Published : 06 Sep 2017 10:23 AM
Last Updated : 06 Sep 2017 10:23 AM
யா
னைபோல் ஆடி அசைந்து ஒரு பெரிய கப்பல் எகிப்தில் உள்ள அலெக்ஸாண்ட்ரியா துறைமுகத்தில் வந்து நின்றது. அதற்காகவே காத்திருந்ததுபோல் கரையில் இருந்த வீரர்களும் அரசு அதிகாரிகளும் கப்பலில் தாவி ஏறினார்கள். சரக்குகள் வைக்கும் அறை, ஆட்கள் அமரும் இடம், கப்பலைச் செலுத்தும் இடம் என்று எதையும் விட்டுவைக்காமல் கவனமாகத் தேட ஆரம்பித்தார்கள். பல மணி நேரத்துக்குப் பிறகு அவர்கள் தேடிய விலை மதிக்க முடியாத பொருள் அகப்பட்டது. அரசு மரியாதை கொடுத்து உற்சாகத்துடன் அதை எடுத்துக்கொண்டு போனார்கள்.
இது நடந்தது கிட்டத்தட்ட 2,300 ஆண்டுகளுக்கு முன்பு. அந்தப் பொருளின் பெயர் புத்தகம். எகிப்தில் வந்து நிற்கும் ஒவ்வொரு கப்பலையும் சோதனை போட்டு புத்தகங்களைக் கண்டுபிடித்து அள்ளிக்கொண்டு போவது அப்போதைய வழக்கம். இப்படிச் சேகரிக்கப்படும் புத்தகங்களை ஒரு பெரிய கட்டிடத்தில் அடுக்கி வைத்தார்கள். மனிதர்கள் வசிப்பதற்கு எப்படி வீடு முக்கியமோ அப்படிப் புத்தகங்கள் வசிப்பதற்கு ஓர் இடம் தேவை என்று நினைத்தார் அப்போது எகிப்தை ஆண்டுவந்த முதலாம் தாலமி சோத்தர் என்ற மன்னர். உலகின் முதல் நூலகம் இப்படிதான் உருவாக ஆரம்பித்தது. அதன் பெயர், அலெக்ஸாண்ட்ரியா நூலகம்.
நூலகத்தைக் கவனித்துக்கொள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். கப்பலில் இருந்தும் பிற இடங்களில் இருந்தும் தங்களுக்கு வந்துசேரும் ஒவ்வொரு புத்தகத்தையும் இந்த அதிகாரிகள் கவனமாக ஆராய்வார்கள். ஏற்கெனவே இந்தப் பிரதி நம்மிடம் இருக்கிறதா என்று பார்ப்பார்கள். இருக்கிறது என்றால் சம்பந்தப்பட்டவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிடுவார்கள். இல்லை என்றால் மகிழ்ச்சியோடு உள்ளே அடுக்கி வைத்துவிடுவார்கள்.
சில நேரம், மிகவும் அரிதான ஒரு புத்தகம் கிடைக்கும். தொட்டால் உடைந்துவிடும் அளவுக்கு அது பழசாக இருக்கும். அதை அப்படியே உள்ளே வைப்பது ஆபத்து அல்லவா? எனவே நூலகத்தில் இருப்பவர்கள் அந்த அரிய புத்தகத்தைப் பிரித்து, ஒவ்வொரு பக்கமாகக் கவனமாகத் திருப்பி, ஒரு புதிய பிரதியை எடுப்பார்கள். பழைய புத்தகத்திலிருந்து ஒரு புதிய புத்தகம் தயார்!
சரி, எதற்காக இந்தப் புத்தக வேட்டை? அறிவுக்கு முடிவு இல்லை. எனக்குக் கிடைக்கும் புத்தகங்களைப் படித்தால் மட்டும் போதாது. பக்கத்து நாட்டில் உள்ள மக்கள் என்ன எழுதியிருக்கிறார்கள் என்று பார்க்கவேண்டும். அதையெல்லாம் வாங்கிப் படித்தாலும் போதாது. அதற்குப் பக்கத்தில் உள்ள நாடுகளில் என்ன எழுதப்படுகிறது என்று தேடவேண்டும். பிறகு அதற்கும் பக்கத்தில் உள்ள நாடுகள். இப்படியே உலகம் முழுக்கத் தேடிக்கொண்டே இருந்தால்தான் நம் அறிவு விரிவடையும். இது எகிப்தியர்களின் நம்பிக்கை.
நாடு பிடிக்கும் ஆசை கொண்ட மன்னர்கள் இப்படித்தான் இருப்பார்கள். அவர்களுக்கு ஒரு நாடு போதவே போதாது. பக்கத்து நாட்டின்மீது போர் தொடுத்து அதை இணைத்துக்கொள்வார்கள். பிறகு அதற்குப் பக்கத்திலுள்ள நாடு. பிறகு அதற்கு எதிரிலுள்ள நாடு. இப்படியே உலகம் முழுவதையும் ஆக்கிரமிக்கவேண்டும் என்று துடிப்பார்கள்.
நாட்டை விரிவாக்குவது போலவே அறிவையும் விரிவாக்கவேண்டும் என்று எகிப்தியர்கள் நினைத்ததால்தான் அலெக்ஸாண்ட்ரியா நூலகம் உருவானது. நாலாபுறமும் தேடித்தேடி லட்சக்கணக்கான புத்தகங்களைச் சேமித்து வைத்திருந்தார்கள். எல்லாமே பாபிரஸ் தாவரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட காகிதங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டவை.
படிப்பதற்கான இடம் மட்டுமல்ல அது. எல்லோரும் கூடி அமர்ந்து விவாதிக்கலாம். நீ சொல்வது தப்பு, நான் சொல்வதுதான் சரி என்று வாதம் செய்யலாம். அதை இன்னொருவர் மறுத்துச் சண்டைபோடலாம். இரண்டு பேருமே தப்பு என்று தாடி வைத்த ஒரு தாத்தா வந்து இருவரையும் சமாதானம் செய்யலாம். சுற்றி நிறைய இடம் இருக்கும், நடந்துகொண்டே பேசலாம். வண்ண மலர்த் தோட்டங்கள் இருக்கும். அப்படியே காலை நீட்டி புல்லின்மீது படுத்துக்கொண்டு கவிதை படிக்கலாம்.
இன்னோர் அறை இருந்தது. அங்கே அறிஞர்கள் உரையாற்றுவார்கள். கேட்டு மகிழலாம். அல்லது, கண்ணை மூடிக்கொண்டு தத்துவம் பற்றிச் சிந்திக்கிறேன் என்று சொல்லிவிட்டுத் தூங்கிவிடலாம். பிறகு எழுந்து வேறோர் அறைக்குச் சென்று இன்று என்ன கிடைக்கும் என்று கேட்டு வாங்கிச் சாப்பிடலாம். மொத்தத்தில் அது ஒரு தனி உலகம். ஆனால் பாவம், பிற்காலத்தில், நாடு பிடிக்கும் ஆசை கொண்ட யாரோ சிலர் அலெக்ஸாண்ட்ரியா நூலகத்தை இடித்துவிட்டார்கள். எல்லாப் புத்தகங்களும் அழிந்துவிட்டன. வரலாற்றின் மிகப் பெரிய இழப்பு இது.
ஆனாலும் இறுதியில் வென்றவர்கள் எகிப்தியர்கள்தாம். நாட்டை விரிவாக்கிக்கொண்டே போன மன்னர்கள் அனைவரும் காணாமல் போய்விட்டார்கள். அறிவை விரிவாக்கும் நூலகமோ மேலும் மேலும் வளர்ந்துகொண்டிருக்கிறது. ஓர் அலெக்ஸாண்ட்ரியா நூலகம் இருந்த இடத்தில் இன்று பல லட்சம் சிறிய அலெக்ஸாண்ட்ரியாக்கள் உலகம் முழுக்க முளைத்துவிட்டன.
அவற்றில் ஏதேனும் ஒரு நூலகத்துக்குச் சென்று உங்களுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பியுங்கள். உலகமே அமைதியாகிவிடும். உலகை வெல்ல இதுதான் ஒரே வழி என்பது ஏனோ அந்த மன்னர்களுக்குத் தெரியாமலேயே போய்விட்டது.
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT