Published : 04 Nov 2017 11:30 AM
Last Updated : 04 Nov 2017 11:30 AM
கி
ராமப்புறத்திலிருந்து வந்திருந்தார் ஒரு தாய். கைகளில் ஒரு வயதுக் குழந்தை. தாயின் கண்களில் கண்ணீர். அந்தக் குழந்தையின் கண்ணின் நடுப்பகுதியில் வெள்ளையாய்த் தெரிகிறது என்பதுதான் அந்தக் கண்ணீருக்குக் காரணம். குழந்தையின் கண்களைப் பரிசோதித்துப் பார்த்ததில், ‘ரெட்டினோபதி ஆஃப் பிரீமெச்சுரிட்டி’ என்கிற நோய், முற்றிய நிலையில் இருப்பது தெரியவந்தது. குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு இதுபோன்ற நோய் வருவது இயல்பு.
முன்பெல்லாம் இந்தியாவில் குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகள் காப்பாற்றப்பட முடியாமல் இறந்துபோய் விடும். ஆனால், தற்போது குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு அரசு, தனியார் மருத்துவமனைகளில் ‘பச்சிளம் குழந்தைகள் அவசர சிகிச்சைப் பிரிவில்’ (நியோநேட்டல் இண்டென்சிவ் கேர் யூனிட்) சேர்க்கப்பட்டு, சிறப்பாக சிகிச்சை அளிக்கப்படுவதால் பெரும்பாலான குழந்தைகள் காப்பாற்றப்படுகின்றன.
விழித்திரை வளர்ச்சிக் குறைபாடு
இந்தக் குறைமாதக் குழந்தைகளில் தாயின் கருவறையில் வளர வேண்டிய கண் விழித்திரையானது (ரெட்டினா), குறைமாதத்தில் பிறந்த காரணத்தால் வெளிப்புறச் சூழ்நிலையில் வளர வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகும்போது ஏற்படும் நோய்தான், ரெட்டினோபதி ஆப் பிரீமெச்சுரிட்டி.
இது, கண் விழித்திரை ரத்தக் குழாய் வளர்ச்சியில் ஏற்படும் ஒரு குறைபாடு. வழக்கமாகக் குழந்தை, கருவில் இருக்கும்போது 36-வது வாரத்தில்தான் ‘நேசல் ஓரா’ என்று அழைக்கப்படும் விழித்திரையின் ஒரு பகுதிவரை ரத்தக் குழாய் வளர்ச்சி அடையும். அது விழித்திரை முழுவதும் வளர்ச்சி அடைய 40 வாரங்கள் எடுத்துக்கொள்ளும்.
குறை மாதத்தில் குழந்தை பிறக்கும்போது வளர்ச்சி அடையாத விழித்திரையின் ரத்தக் குழாயில் ஏற்படும் ஆக்சிஜன் பற்றாக்குறையால், சரியாக வளர்ச்சி அடையாத ரத்தக் குழாய் உருவாகும். இதைத் தொடர்ந்து விழித்திரை உரிதல் ஏற்பட்டு, திரும்பப் பெற முடியாத பார்வையிழப்பை ஏற்படுத்தும். இந்த நிகழ்வே ‘ரெட்டினோபதி ஆப் பிரீமெச்சுரிட்டி’.
பரிசோதனைக் காலம்
குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளில், 30 முதல் 50 சதவீதக் குழந்தைகளுக்கு ரெட்டினோபதி ஆப் பிரீமெச்சுரிட்டி நோய் வருவதற்கான சாத்தியம் உண்டு.
எனவே, கருவிலிருந்து 34 வாரத்துக்குக் குறைவான வாரத்தில் பிறந்த குழந்தைகளை, பிறந்து 4 வாரத்துக்குள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதேபோல, பிறந்தபோது எடை 1,750 கிராமுக்குக் குறைவாக உள்ள குழந்தைகளைப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
மேலும், கருவிலிருந்து 34 -36 வாரத்துக்குள் பிறந்த குழந்தைகள் மற்றும் பிறந்தபோது 1,750-2,000 கிராம் எடையுள்ள பச்சிளம் குழந்தைகள், அதிகப்படியான நாட்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டிருந்தால் அவற்றையும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
சிகிச்சை முறைகள்
ரெட்டினொபதி ஆஃப் பிரீமெச்சுரிட்டி ஆரம்ப நிலையில் உள்ள குழந்தைகளைத் தொடர் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். தேவைப்பட்டால் கண்ணுக்குள் ஆன்டி வெட்ஜெப் ஊசி மற்றும் லேசர் சிகிச்சை அளித்து அந்த நோயின் தன்மையைக் கட்டுப்படுத்திப் பார்வை இழப்பு ஏற்படாமல் தடுக்கலாம்.
தவிர, இந்த நோய் முற்றிய நிலையில் உள்ள குழந்தைகளுக்குப் பார்வை நரம்புப் பிரிதல் ஏற்பட்டிருக்கும். அப்படிபட்ட குழந்தைகளுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்து அவர்களுடைய பார்வையிழப்பைத் தடுக்கலாம்.
சில குழந்தைகளுக்கு அதிவேகப் பின்புற ரெட்டினோபதி ஆஃப் பிரீமெச்சுரிட்டி நோய் (அக்ரெசிவ் போஸ்டீரியர் ரெட்டினோபதி ஆஃப் பிரீமெச்சுரிட்டி) ஏற்பட்டால், அது விரைவாக முற்றிய நிலையை அடைந்து பார்வை இழப்பை ஏற்படுத்தும். அதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும்.
இந்த நோயை முன்கூட்டியே கண்டுபிடித்தால், குறைமாதக் குழந்தைகளுக்கு ஏற்படும் பார்வை இழப்பைத் தடுக்க முடியும். ஏனென்றால், பார்வை என்பது ஒவ்வொரு குழந்தையின் பிறப்புரிமை!
கட்டுரையாளர், அரசு கண் மருத்துவர்
தொடர்புக்கு: kpranganathan83@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT