Published : 26 Apr 2023 04:56 PM
Last Updated : 26 Apr 2023 04:56 PM
எலும்புகள் இல்லாவிட்டால் நம் உடல் நிலைகுலைந்துவிடும். உருவமும் கிடைக்காது, நகரவும் முடியாது. நம் உடலுக்கு வடிவம் கொடுப்பவை எலும்புகளே. உடலுக்கு வலிமை கொடுப்பதோடு, உடலுக்குள் இருக்கும் இதயம், நுரையீரல், மூளை போன்ற மென்மையான உறுப்புகளையும் பாதுகாக்கின்றன. மனித எலும்புக்கூடு ஏராளமான எலும்புகளால் ஆனது. இந்த எலும்புகளின் மூலமே நாம் நகர்கிறோம், குனிகிறோம், இன்னும் பல்வேறு பணிகளைச் செய்கிறோம். எலும்புகள் இல்லாவிட்டால் நாம் ஒரு புழுவைப்போல இருப்போம்.
மனிதர்கள் பிறக்கும்போது 300 எலும்புகள் காணப்படுகின்றன. வளர்ந்த பிறகு 206 எலும்புகளே இருக்கின்றன.
எலும்பு மஜ்ஜை ரத்தச் சிவப்பு அணுக்கள், பிளேட்லெட்டுகள், ரத்த வெள்ளை அணுக்களை உருவாக்குகிறது. ரத்தச் சிவப்பு அணுக்கள் உடலுக்கு ஆக்ஸிஜனைக் கொண்டு சென்று, உடலில் இருந்து கார்பன் டை ஆக்சைடை நீக்குகின்றன. ரத்த வெள்ளை அணுக்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஒரு பகுதி. அவை வைரஸ், பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. பிளேட்லெட்டுகள் ரத்தம் உறைவதற்கு உதவுகின்றன.
நமது மிகச் சிறிய எலும்பு காதில் இருக்கிறது. அது அங்கவடி (Stapes) என்று அழைக்கப்படுகிறது. உள் காதுக்கு ஒலி அலைகளை அனுப்ப, இரண்டு சிறிய எலும்புகளுடன் செயல்படுகிறது. சிறியது ஆனால், மிகவும் பயனுள்ளது.
காலின் உச்சியில் இருக்கும் தொடை எலும்புதான் மிகப் பெரிய எலும்பு. மேல் முனை இடுப்புடன் இணைகிறது, கீழ் முனை முழங்காலை இணைக்கிறது.
நம் கால்களும் கைகளும் நிறைய எலும்புகளால் ஆனவை. கால்களிலும் கைகளிலும் உடலின் பாதி எலும்புகள் உள்ளன. அதாவது 106 எலும்புகள் உள்ளன.
ஓர் எலும்பு உடைந்தால் அது மிகவும் வேதனையாக இருக்கும். அது உடையும்போது, உடல் உடனடியாக அதைச் சரிசெய்ய ஆரம்பிக்கும். அதனால்தான் அது சரியான இடத்தில் பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்த மருத்துவரிடம் செல்ல வேண்டியது முக்கியம்.
எலும்புகளை வலுவாக வைத்திருக்க, உணவில் கால்சியம் அதிகம் தேவை. பால், பாலாடைக்கட்டி, பச்சைக் காய்கறிகள், பருப்புகள் போன்ற பலவற்றில் கால்சியம் உள்ளது. உடற்பயிற்சியும் முக்கியம்.
முதுகெலும்பு மிகவும் பயனுள்ள பகுதி. இது உடலை நிமிர்த்தி, தண்டுவடத்தில் உள்ள நரம்புகளையும் பாதுகாக்கிறது. இந்த நரம்புகள் மூளைக்கும் உடலுக்கும் இடையே சமிக்ஞைகளை அனுப்புகின்றன. எதையாவது எடுக்க கையை நகர்த்த விரும்பினால், மூளை கைக்கு நகர்த்துவதற்கான சமிக்ஞையை அனுப்புகிறது.
மூட்டுகளும் எலும்புகள்தாம். முழங்கைகள், முழங்கால்கள், மணிக்கட்டுகள் உள்பட உடல் முழுவதும் நிறைய மூட்டுகள் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT