Last Updated : 08 Jul, 2014 07:15 PM

 

Published : 08 Jul 2014 07:15 PM
Last Updated : 08 Jul 2014 07:15 PM

நினைவாற்றலை அதிகரிக்கும் உணவுகள்

உடலில் உள்ள எந்த உறுப்பையும்விட அதிக அளவு ஆக்ஸிஜனை எடுத்துக்கொள்வது மூளைதான்.

தேவையான சத்துணவு, தேவையான அளவு கிடைக்காதபோது மூளைக்குக் கிடைக்கும் ஆக்ஸிஜன் அளவு குறைகிறது. அதனால் மூளையின் செல்கள் அழிந்துவிடுதல், ‘அல்ஸீமர்ஸ்’ என்ற ஞாபகமறதி நோய், ஞாபகச் சக்தியை - ஒருமுகக் கவனத்துடன் செயல்படும் ஆற்றலை இழப்பது, பலவீனம், குழப்பம், நோய் தாக்குதல் முதலியவை ஏற்படுகின்றன.

மூளைக்கு எப்போதும் ஞாபகசக்தி இருக்க வேண்டும். அதற்குக் கொழுப்பு, வெண்ணெய், நெய் முதலியவற்றிலிருந்து கிடைக்கும் கொழுப்பு தீங்கானது. மூளைக்கு உதவும் சரியான உணவைத் தேர்ந்தெடுக்க ஓர் எளிய வழி உண்டு. ஒளிரும் நிறத்தில் இருக்கும் உணவு வகைகள் மூளையின் பசியைப் போக்கும் முக்கிய உணவு வகைகளாகும். ஏனென்றால், இந்த உணவு வகைகளில் போதுமான அளவு வைட்டமின்கள், தாது உப்புகள் போன்றவை உள்ளன.

ஞாபகசக்திக்கு

ஞாபகசக்தி குறைவாக இருப்பவர்கள் ஆரஞ்சு, கொய்யா, திராட்சை, ஆப்பிள், வாழைப்பழம், செர்ரி பழம், தக்காளி, முலாம் பழம், பேரீச்சம்பழம், காரட், அன்னாசி, காலி பிளவர், முட்டை கோஸ், பசலைக் கீரை, கொத்துமல்லி, வல்லாரை, முருங்கைக் கீரை, கறிவேப்பிலை, பச்சைப் பட்டாணி, பாசிப் பருப்பு, கொண்டைக் கடலை, பாதாம் பருப்பு, சோயா பீன்ஸ், சோயா எண்ணெய், பால், தயிர், அரிசி, கோதுமை, கேழ்வரகு போன்ற உணவு வகைகள் புதிய ரத்தச் செல்கள் உருவாகவும் மூளை சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுகின்றன.

பாதாம் பருப்பு, சோயா பீன்ஸ் போன்றவற்றை அதிக அளவு உணவுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது நம் உடலில் உள்ள சோடியம், பொட்டாசியம் போன்ற உப்பு வகைகளைச் சமன் செய்து உடலைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது.

ஆழ்ந்து சிந்தித்துச் செயல்படத் தண்டுக் கீரை, கொண்டைக் கடலை முதலியவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். பால், தயிர், சத்துள்ள உணவு வகைகளால் அதிக அளவு ஆற்றல் கிடைக்கிறது. அதனால் சோம்பேறித்தனம் நீங்கிச் சுறுசுறுப்பு அதிகமாகிறது.

மூளை சுறுசுறுப்புக்கு

அரிசி, கோதுமை, கேழ்வரகு போன்ற உணவு வகைகளுடன் இரும்புச் சத்து நிறைந்துள்ள பேரீச்சம் பழம், பட்டாணி போன்றவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்வதால் கோபம், பதற்றம் போன்ற உணர்ச்சிகள் மெல்ல மெல்லக் குறைந்து நரம்பு மண்டலம் அமைதியாகி மூளை சுறுசுறுப்பாக இருக்கும்.

மாதமொரு முறை கோதுமை அல்வா சாப்பிடுவதாலும், இயற்கை இனிப்பு வகைகளைச் சாப்பிடுவதாலும் ஞாபகச் சக்தி அதிகரிக்கிறது. சிந்தனை தெளிவும் உண்டாகிறது.

திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, காரட், செர்ரி பழம் முதலியவை மூளை சுறுசுறுப்பாக இருக்க நல்ல உணவு வகைகளாகும். மூளையின் செயல்திறன் பாதிக்காதபடி இவை பராமரித்துப் பாதுகாக்கின்றன.

இவற்றால் நல்ல மனப்பாங்கு, எப்போதும் செயல்வேகத்துடன் இருப்பது, மனஉறுதியுடன் எதையும் எடுத்துச் செய்துமுடிப்பது ஆகிய ரசாயன விளைவுகளை இந்த உணவு வகைகள் ஏற்படுத்துகின்றன.

ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்தபோது, காரட் சாப்பிட்டவர்களின் அறிவாற்றலும் ஆர்வமும் சிறப்பாக இருந்தது என்கிறது வர்ஜினியா பல்கலைக்கழகத்தின் மனோதத்துவப் பேராசிரியர் பால்கோல்ட் என்பவர் நடத்திய ஆய்வின் முடிவு.

வெள்ளை பூண்டு

மனத்தை அமைதிப்படுத்தித் தன்னம்பிக்கையை உணர்த்துகிறது வெள்ளை பூண்டு, மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை.

ஞாபகச் சக்தி உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்ட நாள் உயிர் வாழ்கின்றன. எனவே, ஞாபகசக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மீன், மீன் எண்ணெய், மீன் மாத்திரை ஆகியவற்றை சாப்பிடுவது நல்லது என்கிறார் ஓரிகான் உடல்நல விஞ்ஞானப் பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறை பேராசிரியர் வில்லியம் கானர் - மூளையில் ஏற்படும் ஓட்டையைத் தையல்காரர் போல் சிறப்பாகத் தைத்து மூளையை ஒழுங்காகச் செயல்படுத்துபவை மீனும், மீன் எண்ணெயும், மீன் மாத்திரையும் என்கிறார் அவர்.

ஆதாரம்: பேராசிரியர் பா. ஆரோக்கியத் தாஸ் எழுதிய ‘சஞ்சீவியும் சலனமற்ற வாழ்வும்' என்ற உடல்நலக் கலைக் களஞ்சியம் தொகுதி-1

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x