இயல்பாக இயற்கையான உணவில் ஈடுபாடு காட்டத் தொடங்குவார்கள். நாக்கில் உள்ள சுவை மொட்டுகள் புத்தூக்கம் பெறுவதுதான் அதற்குக் காரணம். கேரட்டையும் பீட்ரூட்டையும் பாராமல் இருந்தவர்களுக்கு அவை ருசிக்கத் தொடங்கும். ஆப்பிளும் ஆரஞ்சும் சாக்லேட்டுகளைப் போல மாறும். அத்துடன் கேக்குகள், சாக்லேட்டுகள் மேலிருக்கும் ஈடுபாடும் குறையும்.

எப்படித் தவிர்க்கலாம்?

இனிப்பு உணவு வகைகளைத் தவிர்ப்பதோடு சர்க்கரைச் சத்து அதிகமுள்ள கார்போஹைட்ரேட் உணவையும் குறைத்துக்கொள்ள வேண்டும். சோளம், உருளைக்கிழங்கு போன்றவற்றைச் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.

பழங்களில் வாழைப்பழம், அன்னாசி, தர்பூசணியைத் தவிர்க்க வேண்டும். கிஸ்மிஸ் போன்ற உலர்கனிகளையும் தவிர்க்கலாம். செறிவூட்டப்பட்ட பழக்கூழைப் பருக வேண்டாம். உணவு விடுதிகளிலும் வீடுகளிலும் பயன்படுத்தப்படும் செயற்கை இனிப்பான்களை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

முதலில் சிரமம்தான்

முதல் பத்து நாட்கள் கட்டுப்பாடு மட்டுமே நீண்ட காலப் பலனை அளிக்காது. மீண்டும் பழைய உணவைத் தேடிச் செல்லாமல் இருப்பது அவசியம். அதற்கு நீண்டகால உணவுத் திட்டம் அவசியம்.

இதற்கு பழங்கள், காய்கறிகள்தான் ஒரே தீர்வு. நாள் செல்லச் செல்ல முகமும் சருமமும் ஒளிர ஆரம்பிக்கும். பத்து நாட்கள் கட்டுப்பாட்டுக்குப் பிறகு அதை ஒரு மாதமாக மாற்றுங்கள்… அதற்குப் பிறகு கட்டுப்பாட்டைத் துறக்கவே மாட்டீர்கள்! ஒரு ஆரோக்கியமான வாழ்க்கைக்கான சாலையின் தொடக்கத்தில் நிற்கிறீர்கள். தொடர்ந்து நடக்கத் தொடங்குங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x