Published : 25 Nov 2017 11:45 AM
Last Updated : 25 Nov 2017 11:45 AM

டிஜிட்டல் போதை 10: பாதிக்கப்படும் பாதுகாப்புக் கவசம்

ளர்ச்சியடைந்த மூளை என்பது, மூளையில் உருவாகியிருக்கும் நரம்பியல் செல்களின் தொடர்புகளைக் குறிக்கும். பிறந்த குழந்தைக்கு இது குறைவாகவே இருக்கும். பொதுவாக மூளையை நுண்ணோக்கியில் பார்த்தால் இந்தத் தொடர்புகள் சாம்பல் நிறத்தில் தெரியும். மூளையின் இந்தச் சாம்பல் பகுதிகளை ஒப்பிட்டுத்தான் ஒருவருடைய அறிவுத்திறனைக் கணிப்பார்கள்.

ஆனால் 20-ம் நூற்றாண்டின் ஆரம்பக் காலத்தில் ஆய்வாளர்கள், மூளையின் ‘வெள்ளைப் பகுதியை’ பற்றிப் பேச ஆரம்பித்தார்கள். அந்த வெள்ளைப் பொருள் கொழுப்பு, புரதத்தால் ஆனது. அதை ‘மையலின்’ என்று அழைப்பார்கள்.

மின்கசிவைத் தடுக்கும் காப்பு

மூளையின் செயல்பாடு என்பது நரம்பியல் செல்களுக்குள் நடக்கும் தகவல் தொடர்பு. அதாவது, நரம்பியல் செல்களுக்குள் உண்டாகும் தொடர்பும், அத்தொடர்பில் நரம்பியல் கடத்திகள் செல்வதால் உருவாகும் குறிப்பிட்ட வழித்தடங்களும்தான் நம் செயல்பாடுகளுக்கான காரணம்.

மூளையின் இந்த செல்களுக்கு இடையிலான தொடர்பு மின்கடத்திகளால் நிகழ்கிறது. அந்தத் தொடர்புகளைச் சுற்றி மின்சாரம் கசியாமல் பாதுகாக்கும் பாதுகாப்புக் கவசம்தான் இந்த மையலின். வீடுகளில் மின்கசிவைத் தடுக்க, மின்சாரத்தைக் கடத்தும் வயர்களைச் சுற்றி பிளாஸ்டிக்கால் மூடியிருப்பார்கள். அதேதான் இந்த மையலினின் வேலையும். இது நரம்பியல் தொடர்புகளிலிருந்து மின்சாரம் வெளியாகாமல் தடுக்கிறது.

தடுக்கப்படும் மையலின்

மிக அதிகமாக வீடியோ கேம் விளையாடுபவர்களின் மூளையை ஆராய்ந்துப் பார்த்ததில், இந்த மையலின் செயல்பாடுகளில் பல மாற்றங்கள் தெரிந்தன. மூளை நெகிழ்வுத்தன்மை கொண்டது. நாம் கற்பதற்கேற்பப் பல புதிய தொடர்புகள் உருவாகும் என்பதை முன்பே பார்த்தோம். அப்படிப் புதிய தொடர்புகள் உருவாகும்போது அதைச் சுற்றி பாதுகாப்புக் கவசம்போல் இந்த மையலின் உருவாகி மூடிவிடும். ஆனால், மிக அதிகமாக மூளை தூண்டப்படும்போது, இந்த மையலின் உருவாவது பாதிக்கப்படும்.

ஒரு செயலை நாம் மீண்டும் மீண்டும் செய்யும்போது, அதற்கான நரம்பியல் செல்களின் தொடர்புகள் உருவாகின்றன. ஆனால் அப்படி உருவாகிக்கொண்டிருக்கும்போது இடையூறுகள் ஏற்பட்டால், அது சம்பந்தப்பட்ட தொடர்பை பாதிக்கும். தொடர்புகள் உருவாகும்போது அதைச் சுற்றி மையலின் மூட ஆரம்பிக்கும். இப்படித் தொடர்ச்சியான இடையூறுகள் மையலின் உருவாவதை வெகுவாகக் குறைக்கும்.

வீடியோ கேம் போதை

ஒரு தொடர்பைச் சுற்றி மையலின் இல்லை என்றால் என்னவாகும்? இதைத்தான் 1980-ல் சில விலங்குகளின்மீது ஆய்வுசெய்து பார்த்தார்கள். விலங்குகளின் மூளையிலிருந்து மையலினை நீக்கியபோது, நியூரான்களுக்கு இடையிலான மின் ஓட்டம் குறைந்தது. அதன் காரணமாகத் தொடர்பு மெதுவானது. மெதுவான மின் ஓட்டத்தால் ஏற்பட்ட மின் கசிவுகள், அருகில் இருக்கும் தொடர்பைப் பாதித்தன. பிறகு மையலின் குறைவே, நரம்பியல் அமைப்பின் பல்வேறு கோளாறுகளுக்குக் காராணமாக இருக்கிறது என்பது உறுதிசெய்யப்பட்டது.

மையலின் உருவாகக் காரணமாக இருப்பது ‘ஒலிகோடெண்டரசைட்ஸ்’. இதுதான், மையலின் உருவாக உதவியாக இருக்கும் கொழுப்பை உற்பத்தி செய்கிறது. மூளைக்கு மிதமிஞ்சி வரும் தூண்டுதலால் இவை பாதிக்கப்படுகின்றன. இது பாதிக்கப்பட்டால் புதிய மையலின் உருவாவதில் பல சிக்கல்கள் உண்டாகும்.

மையலின் அமைப்புப் பற்றி விரிவாக ஆய்வுசெய்து எழுதிவந்தவர் மருத்துவர் ஜார்ஜ் பட்ஸ்சோகிஸ். அண்மைக் காலமாக வீடியோ கேம்கள் பற்றிய ஆராய்ச்சிகள் வந்தபோது, அதீதமாக வீடியோ கேம் விளையாடும் சிறுவர்களை ஆராய்ந்த ஜார்ஜ், அவர்களின் மூளையை நரம்பியல் வரைபடங்களாக எடுத்தார். அதை போதைப் பொருளுக்கு அடிமையானவர்களின் படங்களுடன் ஒப்பிட்டபோது, அதிர்ச்சி காத்திருந்தது. போதைப் பொருள் மையலினை எப்படி பாதிக்கிறதோ அதேபோலத்தான் அதீத வீடியோ கேம் விளையாடுவதும் மையலினை பாதிக்கிறது என்று தெரியவந்தது. அவர்களுக்குத் தங்கள் கவனத்தை நிர்வகிப்பது, முடிவுகள் எடுப்பது, உணர்ச்சிகளை ஒருங்கிணைப்பதில் சிக்கல்கள் இருப்பது ஆகியவை பற்றியும் தெரியவந்தது.

(அடுத்த வாரம்: மருத்துவரின் சோகக் கதை!)
கட்டுரையாளர், டிஜிட்டல் சமூக ஆய்வாளர்
தொடர்புக்கு: write2vinod11@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x