Published : 22 Jul 2014 10:11 AM
Last Updated : 22 Jul 2014 10:11 AM
மருத்துவம், நமது அடிப்படை உரிமை. ஏனென்றால் மருத்துவம் என்பது எல்லா உயிர்களின் உள்ளுணர்வின் ஞாபக அடுக்குகளில் உறைந்துள்ள செயல்பாடுதான். நாய், பூனை போன்ற உயிரினங்களைக் கவனித்துப் பார்த்தால் தெரியும். உடல்நிலை சரியில்லையென்றால் அவை உணவெடுப்பதில்லை.
நாய் அருகம்புல்லைக் கடித்துத் தின்னும். சிறிது நேரத்திலேயே வயிற்றில் செரிக்காமல் தங்கிவிட்ட விஷப்பொருளைக் கக்கிவிடும். நாய்க்கு எப்படி அருகம்புல் மருந்து என்று தெரியும்? அதன் உள்ளுணர்வில் பதியப்பட்டுள்ள மருத்துவக் குறிப்பு ஞாபகத்தின் மேலடுக்குக்கு வந்து, அதற்கு வழிகாட்டுகிறது. ஆனால், மனிதன் சமூகவயமானபோது கொஞ்சம் கொஞ்சமாகத் தன் உள்ளுணர்வின் பதிவுகளை அழித்துவிட்டான்.
சிகிச்சையின் தொடக்கம்
வேலைப் பிரிவினைகள் உருவானபோது மருத்துவம், மந்திரம், சடங்குகளோடு இணைந்துவிட்டது. ஆரம்பத்தில் மருத்துவம் உன்னதமான சேவையாகக் கருதப்பட்டது. மருத்துவத்துக்கு ஈடாகப் பொருள் பெறுவது பாவம் என்று நம்பிய காலம் ஒன்றிருந்தது. மருத்துவர் என்று ஒரு சாதியே உருவானது. ஆனால், எல்லா நோய்களுக்கும் மருத்துவர்களைத் தேடிப் போனதில்லை.
சாதாரண நோய்களைப் பெரும்பாலும் கை வைத்தியத்திலேயே வீடுகளில் குணப்படுத்திவிடுவார்கள். காய்ச்சல், சளி, தலைவலி என்று அடிக்கடி வரக்கூடிய நோய்களுக்கு உணவுப் பத்தியம், பச்சிலைச் சாறு, கஷாயம், சூரணம் கொடுத்துக் குணப்படுத்திவிடுவார்கள். உணவே மருந்து, மருந்தே உணவு என்று இயற்கையோடு இயைந்து வாழ்ந்த காலங்கள் இருக்கத்தான் செய்தன. சித்தர்களின் தாக்கம் எப்படி நம்முடைய வாழ்விலும் உணவு முறைகளிலும் இருக்கிறது என்பது தனியாக ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்று.
எது நவீனம்?
ஆனால், இன்று பெரும்பாலானவர்களுக்கு ஆங்கில மருத்துவத்தைத் தவிர வேறு மருத்துவம் இருக்கிறதா என்றுகூடத் தெரியாது. ஆங்கில வைத்தியம் மட்டும்தான் நவீன மருத்துவம். மற்றதெல்லாம் நாட்டு வைத்தியம் எனப்படும் ‘கண்ட்ரி மெடிசின்’. நோயுற்ற மனிதனை நம்பாமல், சோதனைச் சாலை முடிவுகளின் அடிப்படையில் மட்டும் மருத்துவம் செய்யும் ஆங்கில மருத்துவம், நவீன மருத்துவம் என்று பெயர் பெற்றிருக்கிறது.
எந்த மருத்துவ முறையாக இருந்தாலும் நமது உயிரையும் உடலையும் தன்னிச்சையாகக் கையாளுவதற்கு உரிமை கிடையாது. நமக்குக் கொடுக்கப்படும் மருந்துகள், சிகிச்சைகள் பற்றி அறிந்துகொள்ள நமக்கு முழு உரிமை உண்டு. இன்னும் சொல்லப் போனால் நமக்குத் தரப்படும் மருந்துகள் அதன் விளைவுகள், பக்கவிளைவுகள், எல்லாவற்றைப் பற்றியும் சொல்வதற்குக் கடமைப்பட்டவர்கள் மருத்துவர்கள். எந்த மருத்துவரும் கடவுள் அல்ல. எல்லாத் துறைகளைப் போலவும் மருத்துவத் துறையை அவர் படித்திருக்கிறார், அவ்வளவுதான். அதேபோல எந்த மருத்துவமும் இயற்கையின் விதிகளுக்கு மாறாக நமது உடலில் செயல்பட முடியாது.
வாழ்க்கைக் கண்ணோட்டம்
தத்துவம் என்றால் என்ன? மிக எளிமையாகச் சொல்வதென்றால், வாழ்க்கையைப் பற்றிய விளக்கம், கண்ணோட்டம். உதாரணத்துக்கு, இந்த வாழ்க்கையில் நாம் பட்டுக் கொண்டிருக்கும் கஷ்டநஷ்டங்களுக்குக் காரணம் நம்முடைய தலைவிதி என்று பெரும்பாலோர் நினைக்கிறார்கள். அது ஒரு தத்துவ வெளிப்பாடு.
இல்லை இந்தக் கஷ்டநஷ்டங்களுக்குக் காரண காரியங்கள் இருக்கின்றன என்று சிறுபான்மையோர் நினைக்கிறார்கள், அதுவும் ஒரு தத்துவ வெளிப்பாடுதான். இப்படி வாழ்வின் ஒவ்வொரு செயலுக்குப் பின்னும் ஒரு தத்துவ நோக்கு பின்னிப் பிணைந்துள்ளது. நாளுக்கு நாள் நம்முடைய உணவுப் பழக்கம், உடை, இருப்பிடம் என்று எல்லாமே மாறிக் கொண்டேயிருப்பதற்குப் பின்னால் ஒரு தத்துவம் இருக்கிறது. அந்தத் தத்துவமே அரசு நிர்வாகத்தைக் கட்டமைக்கிறது, செயல்படுத்துகிறது. தத்துவத்தின் பார்வையைப் பொறுத்தே அந்தத் தத்துவம் யாருக்கானது, அதன் நோக்கம் என்ன என்று தெரிந்துகொள்ள முடியும். முதலாளித்துவத் தத்துவம் முதலாளிகளுக்குச் சார்பான அரசியல், சட்டம், நீதி, கல்வி ஆகியவற்றைத்தான் செயல்படுத்தும். போலியான ஜனநாயக நடைமுறைகள் மூலம் மக்களை ஏமாற்றும். எனவே, சாமானியர்கள் இந்த முதலாளித்துவத்தின் அசுர நிதி மூலதனப் பசிக்கு இரையாவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், எல்லாத் தத்துவங்களும் தங்கள் கருவுக்குள்ளேயே, அதற்கு மாற்றான தத்துவத்தின் விதைகளைக் கொண்டிருக்கும்.
மருத்துவத் தத்துவம்
எல்லாவற்றிலும் இருப்பதைப் போல மருத்துவத்துக்கும் ஒரு தத்துவப் பார்வை உண்டு. அதுதான் அந்த மருத்துவ முறையைத் தீர்மானிக்கிறது.
சித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்ற மருத்துவ முறைகள் நிலப்பிரபுத்துவத் தத்துவப் பார்வை கொண்டவை என்றால், ஆங்கில மருத்துவ முறை முதலாளித்துவத் தத்துவப் பார்வை கொண்டது. நிலப்பிரபுத்துவக் காலகட்டத்தில் மருத்துவம் புனிதமானதாகக் கருதப்பட்டது. அது மந்திரத்தன்மை கொண்டதாகவும், ரகசியமாகச் செய்ய வேண்டியதாகவும் கருதப்பட்டது. அந்த மருத்துவ ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது. அப்படிப் பகிர்ந்து கொண்டால், அது பலிக்காது என்றும் நம்பப்பட்டது. நிலப்பிரபுத்துவத்தின் உற்பத்தி உறவுகளைப் போலவே, மருத்துவமும் மதிப்பு மிக்கதாக இருந்தது. மனிதர்களின் தனித்துவத்துக்கு முக்கியத்துவம் அளித்தது.
ஆங்கில மருத்துவ முறை முதலாளித்துவத் தத்துவப் பார்வை கொண்டது. அதற்குச் சந்தைதான் முக்கியம். எல்லாவற்றையும் விற்கவோ, வாங்கவோ முதலாளித்துவம் முயலும். பேராசை கொண்ட அதன் லாப வெறிக்கு எதுவும் பொருட்டல்ல. அதன் உற்பத்தி உறவுகள் சந்தையோடு தொடர்புடையவை என்பதால், அது எதையும் மதிக்காது. எந்த விழுமியங்களையும் ஏற்காது. அப்படியே தன்னுடைய சந்தைத் தேவைகளுக்கேற்ப மதிப்பீடுகளை மாற்றிக் கொண்டேயிருக்கும். அதற்கு எல்லாமே, எல்லாருமே பண்டங்கள்தான். எப்படி மனிதர்களுக்காகப் பொருட்களையும் பொருட்களுக்காக மனிதர்களையும் உருவாக்குகிறதோ, அதேபோல நோய்களுக்காக மருந்துகளையும் மருந்துகளுக்காக நோய்களையும் அது உற்பத்தி செய்யும்.
மாற்று மருத்துவம்
உதாரணத்துக்கு, இப்போது பிரசவம் என்றாலே அது சிசேரியன்தான் என்றாகிவிட்டது. இது திட்டமிட்டுப் பணம் பறிப்பதற்கான செயலாக மாறிவிட்டது. நாற்பது வயதுக்கு மேல் உள்ள பெண்களில் பாதிப் பேருக்குக் கர்ப்பப்பையை எடுத்துத் தூரப் போட்டாகிவிட்டது. சம்பந்தமில்லாமல் கூட்டம் கூட்டமாகத் தடுப்பூசிகளைப் போடச் செய்வது... இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். மனிதன் ஒரு முழுமையான இயங்கியல் உயிரினம் என்பதை மறுத்து, அவனை ஒரு எந்திரமாகப் பாவித்து எல்லாவற்றையும் தனித்தனியே பிரித்து வேலை பார்க்கிறது ஆங்கில மருத்துவம். எதிர்காலத்தில் ஒரு சமூகத்தையே ஊனமுள்ளதாக்குகிற வேலையைச் செய்து கொண்டிருக்கிறது. சிலர் மட்டும் செல்வத்தில் கொழிக்க, பெரும்பான்மை மக்கள் தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் இழக்கின்றனர். இது அதன் தத்துவப் பார்வையின் அடிப்படையில் உருவான நடைமுறை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆனால், நமக்குத் தேவை மானுடமயமான தத்துவப் பார்வை கொண்ட மருத்துவம். அது, அடிப்படையில் சமூகம் சார்ந்ததாக இருக்க வேண்டும். தெளிவான தத்துவ நோக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும். எந்த ரகசியங்களோ, மர்மங்களோ இல்லாததாக, இயற்கையின் விதிகளுக்கு ஏற்பச் செயல்படுகிற மருத்துவமாக இருக்க வேண்டும். பக்கவிளைவுகள் இல்லாத எளிமையான, இனிமையான, முழுமையான நலனை மீட்டுத் தர வேண்டும். சுருக்கமாக, அது மக்கள் மருத்துவமாக இருக்க வேண்டும்.
உதயசங்கர்- தொடர்புக்கு: udhayasankar.k62@gmail.com, கட்டுரையாளர், ஒரு எழுத்தாளர்
(இந்தக் கட்டுரையில் தெரிவிக்கப் பட்டுள்ளவை கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இது தொடர்பவான மாற்றுக் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT