Published : 11 Nov 2017 11:07 AM
Last Updated : 11 Nov 2017 11:07 AM
எனக்கு வயது 68. தினமும் காலையில் எழுந்ததும் 10 முறை தும்மல் வருகிறது. பெரும்பாலும் அடுக்குத் தும்மல்களாக வருகின்றன. சில மிகவும் பெரிதாக உள்ளன. இதற்கு எளிய முறையில் தீர்வு கிடையாதா?
வீ.வீ. கிரி, மேட்டுபாளையம்.
சாதாரணமாக ஒருவருக்குத் தும்மல் வந்தால், சில தும்மல்களோடு நின்றுவிடும். அதேநேரத்தில், சிலருக்குச் சொல்லி வைத்த மாதிரி தினமும் நிமிடக் கணக்கில் தும்மல் வந்து தொல்லை கொடுப்பதும் உண்டு. இன்னும் சிலருக்குத் தும்மலோடு மூக்கும் ஒழுகும். இதற்கு ‘ஒவ்வாமைத் தும்மல் நோய்’ என்று பெயர். உங்களுக்கு வந்துள்ள தும்மல், இவ்வகையைச் சேர்ந்தது போலத் தெரிகிறது. இதற்கான காரணத்தைக் களைந்தால் மட்டுமே தும்மல் நிற்கும்.
என்ன காரணம்?
வீட்டுத் தூசுதான் தும்மலுக்கு முக்கியக் காரணம். குறிப்பாக ஒட்டடை, பருத்தி, பஞ்சு, சணல், சாக்கு, கயிறு, கம்பளி, காகிதம், சிமெண்ட், சுண்ணாம்பு, ஆஸ்பெஸ்டாஸ், உமி, மரம், மாவு, தானியம் போன்றவற்றின் தூசு மூக்கில் பட்டதும் தும்மல் தொடங்கிவிடும். இதுபோல் ஊதுவத்தி, சாம்பிராணி, கற்பூரம், கொசுவத்தி போன்றவற்றின் புகை, வாகனப் புகை, புகையிலைப் புகை, தொழிற்சாலைப் புகை முதலியவையும் மூக்கில் ஒவ்வாமையை ஏற்படுத்தி, தும்மலை வரவேற்கும்.
குளிர்ந்த காற்று அல்லது பனி, தும்மலைத் தூண்டும். புல், பூண்டு, மரம், செடிகளின் பூக்களிலிருந்து வரும் மகரந்தம், பார்த்தீனியச் செடியின் முள்ளிழைகள், பூஞ்சைக் காளான்கள் முதலியவையும் தும்மல் நோய்க்கு வழிவிடும்.
வீட்டில் வளர்க்கப்படும் நாய், பூனை, ஆடு, மாடு, கோழி, வாத்து, முயல், கிளி, புறா, குதிரை, பன்றி போன்றவற்றின் உடலிலிருந்து கிளம்பும் செதில்கள், எச்சங்கள் மற்றும் முடிகள் காரணமாகவும் தும்மல் வரும். சாலைகளில் வாகனப் புகை, தொழிற்சாலைப் புகை போன்றவற்றைச் சுவாசிக்க நேர்ந்தாலும் தும்மல் தொல்லை தரும்.
படுக்கை விரிப்புகள், பாய், தலையணை, மெத்தை ஆகியவற்றில் ‘மைட்ஸ்’ என்று அழைக்கப்படுகின்ற கண்ணுக்குத் தெரியாத வீட்டுத் தூசுப் பூச்சிகள் குடியிருக்கும். இதனாலும் தும்மல் வரும். உணவு ஒவ்வாமை இருந்தாலும் தும்மல் ஏற்பட வழி இருக்கிறது. மூக்கிலும் சைனஸ்களிலும் நோய்த்தொற்று காணப்பட்டாலும் இந்த நிலைமை உருவாகும்.
பாதிப்பு ஏன்?
உங்களுக்கு எந்தக் காரணத்தால் தும்மல் வருகிறது என்பதை ரத்தப் பரிசோதனை, சிடி ஸ்கேன், ‘ஒவ்வாமைத் தோல் பரிசோதனை’ போன்றவற்றின் மூலம் தெரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அறியப்பட்ட ஒவ்வாமைப் பொருட்களைப் பட்டியலிட்டு அவற்றில் தவிர்க்க முடிந்தவற்றைத் தவிர்த்துவிட்டு, மற்றவற்றுக்குத் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இதற்கு ‘இம்யூனோதெரபி’ என்று பெயர்.
இந்த நோய்க்கு உடனடி நிவாரணம் பெற விரும்பினால், ‘ஸ்டீராய்டு மருந்து’ கலந்த தெளிப்பானை மூக்கில் போட்டுக்கொண்டால், தும்மல் நின்றுவிடும். இதனுடன் ஒவ்வாமைத் தடுப்பு மாத்திரையையும் பயன்படுத்தலாம்.
உங்களுக்குக் காலை நேரத்தில்தான் தும்மல் வருகிறது என்பதால், நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு, பால் வாங்குவதற்கு என்று இளங்காலை நேரத்தில் வீட்டைவிட்டு வெளியில் வராமல் இருப்பது நல்லது. மழைக் காலத்திலும் பனிக்காலத்திலும் பூ பூக்கும் காலத்திலும் அறை ஜன்னல்களைக் காலை பத்து மணிவரை பூட்டி வையுங்கள். படுக்கையறை, மெத்தை, பாய், படுக்கை விரிப்புகளைச் சுத்தமாகப் பேணுங்கள். தலையணைக்கு பிளாஸ்டிக் உறைகளைப் போடுங்கள்.
இவை தவிர, பிராணாயாமம் போன்ற மூச்சுப் பயிற்சிகளும், சில யோகாசனப் பயிற்சிகளும் இந்த நோயைத் தடுக்க உதவுகின்றன.
‘நலம், நலமறிய ஆவல்' கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் பிரபல மருத்துவ எழுத்தாளர் டாக்டர் கு. கணேசன். தங்களுடைய முக்கியமான மருத்துவச் சந்தேகங்களை வாசகர்கள் இப்பகுதிக்கு அனுப்பலாம்.
மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in
முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம்,
124, வாலாஜா சாலை, சென்னை - 600 002.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT