Published : 11 Oct 2017 10:38 AM
Last Updated : 11 Oct 2017 10:38 AM
ச
ந்திரவனக் காட்டுப் பகுதி மழையின்றி வறண்டு போனது. காடு வளம் பெறும் என்று காத்திருந்த முயலுக்கும் பச்சோந்திக்கும் நம்பிக்கை போய்விட்டது.
இரண்டும் உணவின்றித் தவித்தன. இனியும் இங்கே வாழ்க்கை நடத்த முடியாது என்று புரிந்துகொண்டன.
எனவே வேறு செழிப்பான பகுதிக்குப் போய் வசிக்கலாம் என்று தீர்மானித்து, இரண்டும் புறப்பட்டன. வெகுதூரம் பயணித்த பிறகு வழியில் ஒரு குரங்கைச் சந்தித்தன.
முயலும் பச்சோந்தியும் குரங்கிடம் "அண்ணா! நாங்கள் வசித்த பகுதி வறண்டு போய்விட்டது. செழிப்பான பகுதி ஏதேனும் அருகில் இருக்கிறதா?” என்று கேட்டன.
"சற்றுத் தொலைவில் செழிப்பான காடு இருக்கிறது. நான் அங்கேதான் வசிக்கிறேன். எங்கள் சிங்க ராஜா நன்றாக ஆட்சி நடத்துகிறார். அங்கே போய் நீங்கள் வசிக்கலாம்" என்றது குரங்கு.
முயலும் பச்சோந்தியும் குரங்கு சொன்ன காட்டுக்கு வந்து சேர்ந்தன. காடு செழிப்பாகவே இருந்தது. அப்போது சூரியன் மறைந்து இருட்டிவிட்டதால் அவை இரண்டும் ஒரு மரப்பொந்தில் தங்கின.
"நாம் இன்றிரவு இங்கே தங்கிக்கொள்ளலாம். நாளை முதல் இந்தக் காட்டிலேயே ஒரு வேலை தேடிக்கொண்டு நிரந்தரமாக வாழலாம்" என்றது முயல்.
மறுநாள் முயலும் பச்சோந்தியும் ஆளுக்கொரு திசையில் வேலை தேடிச் சென்றன. மாலை இரண்டும் மரப்பொந்துக்கு வந்தன.
"பச்சோந்தி, எனக்கு வேலை கிடைத்துவிட்டது. மண்ணைத் தோண்டி கிழங்கு, கடலை எடுக்கும் வேலை" என்றது முயல்.
“அப்படியா! எனக்கு அரசவையில் அதிகாரியாக வேலை கிடைத்திருக்கிறது” என்று பொய் சொன்னது பச்சோந்தி.
மறுநாளிலிருந்து முயல் வேலைக்குச் சென்றுவந்தது. பச்சோந்தி எங்கோ கிளம்பிச் சென்றது. அது எங்கே செல்கிறது என்று யாருக்கும் தெரியாது. இப்படியாக ஒரு மாதம் கழிந்தது.
ஒருநாள் கடலைக் காட்டில் முயல் வேலை செய்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த குரங்கு, "அன்று உன்னுடன் வந்த பச்சோந்தியை மரத்தில் கட்டி வைத்திருக்கிறார்கள். என்ன நடந்தது என்று தெரியவில்லை. சிங்க ராஜா தண்டனை கொடுக்கக் காத்திருக்கிறார்” என்று சொன்னது.
அதைக் கேட்டு முயலுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
“என்ன, கட்டி வைத்திருக்கிறார்களா? அவன் என்ன தவறு செய்தான்?” என்று சொல்லிக்கொண்டே, பச்சோந்தியைக் கட்டி வைத்திருக்கும் இடத்தை நோக்கி ஓடியது முயல்.
பச்சோந்தி தலை குனிந்தபடி நின்றிருந்தது.
முயல் நேராக சிங்க ராஜாவிடம் போய், "அரசே! இவன் என் நண்பன். இவன் என்ன தவறு செய்தான்?" என்று பணிவாகக் கேட்டது.
"ஓ... இவன் உன் நண்பன்தானா? இவன் கடந்த ஒரு மாதமாக நம் காட்டில் பலரும் உழைத்துச் சேகரித்து வைத்திருக்கும் உணவுகளைத் திருடி தின்று வந்திருக்கிறான். யாராலும் இவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. காரணம் இவன் இடத்துக்குத் தகுந்தாற்போல தன் நிறத்தை மாற்றிவிடுகிறான். இன்று காய்ந்த இலைச் சருகுகளோடு சருகாக மறைந்து உணவைத் திருடி தின்றுகொண்டிருந்தான். ஆனால் திடீரென்று அடித்த காற்றில் சருகுகள் பறந்து போய்விட்டன. இவன் மாட்டிக்கொண்டான். இவனுக்குக் கசையடி கொடுக்கப் போகிறேன்" என்றது சிங்கம்.
முயல் பச்சோந்தியைத் திரும்பிப் பார்த்தது.
“நண்பா, என்னை மன்னித்துவிடு. நான் ஒரு மாதமாக வேலைக்குப் போகவில்லை. என் உடலின் நிறத்தை மாற்றும் திறமையை வைத்து நான் உணவைத் திருடித் தின்றேன். நீதான் என்னைக் காப்பாற்ற வேண்டும்” என்று அழுதது பச்சோந்தி.
பச்சோந்தியின் மீது இரக்கம் கொண்ட முயல் சிங்கத்திடம், "அரசே! இவனை மன்னித்துவிடுங்கள். இனி இவன் திருட மாட்டான். ஏதேனும் இவனுக்கு வேலை கொடுங்கள் " என்று கேட்டது.
"நீ இங்கு வந்த ஒரு மாதத்திலேயே நல்ல உழைப்பாளி என்று தெரிந்துகொண்டேன். உனக்காகப் பச்சோந்தியை மன்னிக்கிறேன். இவன் நம் உளவுத்துறையில் பணிபுரியட்டும். எதிரிகளின் கண்ணில் படாமல் மறைந்திருந்து உளவு பார்த்துவரட்டும். ஒருவன் தனக்கு இருக்கும் திறமையை நல்வழியில் பயன்படுத்தினால் எப்போதும் பேரும் புகழும் கிடைக்கும். தீய வழியில் பயன்படுத்தினால் தீமைதான் நடக்கும்" என்றது சிங்கம்.
பச்சோந்தியும் திருடுவதை விட்டுவிட்டு, உழைத்து வாழ ஆரம்பித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT