Published : 04 Nov 2017 11:31 AM
Last Updated : 04 Nov 2017 11:31 AM

மருத்துவ சர்ச்சை: கசக்காத நிலவேம்பு உண்மைகள்!

 

டெ

ங்குவும் நிலவேம்புக் குடிநீரும்தான், இன்று தமிழகத்தில் அதிகம் பேசப்படும் விஷயமாக இருக்கின்றன. எந்தப் பகுதியில் நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டாலும் அங்கு சென்று வாங்கிக் குடிப்பதை மக்கள் கடமையாகச் செய்துவருகிறார்கள்.

நிலைமை ஒரு பக்கம் இப்படி இருக்க, இன்னொரு பக்கம் நிலவேம்புக் குடிநீர் டெங்குக் காய்ச்சலுக்குப் பயனுடையதா என்பது பற்றி ஆய்வுக் கட்டுரைகள் ஏதும் இல்லை, முறையான மருத்துவ ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை, நிலவேம்புக் குடிநீரை குடிப்பதும் குடிக்காததும் உங்கள் விருப்பம் என அலோபதி மருத்துவர்கள் சிலர் கூறிவருகிறார்கள்.

இன்னும் ஒரு படி மேலே போய், ‘நிலவேம்புக் குடிநீரைக் குடித்தால் டெங்கு குணமாகிறதோ இல்லையோ, குழந்தை பாக்கியம் இல்லாமல் போகும்’, என வலைத்தளங்களில் ‘மீம்ஸ்’ வலம் வந்துகொண்டிருக்கிறது. இந்தச் சந்தேகங்கள், குற்றச்சாட்டுகள் எல்லாம் எவ்வளவு தூரம் சரி..?

எட்டு வகை மூலிகைகள்

முதலாவதாக, நிலவேம்புக் குடிநீர் என்பது நிலவேம்பு என்கிற ஒரு மூலிகை மட்டுமே கொண்ட மருந்து அல்ல. நிலவேம்புக் குடிநீரில் வெட்டிவேர், விலாமிச்ச வேர், சந்தனத்தூள், பேய்ப்புடல், கோரைக்கிழங்கு, பற்படாகம், சுக்கு, மிளகு ஆகியவையோடு மேலும் எட்டு மூலிகைகள் உள்ளன. இது சித்த மருத்துவத்தில் ‘கூட்டு மூலிகைப் பிரயோகம்’ (Poly herbal formulation) எனப்படுகிறது. இந்த மூலிகைகள் அனைத்தும் சேர்ந்து, ஒருங்கிணைந்த மருத்துவக் குணத்தை (Synergetic effect) அளிக்கின்றன. நிலவேம்புக் குடிநீரில் உள்ள ஒவ்வொரு மூலிகையும் தனித்தன்மை வாய்ந்தவை. இவை டெங்கு வைரஸின் வீரியத்தைக் குறைத்து, ஜுரத்தை அகற்றி, நோய்க்கு எதிரான ஆற்றலைப் பெருக்கி, நீர்ச்சத்தை அதிகரித்து, தேவையான வைட்டமின், தனிமங்களை உடலுக்குத் தந்து உரம் ஊட்டுபவை.

மேற்சொன்ன ஒன்பது மூலிகைகள் குறித்தும் முறையான அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், நிலவேம்புக் குடிநீரின் டெங்கு வைரஸுக்கு எதிரான செயல்திறன் மற்றும் ரத்தத் தட்டு அணுக்கள் அதிகரிக்கும் பண்பைக் குறித்து சென்னையில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டும், தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனமும் முறையே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் ஆய்வு விலங்குகளில் ஆய்வு நடத்தி, நிலவேம்புக் குடிநீரின் வீரியத்தை உறுதி செய்துள்ளன.

நிலவேம்பின் மருத்துவக் குணம்

நிலவேம்புக் குடிநீரில், மிக முக்கியமான மூலப்பொருளான நிலவேம்பைப் பற்றி அறிவியல் என்ன சொல்கிறது?

அறிவியல் உலகத்தின் சிறந்த சயின்ஸ் டேட்டா பேஸ் ஆகக் கருதப்படும் ‘பப்மேட்’ (PubMed), அமெரிக்க அரசால் அங்கீகரிக்கப்பட்டது, ஸ்கோபஸ் (Scopus), சயின்ஸ் டைரக்ட் (Science Direct) போன்ற ஆய்வு இணையத்தளங்களில், நிலவேம்பு பற்றி மட்டும் 300-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் பதிவிடப்பட்டுள்ளன. இதில் 243-க்கும் மேற்பட்டவை ‘பீர் ரிவ்யூவ்டு ஜர்னல்’ எனப்படும் தரம் வாய்ந்த அறிவியல் இதழ்களில் இடம்பெற்றுள்ளன.

இவை அனைத்திலும் நிலவேம்புவின் வீக்கமுறுக்கி (anti-inflammatory), ஜுரம் அகற்றி செயல்கள் (anti-pyretic) மற்றும் டெங்கு வைரஸுக்கு எதிரான செயல்திறன் (Anti-viral effect), ஈரல் தேற்றி (Hepatoprotective), ஆன்டி-ஆக்ஸிடண்ட் தன்மைகள் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் சொல்லப்பட்டுள்ளது. வீக்கத்துக்குக் காரணமான TNF-Alpha, NF-KB ஜீன்களின் செயல் ஆற்றலைத் தடுத்து, உடல் உறுப்புகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, அவற்றின் செயல் திறனை நிலவேம்பு அதிகரிக்கிறது.

மேலும், டெங்கு வைரஸின் பரவலைத் தடுத்து, அந்த வைரஸால் உண்டாகும் ரத்த அணுக்களின் அழிவையும், குறைபாட்டையும் தடுத்து, ரத்த அணுக்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்கிறது. மேலும், ரத்த வெள்ளணுக்களின் (lymphocytes) எண்ணிக்கை மற்றும் ‘இண்டர்லூகின்-2’வையும் (Interleukin-2) அதிகரித்து நோய்க்கு எதிரான எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது. பொதுவான நோய் எதிர்ப்பு நிகழ்வுகளான ‘மேக்ரோபேஜ் அண்ட் பேகோசைட்டிக்’கின் (Macrophage and phagocytic) செயல்திறனை அதிகரிக்கிறது.

இல்லறத்துக்கு இனிய நண்பன்

பொதுவாக நிலவேம்பை நீர் (Aqueous) அல்லது மெதனாலில் (Methanolic) கரைத்துப் பெற்ற நிலவேம்பின் மூலக்கூறுகளை (extracts), ஆண் ஆய்வு எலிகளுக்குக் கொடுத்துப் பார்த்ததில், நிலவேம்பின் மூலக்கூறுகள் அவற்றின் இனப்பெருக்க உறுப்புகளையோ உயிரணுக்களின் உற்பத்தி செய்யும் திறனையோ சிறிதளவும் பாதிக்கவில்லை என்பது தெரியவந்தது. மேலும், நிலவேம்பிலிருந்து எடுக்கப்பட்ட ‘ஆண்ட்ரோகிராஃபோலிடே’ (Andrographolide) எனும் மூலக்கூறுகளை ஆண் எலிகளுக்குக் கொடுக்கும்போது, எலிகள் ஆர்வத்துடன் உடல் உறவில் ஈடுபடுவது தெரியவந்தது.

மேலும், எலிகளின் ஆண்மைத்தன்மைக்கு ஆணிவேரான ‘டெஸ்டோஸ்டீரோன்’ என்கிற ஹார்மோனின் அளவு அதிகரிப்பதும் கண்டறியப்பட்டது. இத்தகைய, நீரில் கரையக்கூடிய (Aqueous extract) மூலக்கூறுகள் அடங்கிய நிலவேம்புக் குடிநீரே டெங்குக் காய்ச்சலுக்கு மருந்தாகக் கொடுக்கப்படுகிறது. அப்படியானால், நிலவேம்புக் குடிநீர் இல்வாழ்க்கைக்கு இனிய நண்பன்!

உலர்ந்த நிலவேம்பு இலைப் பொடியை அதிக அளவில் ஆய்வு எலிகளுக்குக் கொடுக்கும்போது அவற்றுக்கு மலட்டுத்தன்மை உண்டாகிறது என்கிற ஒரு சில ஆய்வுகளை மட்டும் அடிப்படையாகக்கொண்டு, சிலர் நிலவேம்பே ஆபத்தானது என ஆர்ப்பரிக்கின்றனர். அதிகம் பயன்படுத்தினால் ஆண்ட்ராய்டு போன்கூட ஆபத்துதானே! எந்த நிலையிலும், நிலவேம்பு இலைப்பொடி நேரடியாக டெங்குக் காய்ச்சலுக்குப் பயன்படுத்தப்படுவதில்லை. நிலவேம்பின் நீரில் கரையக்கூடிய (Aqueous extract) மூலக்கூறுகள் மட்டுமே மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

அதேவேளையில், நிலவேம்புக் குடிநீரின் திறன் மூலக்கூறுகள் குறித்தும் (active principles), அவற்றின் செயல்திறன் (efficacy) பற்றியும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

கட்டுரையாளர், தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவன உதவிப் பேராசிரியர் மற்றும் சித்த மருத்துவர்

தொடர்புக்கு: senthilkumarbr@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x