Last Updated : 30 Jul, 2014 11:36 AM

 

Published : 30 Jul 2014 11:36 AM
Last Updated : 30 Jul 2014 11:36 AM

வால் வைத்திருக்கும் பழம்

நான்தான் பேரி பேசுறேன். பேரிக்காய்ன்னு சொன்னா உங்களுக்குப் புரிஞ்சிடும். ‘ஏழைகளின் ஆப்பிள்’ன்னு என்னைப் பெருமையா கூப்பிடுவாங்க. ஆப்பிளுக்கு இணையான நானு, ஆப்பிள் மாதிரி எல்லாக் காலத்திலும் கிடைக்க மாட்டேன். ஏனென்னா, ஜூன் மாசத்துல இருந்து நவம்பர் மாசம் வரைக்கும்தான் என்னை நீங்க பார்க்க முடியும். அப்போதான் நீங்க என்னைச் சாப்பிடவும் முடியும். இந்த சீசன்ல கிடைக்கக்கூடிய என்னைப் பத்தி கொஞ்சம் சொல்றேன்:

# இனம்: என்னோட மூதாதையர்கள் ‘பைரஸ்’ என்ற இனத்தைச் சேர்ந்தவர்கள். ‘ரோசாசியே’ என்ற குடும்ப வழி வந்தவர்கள்.

# பூர்வீகம்: குளிரான, மிதமான வெப்பம் உள்ள ஊர்கள் எல்லாமே என்னோட பூர்வீகம்தான். ஐரோப்பாவில் பிறந்து ஆப்பிரிக்கா வழியா ஆசியாவுக்குள் வந்தவன் நான்.

# அதிகம் விளையும் ஊர்: இப்போதைக்கு உலகிலேயே சீனாவில்தான் என்னை அதிகமா பயிரிட்டு இருக்காங்க. இங்கு வருஷத்துக்கு 1 கோடியே 59 லட்சம் டன் உற்பத்தி செய்யுறாங்க. இந்தியாவுல 33 லட்சம் டன் உற்பத்தி செய்யுறாங்க.

# தமிழ்நாட்டில் வளரும் ஊர்: ஊட்டி, கொடைக்கானல், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மரங்களில் நிறைய தொங்குவதை நீங்கள் பார்க்கலாம்.

# தமிழ் நாட்டில் என்ன பெயர்: ஊட்டி பேரிக்காய், கொடைக்கானல் பேரிக்காய், நாட்டு பேரிக்காய், வால் பேரிக்காய், முள் பேரிக்காய், தண்ணீர் பேரிக்காய்ன்னு ருசியையும் அளவையும் வைத்து எனக்குப் பல பேரு இருக்கு.

# என்னென்ன சத்து: என்கிட்ட நிறையச் சத்து இருக்கு. கார்போ ஹைட்ரேட்டு, நார்ச் சத்து, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் இ, வைட்டமின் கே, கால்சியம், இரும்பு, மக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், புரோட்டீன்னு நிறையச் சொல்லலாம்.

# குழந்தைகளுக்கான சத்து: குறிப்பா வளரும் குழந்தைகளுக்குத் தேவையான கால்சியம், இரும்புச் சத்து என்கிட்ட நிறைய இருக்கு. அதனால குழந்தைகளோட வளர்ச்சிக்கு நானும் தேவை. வீட்ல அம்மா என்னை சாப்பிட கொடுத்தா இனி வேண்டாம்னு சொல்லா மாட்டீங்கல்ல?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x