Published : 15 Jul 2014 05:04 PM
Last Updated : 15 Jul 2014 05:04 PM
சிசேரியன் எனப்படும் அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது. எலிக்குஞ்சுகளை வைத்து சோதனை செய்ததில் இது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
அறுவை சிகிச்சை மூலம் பிறந்த எலிக்குஞ்சுககளில் குறைந்த எண்ணிக்கையில் நோய் எதிர்ப்பு செல்கள் காணப்பட்டன. அதே சுகப் பிரசவமாக, இயற்கையாக பிறந்த எலிக்குட்டிகளிடம் இந்த செல்கள் அதிக எண்ணிக்கையில் காணப்பட்டன. டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கமில்லா ஹேன்சன் இதைத் தெரிவிக்கிறார்.
அறுவை சிகிச்சை மூலம் பிறந்த குட்டிகளைவிட இயற்கையான பிரசவத்தில் பிறந்த குட்டிகளுக்குத் தாயிடமிருந்து அதிக பாக்டீரியாக்கள் கிடைத்தன. தங்களிடமே உள்ள ஆபத்தில்லாத மூலக்கூறுகளையும் மற்ற இடங்களில் இருந்து வந்த ஆபத்துள்ள மூலக்கூறுகளையும் உணரும் ஆற்றல் குட்டிகளுக்கு உள்ளன.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு ‘டைப்-1' ரக நீரிழிவு நோயும், அலர்ஜி எனப்படும் ஒவ்வாமையும் அதிகம் காணப்படுவதை மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இம்யுனாலஜி (நோய் எதிர்ப்பியல்) என்ற மருத்துவப் பத்திரிகையில் இந்த ஆய்வு முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரசவ வலி என்பது கர்ப்பிணிக்குத் துயரத்தைத் தந்தாலும் அவருடைய குழந்தை நோயைத் தாங்கும் வலிமையைப் பெற இது அவசியம் என்று பாரம்பரிய வைத்தியர்கள் கூறுவார்கள். அதை இந்த ஆய்வும் வழிமொழிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT